ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு ஜோகோவிச், செரீனா தகுதி பெயஸ், சானியா ஜோடிகளும் அசத்தல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ், வாவ்ரிங்கா உள்ளிட்டோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.

ஜோகோவிச்–வாவ்ரிங்கா
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 8–ம் நிலை வீரர் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். ‘சர்வீஸ் மன்னன்’ என்று அழைக்கப்படும் ராவ்னிக் அதிகபட்சமாக மணிக்கு 229 கிலோ மீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டாலும், ஜோகோவிச்சின் நேர்த்தியான ஷாட்டுகளுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 2 மணி நேரம் நடந்த ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச் 7–6 (7–5), 6–4, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த தொடரில் இதுவரை ஒரு செட்டையும் இழக்காத ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரைஇறுதிக்கு தகுதி பெறுவது இது 25–வது முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 5–ம் நிலை வீரர் ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதினார். முதல் இரு செட்டை ஓரளவு எளிதாக கைப்பற்றிய வாவ்ரிங்கா 3–வது செட்டில் மட்டும் டைபிரேக்கர் வரை மல்லுகட்ட வேண்டியிருந்தது. மொத்தம் 20 ஏஸ் சர்வீஸ்கள் வீசி பிரமிக்க வைத்த வாவ்ரிங்கா 6–3, 6–4, 7–6 (8–6) என்ற நேர் செட்டில் நிஷிகோரியை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் நிஷிகோரியிடம் கால்இறுதியில் அடைந்த தோல்விக்கு வாவ்ரிங்கா பழிதீர்த்துக் கொண்டார்.

சவாலுக்கு தயார்
அரைஇறுதியில் வாவ்ரிங்கா–ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார்கள். இது பற்றி ஜோகோவிச் கூறும் போது, ‘கால்இறுதி ஆட்டத்தில் இருந்து நிறைய நம்பிக்கையை அடுத்த ஆட்டத்திற்கு எடுத்துச் செல்கிறேன். அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் வாவ்ரிங்காவுடன் மோத உள்ளேன். 2013, 2014–ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் எங்கள் இருவரிடையிலான ஆட்டம் 5 செட் வரை நீடித்தது. எனவே சவாலுக்கு தயாராக இருக்கிறேன்’ என்றார்.

வாவ்ரிங்கா கூறுகையில், ‘கடந்த ஆண்டை விட இப்போது நன்றாக விளையாடி வருவதாக நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறேன். முன்பை விட ஆக்ரோஷமாக ஆடுகிறேன். இந்த ஆட்டத்தில் மூலம் மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளேன்’ என்றார்.

தங்கை வெற்றி; அக்கா தோல்வி
பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 10–ம் நிலை வீராங்கனை டொமினிகா சிபுல்கோவாவுடன் (சுலோவக்கியா) மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ் 6–2, 6–2 என்ற நேர் செட்டில் 2014–ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆடியவரான சிபுல்கோவாவை விரட்டியடித்தார். 65 நிமிடங்களில் ஆட்டத்தை நிறைவு செய்த முன்னாள் சாம்பியனான செரீனா ஆஸ்திரேலிய ஓபனில் 2010–ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதியை எட்டியிருக்கிறார்.

அதே சமயம் செரீனாவின் அக்காவான வீனஸ் வில்லியம்ஸ், தன்னை விட 15 வயது குறைந்த சகநாட்டவரான மாடிசன் கீஸ்சுடன் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். 1 மணி 55 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் 19 வயதான மாடிசன் கீஸ் 6–3, 4–6, 6–4 என்ற செட்டில் வெற்றியை ருசித்து, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. முதலாவது அரைஇறுதியில் மரிய ஷரபோவா (ரஷியா)– மகரோவா (ரஷியா) மோதுகிறார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கும். சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதைத் தொடர்ந்து செரீனா–மாடிசன் இடையிலான 2–வது அரைஇறுதி நடைபெறும்.

சானியா, பெயஸ் அபாரம்
கலப்பு இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் சானியா மிர்சா (இந்தியா)–புருனோ சோரஸ் (பிரேசில்) ஜோடி 6–2, 6–2 என்ற நேர் செட்டில் கேசி டெலாக்குவா–ஜான் பீர்ஸ் (ஆஸ்திரேலியா) இணையை துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது. இந்த ஆட்டம் 53 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

மற்றொரு கால்இறுதியில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் – சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–1 என்ற நேர் செட்டில் ஆண்ட்ரியா ஹலவக்கோவா (செக்குடியரசு)– அலெக்சாண்டர் பெயா (ஆஸ்திரியா) இணையை 52 நிமிடத்தில் வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*