6-வது முறை முதல்-அமைச்சராக வர விருப்பம் இல்லை கருணாநிதி பரபரப்பு பேச்சு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

6-வது முறை முதல்- அமைச்சராக வர விருப்பம் இல்லை என்றும், தி.மு.க.வை கட்டிக்காக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றும் மு.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கருணாநிதி பேசினார்.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, வி.பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கி, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வை காப்பாற்ற வேண்டும்

தி.மு.க.விலே யாராக இருந்தாலும் அவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை, ஆடம்பரத்திற்காகவோ, அல்லது எங்களுக்கு எத்தனை கார்கள் இருக்கின்றன என்று காட்டுவதற்காகவோ இல்லாமல், எங்களால் இயன்றதை நாங்கள் தமிழர்களுக்கு, திராவிடப்பெருங்குடி மக்களுக்கு, ஏழையெளிய மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, தொழிலாள தோழர்களுக்குச் செய்வோம், செய்துகொண்டிருப்போம்,

அதனுடைய எடுத்துக்காட்டாகத் தான், சென்னை மாநகரத்திலே இன்றைக்கு ஜெ. அன்பழகனின் முயற்சியாலும், அவருடைய தொண்டரணியைச் சேர்ந்தவர்களுடைய முயற்சியாலும் அரும்பாடு பட்டு ஒருகோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருள்களைச்சேகரித்து, அவற்றை யெல்லாம் சாதாரண சாமான்ய மக்களின் பிரதிநிதிகளுக்கு வழங்குகின்ற இந்த விழாவிற்கு என்னையும் தலைமையேற்கச் செய்து, அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியிலேஎனக்கும் பங்கு உண்டு, அந்த மகிழ்ச்சிப் பெரு வெள்ளத்திலே நானும் மூழ்கித்திளைக்கிறேன் என்ற வகையில், இந்த மைதானத்திலே பெரும் சிறப்பாக இந்த விழாவினைக்கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த விழாவிலே ஒரேயொரு கருத்தை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன்.

எதிரிக்கு விட்டுக் கொடுக்க முடியாது

எனக்கு முன்னால் பேசியவர் குறிப்பிட்டதைப்போல ஆறாவது முறையாக நம்முடைய கருணாநிதி, முதல்-அமைச்சராக வரவேண்டுமென்று சொன்னாரே, அந்த ஆசை அல்ல எனக்கு; அந்த விழைவு என்னைப்பிடித்து உந்தித் தள்ளவில்லை. நான்படுகின்ற ஆசையெல்லாம், கொண்டுள்ள விருப்பமெல்லாம், தி.மு.க.வை கட்டிக்காக்க வேண்டும். கடைசி தொண்டர் உள்ள வரை தி.மு.க.வை எதிரிக்கு விட்டுக்கொடுக்க முடியாது.

சமுதாயத்திலே, பொருளாதாரத்திலே இன்றைக்கு வாடி வதங்கிக்கிடக்கின்ற தோழர்கள், ஏழையெளிய மக்களின் பிரதிநிதிகள் எல்லாம் வாழுவதற்கு இந்தக் தி.மு.க.வை விட்டால் வேறு வழி இல்லை என்பதை உணர்ந்திருப்போர், தி.மு.க.வை சுய நலத்திற்காவது, இந்தச்சமுதாயத்தின் நலன்களுக்காகவாவது, காப்பாற்ற வேண்டும். அப்படிக்காப்பாற்றுவது தான் இந்த இயக்கத்தை வாழ வைப்பது தான் நம்முடைய தலையாய கடமை என்ற உணர்வோடு பாடுபடவேண்டும்.

நன்றி மறந்தவர்கள்

இல்லையேல் நாம் நன்றி மறந்தவர்களாக ஆவோம். இந்தக்கழகம் தான் நம்மை ஆளாக்கியது. இந்தக் கழகம் தான் நமக்கு “சூத்திரப்” பட்டத்தை விலக்கி, நீ தமிழன், திராவிடன், திராவிடச் சமுதாயத்திலே ஓர் அங்கம், நீஅண்ணாவின் தம்பி, பாரதிதாசனின் மாணவன் என்ற இந்தப் பெருமைகள் எல்லாம் இன்றைக்கு நமக்கு இருக்கிறது என்றால், இந்தப்பெருமையோடு நாம் கடைசி வரையிலே இந்தச் சமுதாயத்திற்கு உழைத்தோம் என்கிற பெருமையோடு திகழ வேண்டுமேயானால், நமக்குப்பிறகும் நம்முடைய பெயர், நம்முடைய உழைப்பின் பெயரால் – நம்முடைய செல்வாக்கின் பெயரால்-தமிழகத்திலே நீடித்து நிலைத்திருக்குமேயானால்-அது தான் நாம் இந்த இயக்கத்தின் காரணமாக இந்தக்கட்சியின் காரணமாக திராவிடச்சமுதாயத்திற்கு தருகின்ற பரிசு, பெரிய கொடை என்பதை உங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு நாள், இருநாள் ஒரு விழாவைக் கொண்டாடி முடித்து விட்டால் நம்முடைய கடமை தீர்ந்ததாகக் கருதக் கூடாது. நாம் நீண்ட பெரும் கடமைஆற்றுவதற்காக தமிழகத்திலே பிறந்திருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. திராவிடம் வாழ-அந்தத்திராவிடம் விடுதலை பெற-அந்தத்திராவிடத்திற்குநாமெல்லாம் நம்முடைய நன்றியைக்காட்ட தொடர்ந்து உழைத்திட வேண்டும்.

பாடுபட வேண்டும்

அண்ணாவின் தம்பிகளாகிய நாம்-பெரியாரின் மாணவர்களாகிய நாம் – அதைக் கட்டிக் காக்க – அவர்கள் சொன்ன சுயமரியாதை உணர்வை விட்டுத் தராமல் என்றென்றும் சுயமரியாதையோடு வாழ்வோம், சுயமரியாதை கொள் தோழா – என்று தோழர்களுக்குச்சொல்வோம், நண்பர்களுக்கு எடுத்துக் காட்டுவோம். அப்படிப்பட்ட வீரர்களாக, நாம் நடமாடுவோம்.

இன்னும் ஆயிரக்கணக்கான சிங்கங்கள் திராவிட இயக்கத்திலே இணைந்திடுக-இணைந்திடும் அந்த சிங்கங்களையெல்லாம் இணைத்துக்கொண்டு அவர்கள் வழியில் நாம் காட்டுகின்ற நம்முடைய திராவிட இயக்க வழியில் அவர்களும் நாமும் இணைந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அழகு திருநாவுக்கரசு, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாண்டிசெல்வம், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit