இடைவிடாது கத்திய பூனை… இடிந்து விழுந்த சுவர்… நன்றியுடன் கண்ணீர் வடித்த குடும்பம்

பிறப்பு : - இறப்பு :

4 பேர் உயிரையும் ஒரு பூனை காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகணும். வத்தலகுண்டு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வத்தலக்குண்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும் அவ்வப்போது முடங்கி வருகிறது. இங்குள்ள மேலகோவில்பட்டியை சேர்ந்த தம்பதி கோவிந்தன் – ராஜாத்தி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அதோடு ஒரு பூனையும் உள்ளது. இந்த பூனை மீது குடும்பத்தார்க்கு கொள்ளை பிரியம். அதனால் பாசமாக வளர்த்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. விடிகாலை 5 மணி இருக்கும். அந்த பூனை திடீரென கத்த தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக பூனையின் சத்தத்தை கேட்டு தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்தார்கள். வெளியில் நின்று பூனை கத்தியதால் குடும்பத்தார்களும் வீட்டை விட்டு வெளியே பதறியபடியே ஓடிவந்தார்கள்.

வெளியே வந்து பூனையை பார்த்தால், பூனை வீட்டை பார்த்து கத்தி கொண்டிருந்தது. ஒன்றுமே புரியாமல் குடும்பத்தினர் வீட்டையும், பூனையையும் மாறி மாறி பார்த்து விழித்தனர். அப்போது அந்த ஓட்டு வீட்டின் சுவர் அடுத்த வினாடியே இடிந்து விழுந்தது. ஏற்கனவே பூனை கத்தியதில் அதிர்ச்சியடைந்திருந்த குடும்பத்தினர், வீடு இடிந்ததை கண்ணால் கண்டு மேலும் அதிர்ந்து போனார்கள்.

அதிலிருந்து மீள அவர்களால் முடியவே இல்லை. ஆனால் சத்தம் போட்டு எழுப்பி தங்களை வெளியில் வரவழைத்து காப்பாற்றிய பூனையை பார்த்து கண்கலங்கி அழுதனர். இத்தனைக்கும் 10 மாதமாகத்தான் இந்த பூனையை வளர்த்து வருகிறார்களாம்.தங்கள் நன்றியை பலவாறாக அதற்கு காட்டினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாகவே, விலங்குகளுக்கு புலன்கள் கூர்மையாக இருக்கும். மனிதர்களைவிட சில நிமிடங்கள் முன்கூட்டியே பேரிடர்களை விலங்குகளால் உணர முடியும் என்கிறார்கள். குறிப்பாக பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கு மனிதர்களின் நியூரான்களை விட ஒலி அளவுகளை விரைவாக உணரும் தன்மை உடையது என்று அறிவியல் சொல்கிறது. ஜப்பானில் நிறைய பூகம்பம் ஏற்படுவதால், அங்கு வீடுகளில் பூனை வளர்ப்பார்கள். இந்த பூனை வினோதமாக சத்தமிட்டு, உருண்டு புரண்டு தன் அச்சத்தை வெளிப்படுத்தும். அதை வைத்து பூகம்பத்திலிருந்து அந்த மக்கள் தப்பித்து விடுவார்களாம்.

செல்லப்பிராணி என்றாலே அது நாயும், பூனையும்தான் முதலிடமாக இருந்தது. வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காலங்களில் நம்ம மக்கள் அதிகமாக நம்பியது இந்த பூனைகளைத்தான். ஆனாலும் பூனை குறுக்கே செல்வதால் நாம் நினைக்கும் காரியம், அல்லது வெளியில் செல்லும் காரியம் கெட்டுவிடும் என்ற அபசகுண எண்ணங்கள் பரவலாக தொடங்கியது. அதனாலேயே பூனை வளர்ப்பது குறைந்துவிட்டது. மனிதர்கள்தான் இதையெல்லாம் வகுத்து வைத்து பிராணிகளை பிரித்தும், ஒதுக்கியும் வருகிறார்கள். ஆனால் இந்த பிராணிகள் தங்கள் இயல்பிலிருந்து ஒருபோதும் மாறுவது இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit