முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா வெற்றி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

முத்தரப்புத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 112 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்தியாவும் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் பெர்த்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 39.1 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆரோன் பின்ச் ரன் எடுக்காமலேயே ஆன்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 12 ரன்களுடன் ஆன்டர்சன் வீச்சில் வெளியேறி உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றினார்.

கேப்டன் ஜார்ஜ் பெய்லி 2 ரன்களுடனும், டெஸ்ட் அணியின் கேப்டனும், அண்மைக்காலமாக அற்புதமாக விளையாடிவருபவருமான ஸ்டீவ் ஸ்மித் 40 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலியா 60 ரன்களுக்கு 4 விக்கெட் என தத்தளித்த நிலையில் ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல், மிச்செல் மார்ஷ் ஆகியோர் நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.

அண்மைக்காலமாக பெரிய அளவில் ரன் குவிக்காத மேக்ஸ்வெல், இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

98 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் விளாசிய மேக்ஸ்வெல், சதம் அடிக்காமல் பிராட் வீச்சில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த மார்ஷ், 68 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்தனர்.

ஃபாக்னர் அதிரடி: கடைசி கட்டங்களில் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர் அதிரடியாக விளையாடினார். 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 4 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார்.

கடைசி 8 ஓவர்களில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் 78 ரன்கள் விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். கிறிஸ் வோக்ஸ் 10 ஓவர்களில் 89 ரன்களை வாரி வழங்கினார்.

இங்கிலாந்து சரிவு: 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் இயான் பெல் 8 ரன்களுடனும், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அற்புதமாக விளையாடி வெற்றி தேடித் தந்த ஜேம்ஸ் டெய்லர் 4 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அந்த சரிவிலிருந்து இங்கிலாந்து மீளவேயில்லை. அந்த அணியின் அதிகபட்சமாக ரவி போபாரா நிதானமாக விளையாடி 59 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் திணறடித்த கிளென் மேக்ஸ்வேல், தனது சுழற் பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கலங்கவைத்தார். 9 ஓவர்களில் 46 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

வேகப் பந்துவீச்சாளர் மிச்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை விரைவுபடுத்தினார். ஜோஷ் ஹேஸில்வுட் தனது பங்குக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியை அடுத்து, உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா தன்னம்பிக்கையுடன் களம் இறங்கும்.

தொடர் நாயகன் ஸ்டார்க்: 95 ரன்கள் குவித்ததுடன், 4 விக்கெட் கைப்பற்றிய மேக்ஸ்வெல் இறுதி ஆட்டத்தின் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முத்தரப்புத் தொடரின் நாயகனாக மிச்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்

ஆஸ்திரேலியா: 50 ஓவர்களில் 278-8 (மேக்ஸ்வெல் 95, மிச்செல் மார்ஷ் 60, ஃபாக்னர் 50 நாட் அவுட், பிராட் 3-55, ஆன்டர்சன் 2-38).

இங்கிலாந்து: 39.1 ஓவர்களில் 166 (போபாரா 33, மேக்ஸ்வெல் 4-46, ஜான்சன் 3-27).

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit