கருப்பு பண விவகாரம்: ‘யாரையும் தப்பவிட மாட்டோம்; பழிவாங்கவும் மாட்டோம்’

பிறப்பு : - இறப்பு :

‘கருப்பு பண விவகாரத்தில் யாரையும் தப்பவிட மாட்டோம், பழிவாங்கவும் மாட்டோம்’’ என்று பிரதமர் மோடி கூறினார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை மீது நடைபெற்ற விவாதத்துக்கு, பிரதமர் மோடி நேற்று பதில் அளித்து பேசினார்.

கருப்பு பண விவகாரம்
பிரதமர் மோடி தனது பதில் உரையில், கருப்பு பண விவகாரம் குறித்து பேசுகையில், ‘‘சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, 3 ஆண்டுகள் ஆனபின்னரும் முந்தைய அரசு அதை செய்யவில்லை. ஆனால் நாங்கள் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, எங்கள் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்தோம்’’ என குறிப்பிட்டார்.

மேலும், ‘‘கருப்பு பணத்தை எந்த விதத்திலும் கொண்டு வந்து சேர்ப்பது என்ற பாதையில் இருந்து விலக மாட்டோம். யாரையும் இதில் தப்பவும் விட மாட்டோம். அதே நேரத்தில் பழி வாங்கும் விதத்திலும் செயல்பட மாட்டோம். கருப்பு பணத்தில் தொடர்புடையவர்கள், நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என குறிப்பிட்டார். கருப்பு பண விவகாரத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, பிற அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் மனம் திறந்து பாராட்டினார்.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டம் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘சில குறிப்பிட்ட விஷயங்களில் எனக்கு விவேகம் இல்லை என நீங்கள் (எதிர்க்கட்சிகள்) கூறலாம். ஆனால் குறைந்த பட்சம் எனக்கு அரசியல் விவேகம் உண்டு. நான் எப்படி இந்த திட்டத்தை நிறுத்தி விட முடியும்? நாங்கள் மதிப்புடனும், கண்ணியத்துடனும் அந்த திட்டத்தை தொடருவோம். ஏனென்றால் இது உங்கள் தோல்விகளின் வாழும் நினைவுச்சின்னம் அல்லவா?’’ என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

அவர் ஊழலை பற்றி பேசும்போது, ஊழல் நாட்டையே அழித்து விட்டதாக குறிப்பிட்டார். ‘‘குற்றச்சாட்டுகளையும், மறுப்புகளையும் கூறுவதை விட்டு விட்டு நீங்கள் (எதிர்க்கட்சிகள்) ஊழல் ஒழிப்பில், ஒத்துழைக்க வேண்டும். ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். அரசியல் விவாதத்தோடு இது அடங்கி விடக்கூடாது. நாம் குற்றம்சாட்டுவதை மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்தால், ஊழல் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் அதையே தொடர்வார்கள்’’ என கூறினார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு
தூய்மை இந்தியா திட்டம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘தூய்மை என்பது பொதுமக்களின் சுகாதாரத்தில், பெண்களின் கண்ணியத்தில் நேரடி தொடர்பு உடையதாகும். அது அரசின் செயல்திட்டத்தில் தொடரும்’’ என குறிப்பிட்டார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பற்றி அவர் பேசும்போது, ‘‘இதில் அரசின் கஜானாவுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளித்திருக்கிறார். அதன்பின்னர் இழப்பே ஏற்படவில்லை என்றும் (காங்கிரசால்) கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் 18, 19 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. எனவே தலைமை கணக்கு தணிக்கையர் நிலைப்பாடு சரியானதுதான் என்பது இதில் நிரூபணம் ஆகி உள்ளது’’ என்றார்.

வெளிநாட்டு பயணம்
தான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுக்கும் பிரதமர் மோடி பதில் அளிக்க தவறவில்லை.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘முந்தைய பிரதமர்களும் இத்தகைய பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். தேவைப்படும்போது, எதிர்காலத்திலும் இப்படி மேற்கொள்வார்கள். நான் வெளிநாட்டில் இருந்தாலும்கூட, என் எண்ணம் எல்லாம், அந்த நாடுகள் அடைந்துள்ள சாதனைகளிலிருந்து இந்திய மக்கள் பலன் அடையத்தக்க விதத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருந்தது’’ என குறிப்பிட்டார்.

கூட்டாட்சி அமைப்பின் அடிப்படையில் மாநிலங்களுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு விருப்பம் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அத்துடன், இப்போதுதான் மாநிலங்கள் முதல் முறையாக மத்திய அரசின் 42 சதவீத வருவாயைப் பெறுவதாகவும், மாநில அரசுகளின் கஜானாக்களில் அவ்வளவு பணத்தை வைக்க இடமே இல்லாத நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வகுப்புவாதம்
நாட்டில் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிற வகுப்புவாதம் பற்றியும் பிரதமர் மோடி தனது பதில் உரையில் உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார். அப்போது அவர், ‘‘வகுப்புவாத அச்சுறுத்தல்களை எங்கள் அரசு உறுதியுடன் கையாளும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க விட மாட்டோம். மதத்தின் அடிப்படையில் பேதம் பார்க்க விட மாட்டோம். நமது நாட்டின் அடிப்படை அம்சமே, பன்முகத்தன்மைதான். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அதைத் தொடர்வோம். நாங்கள் ஒருமைப்பாட்டுக்கு உரியவர்கள்’’ என்றார்.

தொடர்ந்து பேசும்போது, ‘‘வகுப்புவாத விஷத்தால், மதத்தின் பேரிலான பிரிவினைகளால் இந்த நாடு எவ்வளவோ பாதிப்புகளை சந்தித்து விட்டது. ஆனால் இப்போது எல்லோருக்கும் உரித்தான தருணம் வந்து விட்டது. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொது எதிரி என்றால் அது வறுமைதான்’’ என கூறினார்.

வாயடைக்கச்செய்தார்
தனது அரசு, ஏழைகளுக்கான அரசு என்பதை அவர் மீண்டும், மீண்டும் வலியுறுத்தினார்.

பொதுவாக பிரதமர் பதிலுரையின்போது எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம் என அமளியில் ஈடுபடுவது உண்டு. ஆனால் பிரதமர் மோடி தனது விவேகமான பேச்சின் மூலம் எதிர்க்கட்சிகளைப் பேச வாயற்று செய்து விட்டார். அவர் தனது உரையை, ‘‘நாங்கள் விமர்சனங்களை சாதகமாகவே எடுத்துக்கொள்கிறோம்’’ என தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தனது மீதும், அரசின் மீதும் உள்ள விமர்சனங்களுக்கு பதில் அளித்ததுடன், அரசின் சாதனைகளையும் எடுத்துரைக்க ஒரு வாய்ப்பாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அளித்த பதில் உரையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திக்கொண்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit