எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்? நவம்பர் மாத ராசிபலன்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேஷம்:

நவம்பர் மாதம் முழுவதும் சுபரான சுக்கிரன் ராசியைப் பார்க்கும் நிலையில் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். நவம்பர் மேஷத்திற்கு நன்மைகளை தருகின்ற மாதம். இளைய பருவத்தினருக்கு முன்னேற்றங்கள் இருக்கும். ராசிநாதனின் வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. வெளிநாட்டில் இருக்கும் மேஷத்தினருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு.

மாதம் முழுவதும் ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. சூரியன் நீசமாவதால் தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடுமாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். அந்நிய இன,மத,மொழிக்காரர்கள் உதவுவார்கள். நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு.

5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி மதியம் 1.42 மணி முதல் 10-ம் தேதி இரவு 9.59 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி நிலையில் இருப்பதால் ரிஷபத்திற்கு இது நல்ல மாதமே. ஆயினும் அவர் ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதாலும், அஷ்டமச் சனி நடப்பதாலும் கிடைக்கின்ற நன்மைகள் எதையும் அனுபவிக்க இயலாத தடைகள் இருக்கும். ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்கின்ற மனக் கலக்கங்கள் இருக்கும். கடும் முயற்சிகளுக்கு பின்பே வெற்றிகள் வரும். வேலை, தொழில் இடங்களில் கவனமாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள். மாத முற்பகுதியில் எதிலும் நல்ல பலன்களும், பிற்பகுதியில் அதிக முயற்சியும் தேவைப்படும்.

குருபகவான் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் நன்மைகள் உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது நல்ல மாதம். சுக்கிரன் சுப வலுவாக உள்ளதால் திறமையை வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவருக்கு நன்மைகள் இருக்கும்.

கூட்டுத் தொழிலில் கசப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அஷ்டமச் சனி நடப்பதால் பங்கு பிரிப்பது, தனியே போவது போன்றவைகள் இப்போது கூடாது. தேவையின்றி எவருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சகோதரர்கள், பங்காளி போன்ற உறவினர்களிடம் விரோதம் வரும் மாதம் இது. அலுவலகத்திலும் உங்களுடைய பேச்சால் சில வீண் விரோதங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்தொல்லை எல்லை மீறாது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சூரியன் நீசபங்கமாக இருப்பதால் தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வீரகள். ஆனால் தொழிலில் காலூன்றுவீர்கள்.

1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி இரவு 9.59 முதல் 13-ம் தேதி காலை 9.21 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

மிதுனம் :

ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும் வலுவான அமைப்பில் இருப்பதால் இது மிதுனத்திற்கு யோகமான மாதம்தான். சிலருக்கு பொருளாதார மேன்மையும் இருக்கும். சகாய ஸ்தானாதிபதி சூரியன் நீசபங்க அமைப்பில் இருப்பதால் தேவைப்படும் நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உங்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் உதவக்கூடிய தகுதியுடனும், மனதுடனும் இருப்பார்கள். வேலை இடங்களில் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். பணப் பற்றாக்குறை வராது என்பதால் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுவீர்கள்.

அரசு ஊழியர்கள், தனியார்துறையினர், நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில் புரிவோர், பொதுவாழ்க்கையில் இருப்போர், மக்கள் பிரதிநிதிகள் போன்றவருக்கு பணவரவும், அந்தஸ்து, கௌரவமும் கிடைக்கும். நிலுவையில் இருந்த சொத்துப் பிரச்னை சாதகமாக தீரும். தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற முடியும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஜாலியான அனுபவங்கள் இருக்கும். படிப்பைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்வீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். சமுதாயத்தில் அனைத்து தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை இருக்கும்.

குடும்பத்துப் பிரச்னைகளில் பொறுத்துப் போவதன் மூலம் பிரச்னை இருக்காது என்பதால் பொறுமை காட்டுங்கள். குரு ஆறில் மறைவதால் குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சிலருக்கு கடல் தாண்டிப் போகும் பயணங்கள் இருக்கும். டிராவல்ஸ் தொழில் நடத்துபவர்கள், டிரைவர் போன்ற இயக்கும் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்மைகளைத் தரும். சிலருக்கு ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டு. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும் தொழில் சிறக்கும். திருமணம் ஆகாதவருக்கு உறுதி ஆகும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் இருக்கும்.

2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம்தேதி காலை 9.21 முதல் 15-ம் தேதி இரவு 10.17 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.

கடகம்:

நவம்பர் மாதம் கடகராசிக்காரர்களின் குடும்பத்தில் கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. குருபகவான் ஐந்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. ஐந்தாமிடக் குருவால் கடந்த வருடங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இனி நிறைவேற்றிக் கொள்வீர்கள். கடந்த சனிப் பெயர்ச்சியின் மூலமாக சனிபகவான் யோகம் தரும் அமைப்பில் வந்திருப்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் சிறப்பான ஒரு நிலையை அடையப் போகிறீர்கள்.

சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வெகு நாட்களுக்கு பிறகு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் வலுப் பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. கலைஞர்களுக்கு இது நல்லகாலமாக அமையும். சிறு கலைஞர்கள் பிரபலமாவற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது.

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் கடகராசிக்காரர்கள் உற்சாகத்துடனும், செயல் திறனுடனும் காணப்படுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதமே. காவல்துறையினருக்கு திருப்பங்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். தந்தையைப் பற்றியோ தந்தைவழி உறவினர்கள் பற்றியோ கவலைகள் வரும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும்.

1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி இரவு 10.17 முதல் 18-ம் தேதி காலை 10.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

சிம்மம்:

நவம்பர் மாத முற்பகுதியில் ராசிநாதன் சூரியன் சுபர்களான புதன், சுக்கிரனுடன் இணைந்து மூன்றாமிடத்தில் நீசமாக இருக்கிறார். அவர் நீசநிலையில் இருந்தாலும் சுக்கிரனால் நீசபங்கம் அடைவதால் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. அதேநேரத்தில் எந்த ஒரு காரியமும் கடும் முயற்சிக்கு பிறகுதான் நிறைவேறும். மாத பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் நீச நிலை விலகி நட்பு பலம் பெறுவதும் குருவுடன் இணைவதும் நல்ல அமைப்பு என்பதால் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு எதிலும் வெற்றி கிடைக்கும்.

ஆறில் செவ்வாய், கேது இணைந்திருப்பதால் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் செல்வீர்கள். பிறந்தநாட்டை விட்டு வேறுநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பெண்களால் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்லவிதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம்.

வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலை மாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நல்ல பணவரவு இருக்கும் என்பதால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விடுவீர்கள். அதிலும் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி பெறுவது நல்ல அமைப்பு. வீண்செலவு செய்யாதீர்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி காலை 10.03 முதல் 20-ம் தேதி மாலை 6.33 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி:

தனாதிபதி சுக்கிரன் தன ஸ்தானத்தில் மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் பிறக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கின்ற மாதம் இது. கடந்த சில வருடங்களாக கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். இதுவரை ஐந்தில் உச்சமாக இருந்த செவ்வாய் ஆறாமிடத்திற்கு மாறுவதால் உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் கடன்களும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில் நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இனி தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இது சிக்கல் இல்லாத வாரம்தான். இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். செவ்வாய் ஆறில் மறைவதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி வரும் என்பது உறுதி. எனவே தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் என்றும் உங்களுக்கு சந்தோசம்தான். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர் பார்த்த ஒரு தொகை கிடைக்கும்.

பெண்கள் விஷயத்தில் சற்றுத் தள்ளியே இருங்கள். சிலருக்கு தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். அரசுவேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். மனைவிக்கு கழுத்து நகை வாங்கித் தருவீர்கள். வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. தனஸ்தானம் வலுவடைவதால் மறைமுகமான வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 20-ம் தேதி அதிகாலை 6.33 முதல் 22-ம் தேதி இரவு 11.35 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

துலாம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சியாக இருப்பதால் துலாம் ராசிக்காரர்களின் மனோபலம் அதிகரிக்கும் மாதம் இது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது பிறக்கும். உங்களில் சிலர் பணியிடங்களில் நல்ல பெயர் பெறுவீர்கள். குடும்பாதிபதி செவ்வாய் ஐந்திற்கு மாறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. இளைய பருவத்தினருக்கு எதிர்காலத்தை பற்றிய பயங்கள் விலகும்.

துலாத்திற்கு தொட்டது துலங்கும் நேரம் ஆரம்பித்திருக்கிறது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவியின் வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும். தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய டீலர்ஷிப் எடுத்தல், முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் தற்போது பக்கத்தில் வருவார்கள். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். பிள்ளைகளால் இனி நல்ல சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். பொதுவாழ்க்கை, ஊடகம் பத்திரிக்கை துறை, கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதம். நீண்டநாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள். தந்தை வழியிலும் செலவுகள் உண்டு. பூர்வீகச்சொத்தில் ஏதாவது மனக் கஷ்டங்கள் வரலாம். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். எதுவும் எல்லை மீறாது. கடவுள் துணையிருப்பார்.

2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 11.35 முதல் 25-ம் தேதி அதிகாலை 2.19 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

விருச்சிகம்:

சனியின் ஆதிக்கம் தொண்ணூறு சதவிகிதம் விலகி விட்டதால் விருச்சிகத்தினர் இனி வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆகப் போகிறீர்கள். அவரவர்களின் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றபடி சனியின் கொடுமைகள் விலகிக் கொண்டிருக்கிறது. இனிமேல் புது மனிதன் ஆகப் போகிறீர்கள். கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் முழுமையாக தீரப் போகிறது. விருச்சிகத்தினர் இரண்டு ஏழரைச்சனிக்குடைய கெடுபலன்களை சந்தித்து விட்டீர்கள். இளம் வயதினர் தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு சோதனைகள் இருந்து வந்தன. துன்பங்களை அனுபவித்த அனைவரும் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள்.

நவம்பர் மாதம் எவ்வித கெடுபலன்களும் நடக்காத மாதமாக இருக்கும். ராசியில் குரு இருப்பது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வலிமையை தரும். கடந்த ஐந்து வருடங்களாக வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சனைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தீர்வுக்கான பாதைகள் தெரிய ஆரம்பிக்கும். நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புக்கள் தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள் கெடுபலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள்.

நீண்டநாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். இந்த மாதம் முழுவதும் நல்லபலன்கள் மட்டும்தான் இருக்கும். ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். செவ்வாய் நல்லநிலையில் இருக்கும் அடுத்த சில வாரங்களில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி அதிகாலை 2.19 முதல் 27-ம் தேதி அதிகாலை 4.16 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

தனுசு:

எட்டில் இருக்கும் ராகு ஸ்பெகுலேஷன் துறைகளில் ஆசையைத் தூண்டி விட்டு சிக்கலில் மாட்டி விடக் கூடும். தனுசு ராசியினர் இந்த மாதம் கண்களையும், காதுகளையும் கூர் தீட்டி வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள். சூதாட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரவிருப்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்கவேண்டும். ஜென்மச் சனி நடப்பதால் பதவியில் சிக்கல்கள் வரலாம். ஒரு சிலர் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களை அனுபவிப்பீர்கள். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்கிற பழமொழியை மனதில் கொள்பவர்களுக்கு சஞ்சலங்கள் இருக்காது. குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போகவேண்டி இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சனியின் ஆதிக்கத்தினால் சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். எதிலும் நிதானமாக இருங்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும்.

இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. செவ்வாய் நல்ல அமைப்பில் இருப்பதால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். ராசியில் சனி இருப்பதால் பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள். காரணமின்றி கோபம் வரும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. மாத பிற்பகுதியில் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய கடன் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். செல்போன் பத்திரம்.

4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி அதிகாலை 4.16 முதல் 29-ம் தேதி காலை 6.38 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மகரம்:

சுக்கிரன் பத்தாமிடத்தில் வலுப்பெற்ற நிலையில் இருப்பதால் மகர ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும் மாதம் இது. ஆனால் ஏழரைச் சனி நடப்பதால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் வீணடிப்பீர்கள். உங்களின் கவனம் சிதறும் மாதம் இது. தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இளைஞர்கள் எதிர்காலத்திற்குரிய விஷயங்களை செய்யாமல் வயதுக்குரிய காதல் போன்ற விஷயங்களில் சக்தியை இழப்பீர்கள். எதிலும் அக்கறையுடன் இருக்க வேண்டிய மாதம் இது. எந்த ஒரு விஷயத்திலும் இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். காரணம் எதுவுமின்றி எதையாவது நினைத்து கலக்கமடைவீர்கள்.

ராசிநாதனுக்கு வீடு கொடுத்த குரு லாபத்தில் இருப்பதால் எதுவும் கைமீறிப் போகாமல் சமாளிப்பீர்கள்.. சிலருக்கு அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு காரியத்தடையும், சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விரயங்கள் வரும். சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம். தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். குருபகவான் லாபத்தில் இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.

திருமணமாகாத மகர ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும் நேரம் இது. பொதுவாக மகரத்தினர் களையாக அழகாக இருப்பார்கள். அழகுணர்ச்சி மிக்கவர்கள் நீங்கள். நீண்ட நாட்களாக திருமணம் தாமதமாகி வருபவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் வாழ்க்கைத் துணையோடு இணைவீர்கள். சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நடுத்தரவயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண்அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். சிலருக்கு இளைய சகோதர்களால் வீண் விரயங்களும் செலவுகளும் இருக்கும். வியாபாரிகள் மந்தமான ஒரு நிலையை சந்திப்பீர்கள்.

1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி அதிகாலை 1.16 முதல் 4-ம் தேதி அதிகாலை 4.26 வரையும் மாத இறுதியில் 29-ம் தேதி காலை 6.38 முதல் டிசம்பர் 1-ம் தேதி காலை 10.04 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

கும்பம்:

சுக்கிரன் வலுவாக ஆட்சி நிலையில் இருப்பதால் இது கும்பத்தினருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம்தான். கூடவே ராசிநாதன் சனியும் புதனும் பலமாக இருப்பதால் நவம்பர் உங்களுக்கு கெடுதல்களை செய்யாது. வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். வீட்டில் சுபகாரியம் உண்டு.

நவம்பர் மாதம் முழுவதும் ராசியில் செவ்வாய் அமர்வதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். ஆறில் இருக்கும் ராகு நல்ல பலன்களைச் செய்வார் என்பதால் மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். விரயத்தில் இருக்கும் கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத் தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை தருவார். சுக்கிரன் ஸ்தம்பன நிலையில் இருப்பதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். குடும்பத்தில் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

சிலருக்கு முதல் திருமண தொடர்புகளின் மூலம் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல கடந்த இரண்டு வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் இனிமேல் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அறிமுகமற்றவர்களை எதிலும் நம்பி விடாதீர்கள். புதிய நண்பர்களால் பிரச்னைகள் வரும். கவனம்.

1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி அதிகாலை 4.26 முதல் 6-ம் தேதி காலை 8.13 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

மீனம்:

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்போது மீனத்திற்குப் பொருந்தும். சிலவாரங்களாகவே மீனத்தினர் நன்றாகத்தான் இருக்கிறீர்கள். அது இன்னும் நீடிக்கும். சூரியனின் நீசபங்க வலுவால் இனிமேல் தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீர தொடங்கும். இளையவர்களுக்கு வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும்.

நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இது நல்ல மாதமாக அமையும். கலைத்துறையினர், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், ரெக்கவரி வெரிபிகேஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும்.

வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது பொன்னான நேரம் என்பதால் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. மாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். இனிமேல் மீன ராசிக்காரர்களுக்கு பெரிய துன்பங்கள் எதுவுமே வரப்போவது இல்லை. பத்தாம் வீட்டோன் வலுப் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். மனதிற்குள் சோகத்தை கொண்டிருந்தவர்கள் இனி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள்.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம்தேதி காலை 8.13 முதல் 8-ம் தேதி மதியம் 1.42 வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*