காலிறுதியில் நடால், முர்ரே, ஷரபோவா

பிறப்பு : - இறப்பு :

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் முன்னேறினர்.

மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள நடால், போட்டித் தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர் கொண்டார். கடும் போராட்டத்துக்குப் பின் 7-5, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் நடால் வெற்றி பெற்றார்.

இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் டிம் ஸ்மிசெக் – நடால் மோதிய ஆட்டம் ஐந்து செட் வரை நீண்டது. ஆனால், நடால், காலிறுதிக்கு முந்தைய சுற்றையே கடினமான ஆட்டம் என்று தெரிவித்தார்.

“இக்கட்டான தருணத்துக்குப் பின் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. இன்று எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அநேகமாக, இங்கு இதுவரையிலும் நடந்த ஆட்டங்களில் இதுதான் சிறந்த ஆட்டம்” என்றார். கடந்த ஆண்டு இறுதிச் சுற்றில் வாவ்ரிங்காவிடம் தோல்வியடைந்த நடால், எட்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கிர்ஜியாஸ் முன்னேற்றம்: தரவரிசையில் 53ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸ், கிராண்ட் ஸ்லாம் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்த

இத்தாலியின் ஆண்ட்ரஸ் செப்பியை எதிர் கொண்டார். ஐந்து செட்கள் வரை நீண்ட இந்த ஆட்டத்தில் கிர்ஜியாஸ் 5-7, 4-6, 6-3, 7-6(5), 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ராக்கெட் உடைப்பு: போட்டித் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் மோதிய ஆட்டம் சுவராஸ்யமாக இருந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போராடி, முதலிரண்டு செட்களை பகிர்ந்து கொண்டனர். மூன்றாவது செட்டை முர்ரே வசப்படுத்த, நான்காவது செட் சூடு பிடித்தது.

இதில், முர்ரே நேர்த்தியாக செயல்பட ஆட்டம் அவர் வசமானது. முடிவில் 6-4, 6-7(5), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த டிமிட்ரோவ், ராக்கெட்டை கீழே போட்டு உடைத்தார். மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டாமிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஷரபோவா வெற்றி: மகளிர் பிரிவில், போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா, சீனாவின் பெங் ஷுவாய் மோதினர். இதில் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ஷரபோவா வெற்றி பெற்றார். ருமேனியாவின் சிமோனா ஹாலேப், பெலாரஸின் யனினா விக்மெய்ர் மோதிய ஆட்டத்தில் ஹாலேப் 6-4, 6-2 என்ற

நேர் செட்களில் வென்றார். மற்ற ஆட்டங்கலில் ரஷியாவின் மகரோவா, கனடாவின் பெளசார்டு ஆகியோரும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

பயஸ் ஜோடி முன்னேற்றம்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் மாசா ஜோவனாவேச், சாம் தாம்ப்சன் ஜோடியை 6-2, 7-6 (2) என்ற நேர் செட்களில் தோற்கடித்தது.

ஆனால், இந்தியாவின் ரோஹன் போபண்ணா, செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா ஜோடி, கிறிஸ்டியானா மிளாடெனோவிச், டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit