கிழக்கின் புதிய முதலமைச்சர் தெரிவு: எட்டப்பட வேண்டிய இணக்கம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்கிற சர்ச்சை கடந்த சில நாட்களாகவே தொடர்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் மத்தியில் ஆட்சியமைத்துள்ள நிலையில், சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரீன் பெர்ணான்டோ பதவியேற்றிருக்கின்றார். கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்னுடைய பெரும்பான்னையை இழந்துள்ளது. இதனால், ஆட்சி மாற்றமொன்றுக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையில் ஆட்சி அமைப்பதா அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பதா என்கிற குழப்பமே நீடிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முஸ்லிம் காங்கிரஸூக்கும் கிழக்கின் புதிய முதலமைச்சர் தெரிவு தொடர்பில் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன. ஆனாலும், முடிவின்றி இழுபறியாகவே நிலைமை நீடிக்கின்றது.

2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மொத்தமுள்ள 37 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 (12+2 போனஸ்) ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது.

அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸை கூட்டாக ஆட்சியமைக்க அழைத்தது. முதலமைச்சர் பதவியையும் முஸ்லிம் காங்கிரஸிற்கே வழங்குவதாகவும் தெரிவித்தது. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சில சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டுவிட்டு எந்தவித பதிலையும் வழங்காத முஸ்லிம் காங்கிரஸ், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து ஆட்சி அமைத்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும்- முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையில் மொத்தமுள்ள 5 வருட ஆட்சிக்காலத்தில் 2½ வருடங்கள் என்கிற கணக்கில் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வது என்ற இணக்கப்பாடும் காணப்பட்டிருந்தது. அதன்பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அப்துல் மஜித் முஹமட் நஜீப் முதலமைச்சரானார் என்பது கடந்த கால வரலாறு.

இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களோ கிழக்கு மாகாண சபையில் மொத்தமுள்ள 37 உறுப்பினர்களில் 15 முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்றார்கள் ஆகவே தார்மீக ரீதியில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அத்தோடு, வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது. அங்கு தமிழ் முதலமைச்சர் இருக்கின்றார். எனவே, கிழக்கிலாவது முஸ்லிம் முதலமைச்சருக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோருகின்றது.

ஏனினும், முஸ்லிம் காங்கிரஸை விட அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2012ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியை வழங்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் முன்வந்தது. ஆனால், அப்போது, அதனை மரியாதை செய்யாத முஸ்லிம் காங்கிரஸ் இப்போது, விட்டுக்கொடுப்பு நல்லெண்ணம் பற்றிப் பேசுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த இழுபறியின் தொடர்ச்சியாக விடயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களைச் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார்.

கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் சிறுபான்மையினரை பெரும்பான்மையாகக் கொண்டது. தனித்து தமிழ்த் தரப்போ, முஸ்லிம் தரப்போ ஆட்சியமைக்கும் சூழல் இல்லை. அப்படியான நிலையில், இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு என்பது மிகவும் அவசியம். அந்த இணக்கப்பாடு நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட வேண்டும். மாறாக, குறுகிய கால முரண்பாடுகள் என்பது ஏற்கனவே தமிழ்- முஸ்லிம் சமூகத்தினருக்கிடையில் காணப்படும் இடைவெளியை இன்னும் அதிகப்படுத்தி விடும். அதனைக் கருத்தில் கொண்டு கிழக்கின் புதிய முதலமைச்சர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் முடிவினை எடுக்க வேண்டும்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*