இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து: இந்தியா ஏமாற்றம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது. மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்த இங்கிலாந்து அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி விட்டதால், அடுத்த அணி யார் என்பதை முடிவு செய்யும் அறிவிக்கப்படாத அரையிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை பெர்த் நகரில் நடைபெற்றது.

இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரஹானேவும், ஷிகர் தவனும் “நிதானமாக’ ஆட்டத்தைத் தொடக்கினர். அதனால், 10 ஓவர்களில் இந்திய அணி 35 ரன்களையே எடுத்தது. தவன் சில ஷாட்களை நேர்த்தியாக அடித்தாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, தவன் பேட்டில் பட்டு “எட்ஜ்’ ஆகி விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கையில் தஞ்சமடைந்தது.

மறுமுனையில் தனது எட்டாவது அரைசதத்தைக் கடந்த ரஹானே பொறுப்புடன் ஆடினார். ஆனால், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி நிதானமின்றி இருந்தார். அவர் டித்த பந்தை “லாங் ஆஃப்’ திசையில் இருந்த ஜோ ரூட் ஓடிக்கொண்டே பிடிக்க, கோலி நடையைக் கட்ட வேண்டியதாயிற்று. வந்ததும் வராததுமாக ரெய்னாவும் அதிரடியாக ஆட முற்பட்டு 1 ரன்னில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து அம்பாதி ராயுடுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக இருந்த ரஹானேவும், ஸ்டீவன் ஃபின் வீசிய பந்தில் ஏமாற, இந்தியா 136 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஹெல்மெட்டில் அடி: அணியைக் கரை சேர்ப்பார் எனக் கருதப்பட்ட தோனியும் ஏமாற்றினார். முன்னதாக, அசுர வேகத்தில் ஆண்டர்சன் வீசிய பந்து தோனியின் ஹெல்மெட்டில் பட்டது.

அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் இல்லை. இந்த பந்தை பெளன்சராக வீசிய ஆண்டர்சன், சிறிது நேரத்தில் ஒரு “ஸ்லோ டெலிவரி’ வீச, அது தோனியின் பேடில் பட்டது. இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்ய நடுவரும் கையை உயர்த்தினார். இதனால், தோனி பெவிலியன் திரும்ப வேண்டியதாயிற்று.

அடுத்ததாக ஆல் ரவுண்டர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் ஆகிய மூவரும் சொல்லி வைத்தாற்போல, யாரும் பத்து ரன்களைக் கூட கடக்கவில்லை.

இதிலும் குறிப்பாக, பொறுப்பே இல்லாமல் ஜடேஜா இறங்கி, தேவையில்லாத ஷாட் அடித்த விக்கெட்டைப் பறிகொடுத்து, ரசிகர்களை எரிச்சலடைய வைத்தார்.

ஷமி விளாசல்: முன்னணி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் செல்ல, கடைசி விக்கெட்டுக்கு முகமது ஷமியும், மொஹித் ஷர்மாவும் இணைந்து 35 ரன்கள் சேர்த்தனர். 18 பந்துகளில் சிக்ஸர் உள்பட 25 ரன்கள் அடித்த முகமது ஷமி கடைசியாக ஆட்டமிழந்தார்.

இதனால், இந்திய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவ் ஃபின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பேட்டிங்கில் விட்டதை பெளலிங்கில் பிடிக்கலாம் என்ற இந்திய அணியின் முயற்சிக்கு, ஆரம்பத்தில் பலன் கிடைத்தது. தொடக்க வீரர்களான இயான் பெல், அதிரடி வீரர் மொயீன் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, ஜோ ரூட், மோர்கன், ரவி போபரா ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் திருப்தி அடைந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 66 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆனால், மூன்றாவது இடத்தில் இறங்கிய ஜேம்ஸ் டெய்லர் நங்கூரம் பாய்ச்சினார். அவருக்கு ஜோஸ் பட்லர் ஒத்துழைக்க இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி நடைபோட்டது. ஒரு கட்டத்தில் ரஹானேவின் ரன் அவுட் முயற்சி பலனில்லாமல் போக, அப்போதே வெற்றி இங்கிலாந்து பக்கம் சாய்ந்தது.

ஒரு வழியாக டெய்லர் 82 ரன்களிலும், பட்லர் 67 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

டெய்லர் 122 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகளே அடித்தார் என்றாலும், தேவையான நேரத்தில் நிலையாக நின்றது இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

முடிவில் இங்கிலாந்து 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் டெய்லர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுட்டுரையில்

இந்திய அணி தோல்வியடைந்ததும் சில ரசிகர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, “இதெல்லாம் சகஜமப்பா…’ எனும் ரீதியில் சுட்டுரையில் வழக்கம்போல ஜாலியான கருத்துகளை முன்வைத்தனர். அதில் சில…

*டெய்லர்னு பேரு வச்சவனெல்லாம் இந்தியாவ கிழி கிழின்னு கிழிச்சிர்றாங்க…

*ஹலோ சீனிவாசனா… இந்தியாவுல அடுத்த சீரிஸ் எப்ப வைப்பீங்க….

*இப்படி மொக்கையா ஆடுறோம்னு அசட்டு தைரியத்துல வேர்ல்டு கப் வராதீங்க. அங்க ரொம்ப உக்கிரமா இருப்போம். லி பை இந்திய டீம்.

*புடிச்சு வைங்கப்பா… வேர்ல்டு கப்புக்கு வரலேன்னு ரிட்டையர்ட்மண்ட் குடுத்துறப்போறாப்ல…

*திரும்ப இந்தியா போய்டலாமா, இல்ல அந்த அஞ்சு ஆட்டத்தையும் முடிச்சிட்டு போவோமான்னு பாத்து சொல்லு!!! (லிதோனி மைண்ட்வாய்ஸ்)

*கோலி: என்னண்ணே இப்பிடி ஆயிடுச்சி?

தோனி: விட்றா, விட்றா… போற வழில ஒரு நாச்சியப்பன் பாத்திரக்கடை இல்லாமலா போயிரும்…!!!

*தோனி: இன்னுமா இந்த ஊரு நம்மல நம்புது

ஜடேஜா: அது அவங்க தலைவிதி தலைவா…

*கங்குலி: இது டீமா

தோனி: என்ன…?

கங்குலி: இல்ல இதுதான் வேர்ல்ட் கப் விளையாடப் போற டீமான்னு கேட்டேன்.

நாங்கள் பேட் செய்யத் தொடங்கியபோது, புதிய பந்தில் நன்றாக ஆட முடியும் என கருதினேன். ஆனால், இங்கிலாந்து அணியின் நேர்த்தியான பந்துவீச்சும், எங்கள் பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட்களும் தோல்விக்கு வழி வகுத்து விட்டது. இன்னும் 40 முதல் 50 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

பந்துவீச்சு, பேட்டிங் இரண்டையும் கருத்தில் கொண்டு அணியைத் தேர்வு செய்ய வேண்டும். அஸ்வின், ஜடேஜா அல்லது அஸ்வின், அக்ஷர் படேல் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் நன்றாக இருக்கும். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்பது பேட்டிங் வரிசையை வலுவிழக்கச் செய்து விடும். இது ஒரு தர்மசங்கடமான நிலை. எனவே பின்வரிசை பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க வேண்டும்.

தோனி, இந்திய கேப்டன்.

ஸ்கோர் போர்டு

இந்தியா ரன் பந்து

ரஹானே (சி) பட்லர் (பி) ஃபின் 73 101

தவன் (சி) பட்லர் (பி) வோக்ஸ் 38 65

கோலி (சி) ரூட் (பி) அலி 8 19

ரெய்னா (சி) வோக்ஸ் (பி) அலி 1 5

ராயுடு (சி) பட்லர் (பி) ஸ்டூவர்ட் 12 17

தோனி எல்பிடபுள்யூ (பி) ஆண்டர்சன் 17 32

எஸ் பின்னி (சி) பெல் (பி) ஃபின் 7 12

ஜடேஜா (சி) ஃபின் (பி) ஸ்டூவர்ட் 5 9

அக்ஷர் (சி) பெல் (பி) ஃபின் 1 5

மொஹித் நாட் அவுட் 7 6

முகமது ஷமி (சி) பட்லர் (பி) வோக்ஸ் 25 18

உதிரிகள் 6

மொத்தம் (ஆல்அவுட், 48.1 ஓவர்கள்) 200

பந்து வீச்சு

ஜேம்ஸ் ஆண்டர்சன் 9-1-24-1

ஸ்டூவர்ட் பிராட் 10-1-56-2

மொயீன் அலி 10-0-35-2

கிறிஸ் வோக்ஸ் 9.1-1-47-2

ஸ்டீவன் ஃபின் 10-0-36-3

இங்கிலாந்து ரன் பந்து

இயான் பெல் எல்பிடபுள்யூ (பி) மொஹித்

மொயீன் அலி (சி) ராயுடு (பி) அக்ஷர்

ஜேம்ஸ் டெய்லர் (சி) பின்னி (பி) மொஹித்

ஜோ ரூட் (சி) – (பி) பின்னி

மோர்கன் (சி) தவன் (பி) பின்னி

ரவி போபரா (சி) ஜடேஜா (பி) பின்னி

பட்லர் (சி) ராயுடு (பி) முகமது ஷமி

கிறிஸ் வோக்ஸ் நாட் அவுட்

ஸ்டூவர்ட் பிராட் நாட் அவுட்

உதிரிகள்

மொத்தம் (7 விக்கெட்டுகள், 46.5 ஓவர்கள்) 201

பந்து வீச்சு

எஸ்.பின்னி 8-0-33-3

ஜடேஜா 9.5-0-62-0

மொஹித் ஷர்மா 10-1-36-2

முகமது ஷமி 9-0-31-1

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*