தமிழ் மக்களின் பிரச்சினையை கூட்டமைப்பு முறையாக கையாளுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tna-tnn01-300x130

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், தேசியப்பட்டியல் எம்.பியுமான சுமந்திரன் ஜெனிவா பிரேரணை தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டையும், செயலையும் வெளிப்படுத்தி அக்கட்சியின் மத்திய செயல்குழு கூட்டத்தில் மார்ச்-01 விளக்கமளித்துள்ளார்.

அவர் அக்கூட்டத்தில் பேசிய விடயங்கள் 08.03.2015 அன்றைய நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவைளில் பல விடயங்கள் இதுவரை ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் என்பதுடன் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்காவது அவை தெரிந்திருக்குமா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

திரு. சம்பந்தனின் பிரதிநிதியாகவே தான் ஜெனிவா சென்று வந்ததாகவும், அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் சென்று உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியதாகவும், தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கு முழுவதிலிருந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற போனஸ் ஆசனத்துக்கே திரு.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் ஒரேயொரு கட்சிக்கு பின்னால் இழுபட்டு சென்றது வாக்களித்த மக்களுக்குச் செய்த மாபெரும் துரோகமாகும்.

கூட்டமைப்பின் சார்பாக வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர், கூட்டமைப்பின் தலைவரையும் வைத்துக்கொண்டு அங்கத்துவ கட்சிகளுடன் தனது பயணம் குறித்து தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அங்கு பேசப்பட்ட விடையங்களை முழுவதுமாக அங்கத்துவக்கட்சிகளின் தலைமைகளுக்குத் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து மக்களுக்கு சொல்ல வேண்டிய விடையங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தவொரு கட்சியும், அமைப்பும் இத்தகைய நடைமுறையையே கடைப்பிடிக்கும். இந்த ஜனநாயக பண்புகள் கூட்டமைப்புக்குள்ளும் இருந்திருந்தால் பல சர்ச்சைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும்.

உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்கின்றோம் என்று சுமந்திரன் சொன்னது தனக்கு தெரியாது என்றும் தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் பேரணியில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கூறிய இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசா, தனது கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் சுமந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த தீர்மானத்திற்கு ஆசி வழங்கியுள்ளார்.

த.தே.கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத போதிலும், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாகவே செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வலியுறுத்தி உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அழுத்தங்களை கொடுப்பதற்கு ஒருங்கிணைந்த ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்திருந்திருக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு தலைமை தாங்க வேண்டிய கூட்டமைபபோ பொதுஅமைப்புகள் ஏற்பாடு செய்யும் ஜனநாயக போராட்டங்களில் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகக் கலந்துகொள்கின்றது. இந்த அவலம் உலகில் விடுதலைக்காக போராடும் வேறு எந்த கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்காது.

இந்த மாதத்தில் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடங்கப்போகிறோம். விரைவில் தொடங்குவோம் என்று அறிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர், அதற்கான எந்தவித தயாரிப்பையும் மேற்கொள்ளாத நிலையில், மக்களும், பொது அமைப்புகளும் தமது பிரச்சினைகளுக்குத் தாங்களே போராட வேண்டும் என்று உணர்ந்து தமது கட்சிக்காகக் காத்திருக்காமல் தாங்களே களத்தில் இறங்கிவிட்டார்கள்.

இவ்வாறு இறங்கியவர்கள் கூட்டமைப்பின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதே என்ற ஆதங்கத்திலும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றியும் உணர்ச்சிவயப்பட்டும் சில செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டிய தமிழரசுக் கட்சியினர் போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதுடன், தனது இயலாமையை திசைதிருப்ப முயற்சிப்பது அந்தக் கட்சியின் வயதில் மூத்த தலைவவருக்கு சற்றும் பொருத்தமான செயலல்ல.

மக்கள் தங்களது பிரச்சினைகளை எந்தவொரு தனிக்கட்சியினாலும் தீர்க்க முடியாது என்ற அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சுவீகரித்துக்கொண்டனர். ஆனால் தமிழரசுக் கட்சியோ மக்கள் பிரச்சினைகளைப் பின்னுக்த் தள்ளி தனது கட்சியை முன்னிலைப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதாக எண்ணியே மக்கள் தமிழரசுக் கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்தனரே அன்றி, தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கின்றோம் என்ற எண்ணத்தினால் அல்ல என்பதை இப்பொழுதாவது அந்தக் கட்சியின் அந்தக் கட்சியின் தலைமை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணம் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள். இந்த இரண்டு தேர்தலிலும் தேர்தலுக்கு சொற்ப நாட்கள் இருந்த நிலையிலேயே கூட்டமைப்பு தனது முடிவை அறிவித்தது. இருந்தும் மக்கள் சின்னத்தைத் தெளிவாகத் தெரிந்து வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை மக்கள் நிராகரித்துக் காட்டினார்கள். கூட்டமைப்பை தனது சுயநலனுக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பாவிக்மாக இருந்தால் மக்கள் அந்தக் கட்சியையும் தூக்கியெறியத் தயங்க மாட்டார்கள் என்பதை பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இரண்டு தேர்தல்களிலும் எமக்கு முன்னமேயே நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். நாங்கள் உங்கள் முடிவை ஏற்றுக்கொள்கின்றோம் என்று இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மேடையிலும் ஊடகங்கள் மூலமும் தெரிவித்திருந்தார்.

ஆகவே மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கவில்லை என்பதை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெளிவாகின்றது. தமிழ் மக்கள் தாம் நேசிக்கும் கட்சிகளில் ஒன்றாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துச் செயற்படத் தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். ஒற்றுமையைக் குலைக்க நினைக்கும் எவருக்கும் தமிழ் மக்கள் மனத்தில் இடமில்லை என்பதை அவர்கள் பல்வேறு அரங்குகளில் நிரூபித்து வருகின்றனர்.

மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலேயே, முன்னாள் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கும் இன்றைய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்களும் கூட்டமைப்பின் ஐக்கியத்தையும், கட்டுக்கோப்பையும் இறுக்கமாக வைத்துக்கொள்ளுமாறு தலைவர் சம்பந்தனிடம் கூறியுள்ளார்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்குமாறு வெளிச்சக்திகள் அறிவுரை கூறும் அளவுக்கு தலைமைகளின் நிலைமை இருப்பது தமிழ் மக்களுக்கு சாபக்கேடாக உள்ளது.

இனியாவது கூட்டமைப்பை இறுக்கமானதாகவும், கட்டுக்கோப்பானதாகவும், சட்டவலுவுள்ளதாகவும் மாற்றியமைத்து செயல்பட்டு, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பற்றுறுதிகொண்ட தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கு தமிழரசுக்கட்சி தடையின்றி ஒத்துழைப்பு வழங்குமா? அல்லது மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு கட்சியை பாதுகாக்கும் செயலைத்தான் தொடர்ந்தும் செய்யப்போகிறதா?

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் வகைதொகையற்ற இழப்புகளுக்கு முகம்கொடுத்தும் சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் எமது மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கு கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக் பதிவு செய்யப்பட்டு கட்டுக்கோப்புடைய கட்சியாக எமது உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பாரிய வரலாற்றுக்கடமையாகும்.

இல்லையேல் தமது புதிய தலைமையை தமிழ் மக்கள் தமக்குள்ளேயே தேடிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இது போராட்டத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். அதற்கான முழுப்பழியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே சுமக்க வேண்டி நேரிடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit