செரீனா 6 ஆவது முறையாக சாம்பியன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவாவை தோற்கடித்து ஆறாவது முறையாக பட்டம் வென்றார். அத்துடன், 19ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று, அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக போட்டித் தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள வீராங்கனைகள் இறுதிச் சுற்றில் பலப்பரீட்சை நடத்தினர். செரீனாவும், ஷரபோவாவும் இதற்கு முன் மோதிய ஆட்டங்களில் 16-2 என செரீனாவே அதிக முறை வெற்றி பெற்றிருந்தார். எனவே, இந்த முறையும் செரீனா பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, 6-3, 7-6(5) என்ற நேர் செட்களில் செரீனா வெற்றி பெற்றார்.

அபாரமான சர்வ், பந்தை வேகமாக திருப்பி அனுப்புதல் என ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார் செரீனா. 203 கி.மீ. வேகத்தில் செரீனா வீசிய சர்வ்களை ஷரபோவா எதிர்கொள்ளத் தடுமாறினார். ஆனால், பேஸ்லைனுக்கு உள்ளே நின்றிருந்த செரீனா, ஷரபோவாவின் ஷாட்டுகள் எங்கே வரும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்ப பதிலடி கொடுத்தார். இதனால், 47 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை செரீனா எளிதாகக் கைப்பற்றினார். முன்னதாக, முதல் செட்டில் 3-2 என்ற கேம் கணக்கில் செரீனா முன்னிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. 15 நிமிட இடைவெளிக்குப் பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முதல் செட் போல அல்லாமல் இரண்டாவது செட்டில் ஷரபோவா சிறிது போராடினார். இரண்டாவது செட்டின்போது இரண்டு முறை செரீனாவின் மேட்ச் பாயின்ட்டுகளை ஷரபோவா தடுத்தார். இந்த செட் டை பிரேக்கர் வரை நீண்டது. டை பிரேக்கரில் 6-5 என செரீனா முன்னிலையில் இருந்தபோது, ஒரு ஏஸ் சர்வ் வீசி கொண்டாட்டத்துக்குத் தயாரானார். ஆனால், நடுவர் பந்து வலையில் பட்டதாக அறிவித்தார். இருப்பினும், அடுத்ததாக ஏஸ் சர்வ் வீசினார். இந்த முறை நடுவரின் முடிவு வரும் வரை காத்திருந்து, பின்னர் துள்ளிக் குதித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் மூலம் செரீனா தனது 19ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தடைகளைக் கடந்து: இந்தத் தொடர் முழுவதுமே செரீனா சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தார். இறுதி ஆட்டத்தின்போதும் கூட அவர் இருமிக் கொண்டிருந்தார்.

செரீனா வென்ற கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்

ஆஸ்திரேலிய ஓபன் (2015, 2010, 2009, 2007, 2005, 2003)

பிரெஞ்ச் ஓபன் (2013, 2002)

விம்பிள்டன் (2012, 2010, 2009, 2003, 2002)

அமெரிக்க ஓபன் (2014, 2013, 2012, 2008, 2002, 1999)

மகளிர் பிரிவில் அதிகமுறை கிராண்ட் ஸ்லாம் வென்றவர்கள்

ஸ்டெபி கிராஃப் (ஜெர்மனி) – 22

செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – 19

கிறிஸ் எவர்ட் (அமெரிக்கா),

மார்ட்டினா நவரத்திலோவா (அமெரிக்கா) – 18

மார்கரெட் கோர்ட் (ஆஸ்திரேலியா) – 11

மோனிகா செலஸ் (அமெரிக்கா) – 9

பில்லீ ஜீன் கிங் (அமெரிக்கா) – 8

வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா),

இவான் கூலகாங் கெüலி (ஆஸ்திரேலியா),

ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்) – 7

மரியா ஷரபோவா (ரஷியா),

மார்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) – 5

கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றவர்கள்

2015 – செரீனா (அமெரிக்கா)

2014 – லீ நா (சீனா)

2013 – அசரென்கா (பெலாரஸ்)

2012 – அசரென்கா (பெலாரஸ்)

2011 – கிம் கிளைஸ்டெர்ஸ் (பெல்ஜியம்)

2010 – செரீனா (அமெரிக்கா)

2009 – செரீனா (அமெரிக்கா)

2008 – ஷரபோவா (ரஷியா)

2007 – செரீனா (அமெரிக்கா)

2006 – எமிலி மெüரஸ்மோ (பிரான்ஸ்)

ஆட்ட விவரம்

செரீனா ஷரபோவா

18 ஏஸ் சர்வ் 5

4 டபுள் ஃபால்ட்ஸ் 4

38 வின்னர்ஸ் 21

25 அன்ஃபோர்ஸ்டு எரர்ஸ் 15

3/7 பிரேக் பாயின்ட் 1/4

76 மொத்த புள்ளிகள் 64

பரிசுத் தொகை

சாம்பியன் – ரூ. 14.94 கோடி

இரண்டாவது இடம் பிடித்தவருக்கு – ரூ.7.47 கோடி

செட் விவரம்

செரீனா – ஷரபோவா

6-3, 7-6(5)

இன்றைய ஆட்டம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம்

ஜோகோவிச் (செர்பியா) – முர்ரே (பிரிட்டன்)

நேரம்: பிற்பகல் 2 மணி

டிவி: சோனி சிக்ஸ்

ஆரம்பத்தில் எனது குடும்பம் செல்வச் செழிப்பானது அல்ல. ஆனால், எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. களத்துக்கு டென்னிஸ் ராக்கெட், பந்துடன் சென்று நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொள்வேன். அவ்வளவுதான் என் பணி. இந்தத் தொடர் முழுவதும் இருமல், சளியால் பாதிக்கப்பட்டேன். இப்போதைக்கு நன்கு ஓய்வெடுக்க (தூங்க) வேண்டும்.

செரீனா, அமெரிக்கா

செரீனா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வரலாறு படைத்த அவருக்கு வாழ்த்துகள். நீண்ட காலமாக நான் அவரைத் தோற்கடித்ததே இல்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் அவருக்கு எதிராக ஆடுவதை விரும்புவேன். ஏனெனில், அவர் சிறந்த வீராங்கனை.

ஷரபோவா, ரஷியா.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit