முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. சிட்னியில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்பதால், இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, பிப்ரவரி 1ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று விட்டது.
இந்திய அணி முதலிரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே, டபுள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தத் தொடரின் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றி பெற்றால் மட்டும் போதாது, போனஸ் புள்ளியும் பெற வேண்டும் என்பதால், தோனி தலைமையிலான இந்திய அணி நெருக்கடியில் உள்ளது.
காயத்தால் அவதிப்பட்ட இஷாந்த் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் குணமடைந்திருப்பது இந்திய அணிக்கு ஆறுதலான விஷயம். ஆனால், ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங் செய்யுமளவு தேறி விட்டாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் கவனத்துக்குரியது. ரோஹித் ஷர்மா தசைப்பிடிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதால், ரஹானேவுடன் ஷிகர் தவன் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதி.
விராட் கோலி நான்காவது இடத்தில் களமிறங்கியது சலசலப்பை கிளப்பியது. என்றாலும், அவர் மூன்று, நான்கு ஆகிய இரு இடங்களிலும் தன்னை நிரூபித்துள்ளார். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, விராட் கோலியை எந்த இடத்திலும் களமிறங்கும் வகையிலான சூழலை உருவாக்க அணி நிர்வாகம் விரும்புவதாகத் தெரிகிறது.
மிடில் ஆர்டரில் பின் வரிசையில் களமிறங்குபவர்கள், கடைசி நேரத்தில் அதிக ரன்களைக் குவிப்பவராக இருக்க வேண்டும் என்று, ஓய்வு அறையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த முறை ஸ்டூவர்ட் பின்னி, தனது தேர்வை நிரூபித்திருந்தார். அதோடு, தோனியும் இரண்டு முறை அவரது பந்துவீச்சு திறமையைப் புகழ்ந்திருந்தார் என்பதால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பின்னிக்கு இந்த ஆட்டத்திலும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை எந்த பிரச்னையும் இல்லை.
முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும், அதற்கு மாற்றாக களமிறங்குபவர்களும் தங்கள் இருப்பைப் பதிவு செய்து விடுகின்றனர். தடைக்குப் பின் களமிறங்கும் ஜார்ஜ் பெய்லி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான மிச்செல் ஜான்சன், ஜோஸ் ஹேஸில்வுட் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனாலும், அவர்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவது உறுதிப்படுத்தப்படவில்லை.
நேரம்: காலை 8.50
டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,3
கேப்டன்கள் கருத்து…
கடந்த இரண்டு ஆட்டங்களில் முடிந்தவரை, சிறந்த வீரர்களுடனேயே களமிறங்கினோம். ஆனால், சில வீரர்கள் காயமடைந்தனர். முடிந்தவரை 11 பேர் கொண்ட சிறந்த அணியாக ஜொலிக்க முயற்சிப்போம். அதே நேரத்தில், ஆட்டங்களில் இருந்து நேர்மறையான விஷயங்களைப் பெறுவதும் முக்கியம்.
காயத்தில் இருக்கும் ஒரு வீரருக்கு மேலும் நெருக்கடி கொடுத்து வெற்றி பெற்றிட முடியும். ஆனால், உலகக் கோப்பைக்கு அவரால் முழு அளவில் தயாராக முடியாது.
உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், வீரர்கள் முழு உடற் தகுதியுடன் இருப்பதும் அவசியம்.
தோனி, இந்திய கேப்டன்
ஆஸ்திரேலிய தினமான நாளை (திங்கள்கிழமை) ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டனாக இருப்பது பெருமை அளிக்கும் விஷயம். எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவித்து வருகின்றனர். அதேபோல, நானும் எனது பேட்டிங் திறனை மேம்படுத்த வேண்டும்.
ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலிய கேப்டன்.