செல்போன் ‘ரோமிங்’ கட்டணத்தை 80 சதவீதம் வரை குறைக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
ரோமிங் கட்டணம் குறைகிறது
செல்போன் ரோமிங் கட்டணத்தை குறைக்க தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (‘டிராய்’) தீர்மானித்து இருக்கிறது. ரோமிங் அழைப்புகளுக்கான கட்டணத்தை 35 சதவீதமும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கான கட்டணத்தை 80 சதவீதம் வரையிலும் குறைக்க வகை செய்யும் கட்டண வரைவு திருத்த அறிக்கையை தயாரித்து இருக்கிறது.
தற்போது ரோமிங்கில் உள்ளூர் அழைப்புக்கான கட்டணம் நிமிடத்துக்கு 1 ரூபாய் ஆகும். இதை 65 காசாக குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல் எஸ்.டி.டி. அழைப்புக்கான கட்டணத்தை நிமிடத்துக்கு 1 ரூபாய் 50 காசில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படுகிறது.
வரும் அழைப்புகளுக்கான (‘இன்கமிங் கால்ஸ்’) கட்டணம் நிமிடத்துக்கு 75 காசில் இருந்து 45 காசாக குறைகிறது.
எஸ்.எம்.எஸ். கட்டணம்
ரோமிங்கில் எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ். கட்டணத்தை 1 ரூபாய் 50 காசில் இருந்து 25 காசாக குறைக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் உள்ளூர் எஸ்.எம்.எஸ். கட்டணம் 1 ரூபாயில் இருந்து 20 காசாக குறைகிறது.
இந்த கட்டண குறைப்பு தொடர்பாக வருகிற மார்ச் 13–ந்தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு, செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்த பின்னர் ரோமிங் கட்டண குறைப்பு பற்றிய இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.