விருச்சிகத்திற்கு நல்ல காலம் பிறந்தாச்சு… ஏனைய ராசிகளுக்கு எப்படி? புரட்டாசி தமிழ் மாத பலன்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேஷம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். குருவின் பரிபூரண பார்வை பதிவது ஒருபுறம், ராசிநாதன் செவ்வாய் மற்றும் சகாய ஸ்தானாதிபதி புதன் ஆகிய 2 கிரகங்களும் உச்சம் பெற்றிருப்பது மற்றொரு புறம் என சிறப்பு மிகு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது. அதுமட்டுமின்றி செவ்வாய், புதன் நீங்கலாக தன சப்தமாதிபதியான சுக்ரனும் குருவோடு இணைந்து சொந்தவீட்டில் சஞ்சரிக்கிறார். 9 கிரகங்களில் 4 கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. எனவே வருமானம் திருப்திகரமாக இருக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். விரோதிகள் விலகுவர். வியாபார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 9, 12–க்கு அதிபதியான குரு பகவான் அக்டோபர் 3–ந் தேதி வரை உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே வியாழ நோக்கம் பலமாக உள்ளது. மணவிழா, மணிவிழா, முத்துவிழா, பவளவிழா, கட்டிடத் திறப்பு விழா போன்ற நிகழ்வுகள் அடுக்கடுக்காக நடைபெறப்போகிறது.

அக்டோபர் 4–ந் தேதி குருப்பெயர்ச்சி நடக்கிறது. ஆனால் அவர் உங்களின் ராசிக்கு அஷ்டமத்தில் அல்லவா அடியெடுத்து வைக்கிறார். எனவே குருப்பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீண் வம்பு, வழக்குகள் வந்து சேரலாம். பல பணிகள் அரைகுறையாக நிற்கலாம். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே குருவிற்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

சனி பகவான் 9–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 9–க்கு அதிபதியான குரு பகவான் பகை கிரகமான சுக்ரனோடு இணைந்து களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை கவனமாக கையாளுவது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 9–ல் இருக்கும் சனியால் பொன், பொருட்கள் குவியும். சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது நல்லது. தொழில் ஸ்தானத்தில் கேது இருப்பதால் நாக தோ‌ஷ பரிகாரங்களை மேற்கொள்வது நன்மை தரும்.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் புதன் கன்னி ராசியில் உச்சம் பெற்றும், அஸ்தமனம் பெற்றும் இருக்கிறார். அக்டோபர் 4–ந் தேதி மீண்டும் வலிமை பெறுகிறார். துலாத்தில் உள்ள சுக்ரனோடு புதன் இணைவதால், புத–சுக்ர யோகம் உருவாகின்றது. எனவே இடம், பூமியால் லாபம் கிடைக்கும். பத்திரப் பதிவில் இருந்து வந்த தடைகள் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோக முயற்சி கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குருப்பெயர்ச்சிக் காலம்

அக்டோபர் 4–ந் தேதி விருச்சிக ராசிக்கு குரு செல்லப் போகிறார். இதுவரை துலாத்தில் தனது பகை கிரகமான சுக்ரன் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது பெயர்ச்சியாவது நன்மை தான். அவர் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் அடியெடுத்து வைப்பதால், அதிக விரயங்களையும், அமைதிக் குறைவையும் கொடுப்பாரோ என்று நினைக்க வேண்டாம். அதன் பார்வை 2, 4, 8 ஆகிய இடங்களில் பதிகிறது. குருவைப் பொறுத்தவரை இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்குத் தான் பலன் அதிகம். எனவே குடும்ப ஸ்தானம் பலமடைகின்றது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். இருப்பினும் குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றத்தைக் கொடுக்கும். பெயர்ச்சிக்கு முன்னதாகவே குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.

சுக்ரனின் வக்ர இயக்கம்

அக்டோபர் 11–ந் தேதி துலாம் ராசியில் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 7–க்கு அதிபதியான சுக்ரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, வாழ்க்கைத் துணையோடு விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வருமானத்தைக் காட்டிலும், செலவு கூடும் நேரம் இது. சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளி மாநிலம் அல்லது வெளிநாடு சம்பந்தப்பட்ட வகையில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரலாம். பெண் வழி பிரச்சினைகள் தலைதூக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 18, 19, 23, 24, 29, 30 அக்டோபர்: 4, 5, 15, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– மஞ்சள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
மாதத் தொடக்கத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கிறது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோர் வழி ஆதரவு உண்டு. வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். அக்டோபர் 4–ந் தேதி வரும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தாலும், மன நிம்மதி குறைய வாய்ப்புண்டு. பெரியோர்களின் ஆலோசனை வாழ்க்கைப் பாதையை வழிநடத்திச் செல்ல உறுதுணையாக இருக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையிலேயே வைத்துக்கொள்வது நல்லது. வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் நன்மை தருவதாக அமையும். உடன்பிறப்புகளின் உதவி ஓரளவு கிடைக்கும். நவராத்திரி நாயகியை வழிபடுவதோடு, வியாழக்கிழமை தோறும் குருவையும் வழிபடுங்கள்.

ரிஷபம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டம லாபாதிபதியான குருவும் இணைந்திருக்கிறார். எனவே பண நெருக்கடி ஏற்படாது. வரவு வந்த பிறகே செலவு வரும். 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால், ‘இடமாற்றங்கள் செய்யலாமா?, இல்லை.. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபடலாமா?’ என்றெல்லாம் சிந்திப்பீர்கள்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருக்கிறது. சகாய ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே ‘ஒரு சில நல்ல வாய்ப்புகள் வந்தாலும், அவை தட்டிக் கொண்டு செல்கின்றதே!’ என்று கவலைப்படுவீர்கள். மலைபோல் வந்த துயர் பனிபோல் விலக வேண்டுமானால், தெய்வங்களை நாடிச் சென்று வழிபட்டு வரவேண்டும். சுயஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. இருப்பினும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து, காகத்திற்கு எள்கலந்த சாதம் வைப்பது நல்லது. மேலும் ஆனைமுகனையும், அனுமனையும், சனிபகவானையும் அதிகாலையிலோ, அந்தி மாலையிலோ வழிபட்டு வாருங்கள்.

அக்டோபர் 4–ந் தேதிக்கு மேல் அதிர்ஷ்ட தேவதை உங்கள் இல்லத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறாள். காரணம் அன்றைய தினம் குருப்பெயர்ச்சி. விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் குரு பகவான், அங்கிருந்து உங்கள் ராசியை சப்தம பார்வையாகப் பார்க்கப் போகிறார். எனவே மற்ற குருப்பெயர்ச்சிகளை விடவும், இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு முக்கியமானதாக அமைகிறது. தடைகளைத் தகர்த்தெறியும் ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு. எனவே குருப்பெயர்ச்சிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். மேலும் குருப்பெயர்ச்சி அன்று நவக்கிரகத்தில் உள்ள குருவையும் வழிபடுங்கள்.

துலாம் ராசியில் புதன்

கன்னி ராசியில் உச்சம் பெற்று சஞ்சரித்து வந்த புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்கு வருகிறார். இருந்தாலும் அஸ்தமன இயக்கத்திலேயே இருக்கிறார். அக்டோபர் 4–ந் தேதி புதன் வலிமையடைகிறார். அதன்பிறகு அவர் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் துலாம் ராசிக்கு வரும்போது 6–ம் இடத்தில் மறைகிறார். இருந்தாலும் ‘மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைக் கொடுப்பார்’. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். சேமிப்பில் ஒரு பங்கைச் சுபச்செலவுகளுக்கு உபயோகப்படுத்துவீர்கள்.

குருப்பெயர்ச்சிக் காலம்

அக்டோபர் 4–ந் தேதி விருச்சிக ராசிக்கு குரு செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிகின்றது. சப்தம பார்வை என்பதால், சஞ்சலங்கள் தீரும். சந்தோ‌ஷங்கள் சேரும். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ஆற்றல் அனைத்தும் பளிச்சிடும் இந்த நேரத்தில் அதிக நண்பர்கள் வந்திணைவர். எதையும் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவால், வெற்றிப் படிக்கட்டில் ஏறுவீர்கள். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமாக இருந்தாலும், நேரடிப் பார்வையாக இருப்பதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். தொய்வடைந்த பணி தொடரும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

எந்தவொரு ராசியில் பிறந்தவராக இருந்தாலும், அந்த ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையேல் விரயங்களும், வீண் விவாதங்களும் உண்டாகும். ‘நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். நேசித்தவர்களிடம் கூட யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகும். அக்டோபர் 11–ந் தேதி துலாம் ராசியில் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். எதிரிகளின் பலம் கூடும் இந்த நேரத்தில், எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருவையும், வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரனையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வெற்றிகள் குவியும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 20, 21, 25, 26 அக்டோபர்: 1, 2, 6, 7

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ஆனந்தாநீலம்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
சுப விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இது. துணிவையும், தன்னம்பிக்கையையும் பக்கபலமாக வைத்துக் கொள்ளுங்கள். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், அதற்குரிய வழிபாடுகளை முறையாக செய்தால் தடைக்கற்களெல்லாம் படிக்கற்களாக

மாறும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். குருப்பெயர்ச்சிக்கு மேல் உங்களுக்கு நல்லநேரம் தான். குழப்பங்கள் தீரும். குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். உத்தியோக முயற்சி கைகூடும். அரசுப் பணிக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கலாம். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு உண்டு. நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டையும், வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

மிதுனம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் வலிமையிழந்து சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சனி, கண்டகச் சனியாக இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். உடன் இருப்பவர்களுக்காகவும் ஒரு தொகையை செலவிட வேண்டியதிருக்கும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சிகளில் ஆதாயம் குறைவாகவே கிடைக்கலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது.

கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், திடீர் திடீரென மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலமும் பிரச்சினைகள் வரலாம்; உடன் இருப்பவர்கள் மூலமும் பிரச்சினைகள் உருவாகலாம். எனவே எதைச் செய்தாலும் அதன் பின் விளைவுகளைச் சிந்தித்துச் செய்வது நல்லது. 2–ல் ராகுவும், 8–ல் கேதுவும் இருப்பதால் சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கிறது. ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கையாகவே இந்த மாதம் உங்களுக்கு அமையலாம். உங்களுக்கு யோகம் தரும் நாளில், நாக ஸ்தலங்களுக்குச் சென்று முறையாக ராகு–கேதுகளுக்கு பிரீதி செய்வதன் மூலம், துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.

இம்மாதம் மாபெரும் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. ஆனால் அந்த குருபகவான் 6–ம் இடத்திற்கு அல்லவா வருகிறார். ‘ஆறில் குரு ஊரில் பகை’ என்பார்கள். எனவே எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்ய இயலாது. திடீர் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். உத்தியோக மாற்றம் விரும்பத்தக்கதாக அமையுமா? என்பது சந்தேகம் தான். எதிர்பார்த்த காரியங்களில் ஏமாற்றம் கிடைக்கலாம். குரு, உங்கள் ராசிக்கு 7, 10–க்கு அதிபதியாகி கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்றவர் என்பதால், மறைவிடத்திற்கு வரும் பொழுது அரைப்பங்கு நன்மையைச் செய்வார். மலைபோல் வந்த துயர் பனிபோல் விலக குருவிற்குரிய சிறப்புப் பரிகாரங்களை குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே செய்து கொள்ளுங்கள்.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், உச்சம் பெற்று சஞ்சரித்தாலும், அஸ்தமன நிலையில் இருக்கிறார். அவர் அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து புத–சுக்ர யோகத்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக பூர்வீகச் சொத்துகளால் லாபம் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். தொழில் வளர்ச்சியிலும், கடமையைச் செய்வதிலும் இருந்த குறுக்கீடு அகலும். பூமி விற்பனையால் ஒரு பெரும் தொகை கிடைக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். ஆடை, ஆபரணசேர்க்கை உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்பை கருதி சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அக்டோபர் 4–ந் தேதி புதன் பலம்பெற்று சஞ்சரிக்கும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சிப் பலன்கள்

அக்டோபர் 4–ந் தேதி விருச்சிக ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்ப்புகள் அதிகரிக்கலாம். வழக்கு முடிவுகள் சாதகமாக வந்து சேரும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்துச் செய்வது நல்லது. உத்தியோகம் சம்பந்தமாக புது முயற்சிகள் செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள், வாகன மாற்றங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நண்பர்களின் மூலம் சமாளித்து விடுவீர்கள். மருத்துவச் செலவு அதிகரிக்கலாம். உயர்பதவியில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றங்கள் தானாக வந்து சேரும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

அக்டோபர் 11–ந் தேதி துலாம் ராசியில் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் பூர்வீகச் சொத்து தகராறுகள் தலைதூக்கும். பிள்ளைகளால் விரயம் ஏற்படும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாங்கிய ஆபரணங்களை விற்க நேரிடலாம். பெண் தெய்வ வழிபாடுகளை, முறையாக மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றப் பாதையில் உள்ள தடைகள் விலகும்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும், வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 23, 24, 27, 28 அக்டோபர்: 4, 5, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ஆரஞ்சு

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இம்மாதம் சப்தமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குடும்பப் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்லவேண்டாம். வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பக்கத்து வீட்டார் பகையாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் – மனைவி இருவரும் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, தீட்டிய திட்டங்களுக்காக கொஞ்சம் செலவிட வேண்டியதிருக்கும். பெற்றோர் வழியில் ஆதரவு ஓரளவு கிடைக்கும். இம்மாதம் நிகழும் குருப்பெயர்ச்சியால், குரு இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களால் பலன் உண்டு. குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். சனி கவசம் பாடி சனியை வழிபடும் அதே வேளையில், குரு கவசம் பாடி குருவையும் வழிபடுங்கள்.

கடகம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியிலேயே சர்ப்பக் கிரகம் எனப்படும் ராகு இருக்கிறது. சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். எனவே வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அனுசரித்துச் செல்வதன் மூலமே குடும்பத்தில் அமைதி கிடைக்கும். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் இனி சாதகமாக மாறலாம்.

வியாபாரத்தில் பிறருடைய தவறான வழிகாட்டுதலினால், இதுவரை கொஞ்சம் விரயங்களைச் சந்தித்திருப்பீர்கள். வியாபாரத்தில் விரோதிகளும் அதிகமாகியிருப்பார்கள். அந்த நிலை இனி மாறும். பஞ்சமாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியானதுடன், உச்சம் பெற்றும் விளங்குகிறார். எனவே தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு, அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலங்கள் கிடைக்கும். சொத்துகள் சார்ந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

சனியின் சஞ்சாரமும் சாதகமாகவே உள்ளது. 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, தற்சமயம் வக்ர நிவர்த்தியாகி 6–ம் இடத்தில் குருவின் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலதிகாரிகள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவர். இதனால் வேறு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தைக் கூட மாற்றிக்கொள்வீர்கள்.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் கன்னி ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். அக்டோபர் 4–ந் தேதி அங்கேயே வலிமை அடைகிறார். மேலும் துலாம் ராசியில் இருக்கும் சுக்ரனோடு இணைந்து புத– சுக்ர யோகத்தை உருவாக்குகிறார். இதனால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கைகூடும். தாயின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். உயர்படிப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக் கசப்பு மாறி உறவு பலப்படும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4–ம் இடத்தில் சஞ்சரித்து, அர்த்தாஷ்டம குருவாக விளங்கிய குரு பகவான், அக்டோபர் 4–ந் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்படி பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு, உங்களுக்கு பல விதங்களிலும் நன்மையை வழங்கப் போகிறார். குருவின் பார்வையால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இல்லறம், நல்லறமாக வழிவகுக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகள் அகலும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், தனித்து இயங்க முன்வருவார்கள். ஆற்றல் மிக்கவர்களின் அறிமுகம் கிடைத்து, பார்க்கும் தொழிலில் பணவரவை பெருக்கிக் கொள்வீர்கள். வீண் பழிகள் அகலும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

அக்டோபர் 11–ந் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும், அவர் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாது. இருப்பினும் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. ஜீரணக் கோளாறு, நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் உறவினர்களிடம் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை வாக்குவாதம் செய்யாமல் சமாளிப்பது நல்லது. சுக்ரனின் வக்ர காலத்தில், தொழில் செய்வதற்காக ஒருசிலருக்கு கடன் வாங்கும் சூழல் உருவாகலாம்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருவை வழிபடுவதன் மூலமும், செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வழிபடுவதன் மூலமும் நன்மையை வரவழைத்துக் கொள்ளலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 25, 26, 29, 30 அக்டோபர்: 6, 7, 11, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் மாதம் இதுவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். மன பயம் மாறி, மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன்–மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முழுமையாக நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். தாய் மற்றும் சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு மிகச்சிறந்த பலன் கிடைக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து மகிழ்ச்சிப்படுத்தும். வியாழக்கிழமை குருவை வழிபடுவதோடு சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வதன் மூலமும் சந்தோ‌ஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

சிம்மம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தனாதிபதி புதனோடு இணைந்து தன ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கும். செய்யும் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். கொடுக்கல்– வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். ‘வரவேண்டிய பாக்கிகள் வசூலாகாமல் இழுத்தடிக்கிறதே’ என்று நினைத்தவர்கள், இப்பொழுது முயற்சி செய்யாமலேயே முடங்கிக் கிடந்த தொகை வரப்போகிறது. தொழிலில் ஏற்பட்ட தொய்வு நிலை மாறி, தொடர் வெற்றியைப் பெறப் போகிறீர்கள். இதுபோன்ற காலங்களில் உங்கள் தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் தெய்வ பலம் கூடுதலாக கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய் வக்ர நிவர்த்தியாகி உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். யோககாரகன் உச்சம் பெறும்பொழுது இதுவரை இருந்த தடைகள் தானாக விலகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சவால்களையே நாளும் சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோ‌ஷத்தையே சந்திக்கப் போகிறீர்கள்.

வரப்போகும் குருப்பெயர்ச்சி அர்த்தாஷ்டம குருவாக வருவதால், ஆரோக்கியத் தெல்லையைக் கொடுக்குமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். சுகாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்கு வருகிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து புத–சுக்ர யோகத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் அஸ்தமனமாகி வலிமையிழந்தும் இருக்கிறார். அக்டோபர் 4–ந் தேதி புதன் வலிமை அடைகிறார். இந்தப் பொன்னான புதனின் பெயர்ச்சியால் பூமி யோகமும், பொருளாதார விருத்தியும் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். மாமன், மைத்துனர்கள் மனமுவந்து ஒத்துழைப்பார்கள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். ஆன்மிகப் பணிக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். பயணங்களால் பலன் உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடு அகலும். அரசாங்க ஆதரவும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

அக்டோபர் 4–ந் தேதி விருச்சிக ராசிக்குக் குரு செல்கிறார். இதுவரை சகாய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், சுக ஸ்தானத்திற்கு செல்வது யோகம் தான். அப்போது குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால், தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வழிவகுத்துக்கொடுப்பர். அதிக முதலீடு செய்து கூடுதல் லாபத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமான பணியாளர்கள் வந்திணைவர். வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டுமென்று முயற்சி செய்து அதில் தாமதம் ஏற்பட்டவர்கள், இப்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறி இனிமை காண இயலும். தாயின் உடல்நலம் சீராகும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உயர்கல்வியில் சேர நினைப்பவர்களுக்கு தேர்ந்தெடுத்த துறை கிடைக்கும். பத்திரப் பதவில் இருந்த தடைகள் அகலும். பல நாட்களாக நடைபெறாத பாகப்பிரிவினை, இப்பொழுது நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகளோடு இருந்த கருத்துவேறுபாடு அகலும். இதுபோன்ற காலங்களில் சுய ஜாதகத்திற்கேற்ப தெய்வ வழிபாடுகளையும், குருவிற்குரிய சிறப்பு வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது.

சுக்ரனின் வக்ர இயக்கம்

அக்டோபர் 11–ந் தேதி துலாம் ராசியில் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். சகாய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சில காரியங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தொழிலில் உள்ள பங்குதாரர்கள் விலகுவது அல்லது பாக்கிகள் வசூலாக£மல் இருப்பது போன்றவை நிகழும். பிறருக்குப் பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் சிக்கல்கள் உருவாகலாம். பெண் வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். இக்காலத்தில் பிரதோ‌ஷ வழிபாட்டின் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளலாம்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாட்டையும், வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 17, 27, 28 அக்டோபர்: 2, 3, 8, 9, 12, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ரோஸ்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இம்மாதம் நீங்கள் நினைத்தது நிறைவேறும். நிகழ் காலத் தேவைகள் பூர்த்தியாகும். தளராத முயற்சியில் இருந்த தடைகள் அகலும். கணவன்–மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். நகை நட்டுக்கள் வாங்கும் யோகம் உண்டு. ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பீர்கள். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல பலன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குமரக்கடவுள் வழிபாடும் நலங்களையும், வளங்களையும் வழங்கும்.

கன்னி

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்றிருந்தாலும், அஸ்தமனமாகவும் இருக்கிறார். அவரோடு விரயாதிபதி சூரியனும் இணைந்திருப்பதால் விரயங்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அவற்றைச் சுபவிரயமாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான நேரமிது. கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் உங்களுக்கு இப்பொழுது வேலைப்பளு இன்னும் அதிகரிக்கலாம். ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது.

வாக்கு ஸ்தானத்தில் சுக்ரன் பலம் பெற்றிருந்தாலும், அவரோடு பகை கிரகமான குரு பகவான் இணைந்திருக்கிறார். எனவே சிறுசிறு வி‌ஷயத்திற்கு கூட கோபப்படும் சூழ்நிலை உருவாகும். வீண் விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களின் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம். கையெழுத்திடும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுங்கள்.

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி இருப்பதால், அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் உள்ளது. ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். நோய்க்கானஅறிகுறி தோன்றும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. தொழில் பங்குதாரர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். எனவே புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுதும் கவனமுடன் இருங்கள். இதுபோன்ற காலங்களில் சனிக் கிழமை தோறும் ஆனைமுகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

துலாம் ராசியில் புதன்

கன்னி ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். அதே நேரத்தில் அஸ்தமனத்திலும் இருக்கிறார். அக்டோபர் 4–ந் தேதி புதன் பலம்பெற்று சஞ்சரிக்கப்போவதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். எண்ணங்கள் ஈடேறும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். புதிய வியாபாரத் தொடக்கங்களுக்கான அறிகுறி தென்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மனக் குழப்பம் அகலும். பிறகு செய்யலாம் என்று தள்ளி வைத்த காரியங்களை, ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். அதிகாரிகளால் ஏற்பட்ட பகை மாறும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அக்டோபர் 4–ந் தேதிக்குப் பிறகு 3–ம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே எல்லாவிதங்களிலும் உங்களுக்குச் சகாயங்கள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். சொந்தங்கள் உங்கள் நல்ல குணத்தை உணர்ந்து, உங்களோடு வந்து இணைவார்கள். தாய் ஸ்தானத்திற்கும், களத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு, சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தாய் வழி ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியிலும் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் வந்து உள்ளத்தை மகிழ் விக்கும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

அக்டோபர் 11–ந் தேதி துலாம் ராசியில் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும் கூட துலாம் ராசி அவருக்கு சொந்த வீடு என்பதால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. ஒரு சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும், அவை தானாக விலகி விடும். வங்கிக் கடன் அல்லது வள்ளல்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்ப வர்களுக்கு அதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். குடும்பத்திலுள்ள பெரியவர்களை திருப்திப்படுத்த வேண்டிய நேரமிது. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், அவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு நடக்கும் சூழல் உருவாகும். தங்கம், வெள்ளி போன்ற ஆபரண சேர்க்கை உண்டு. பூமி சார்ந்த முதலீடுகளில் அவசரம் காட்ட வேண்டாம். இடம் வாங்கும் பொழுது வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானையும், சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவையும் வழி படுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 18, 19, 20, 29, 30 அக்டோபர்: 4, 5, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– பச்சை.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இம்மாதம் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். வேலைப்பளுவும் கூடுதலாக இருக்கும். கிரக நிலை கள் சாதகமாக இருந்தாலும், அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பணப் புழக்கம் எதிர்பார்த்தபடி அமையும். அதே நேரம் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஒற்றுமை பலப்படும். கணவன்–மனைவி இடையே கனிவும், பாசமும் கூடும். சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு கூடுதலாக இருக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகளை பேசி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சியின் விளைவாக சாதகமான நிலை உருவாகும். சக பணியாளர்களின் தொல்லை அகலும். மேலதிகாரி களின் ஆதரவோடு சலுகைகளும் கிடைக்கும். பெருமாள் வழிபாடும், துர்க்கை வழிபாடும் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும்.

துலாம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும் சஞ்சரிக்கிறார். எனவே முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் கைகூடி வரும். குறிப்பாக உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அதைக் கண்டு மேலதிகாரிகள் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம்.

ஏழரைச் சனி விலகிவிட்டது என்றாலும், ஜென்ம குருவின் ஆதிக்கம் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகளை கொஞ்சம் யோசித்து எடுப்பது தான் நல்லது. உடல் நலனில் அடிக்கடி சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும். ஜென்மகுருவின் காரணமாக பயணங்கள் அதிகரிக்கும். எனவே குறித்த நேரத்தில் உணவருந்த இயலாது. அதன் விளைவாக ஆரோக்கியத் தொல்லை உருவாகும்.

தன சப்தமாதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் பொருளாதார முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்ற எடுத்த முயற்சி வெற்றி பெறும். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகத்தை காணப் போகிறீர்கள்.

மாபெரும் கிரகமான குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து 2–ம் இடத்திற்கு செல்லவிருக்கிறார். ஜென்ம குரு விலகுவதும் நன்மைதான். கடந்த ஓராண்டாக ஏற்பட்ட மனக்கவலைக்கு இப்பொழுது விடை கிடைக்கப் போகிறது. குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் சாரபலமறிந்து அதற்கேற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, ராகு–கேதுக்களுக்கு பிரீதி செய்வதன் மூலம் ஆரோக்கியமும் சீராகும். ஆதாயமும் கிடைக்கும்.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் கன்னி ராசியில் உச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். புதன் வலிமை இழந்திருந்தாலும், புதன்– சுக்ரன் யோகம் இருப்பதால் மிகுந்த நன்மையைக் கொடுக்கும். அக்டோபர் 4–ந் தேதி புதன் வலிமை அடைகிறார். அதன்பிறகு எல்லாம் நன்மையே நடைபெறும். உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது, பெரும் லாபத்தை உங்களுக்குக் கொடுக்கலாம்.

குருப்பெயர்ச்சிக் காலம்

மாத தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் குரு பகவான், அக்டோபர் 4–ந் தேதி வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் 2–ம் இடத்தைப் பலப்படுத்துகிறார். எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. குருவின் பார்வை 6–ம் இடத்தில் பதிவதால் உத்தியோகம் தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடும். வராத சம்பளப் பாக்கிகள் வந்து சேரலாம்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

இக்காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் பாசமும், கூட்டாளிகளின் நேசமும் குறையலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரித்து மனக்கலக்கம் கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை விற்கும் நிலை உருவாகலாம். குறிப்பாக பணநெருக்கடி கூடும் நேரமிது. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதால், மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்களின் மனக்கசப்பிற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

இம்மாதம் நவராத்திரி விழாவைக் கொண்டாடுங்கள். அன்னை பராசக்தியை வழிபடுவதன் மூலம் எண்ணங்கள் நிறைவேறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 17, 21, 22 அக்டோபர்: 2, 3, 6, 7, 12, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– நீலம்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
நிதானத்துடன் செயல்பட வேண்டிய மாதம் இது. மாதத் தொடக்கத்தில் குரு பலம் மேலோங்கி இருப்பதால் குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாரிசுகளால் தொல்லைகள் ஏற்படலாம். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஒரு சில பொருட்களை மறதியாக இடம் மாற்றி வைத்து விட்டு, பிறகு தேடும் சூழ்நிலை ஏற்படும். சகோதர வர்க்கத்தினர் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற விதத்தில் நடந்து கொள்வார்கள். சொத்துகளால் லாபமும், சொந்த பந்தங்களால் நன்மையும் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுகூலத்தோடு சில சலுகைகளும் வந்துசேரும். வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வழிபட்டு துயரங்களை போக்கிக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகி விட்டார். மேலும் உச்சம்பெற்று வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும். பணவரவு இருமடங்காக உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் விதத்தில் கிரகங்கள் சாதகமாக விளங்குகின்றன.

லாபாதிபதியாக விளங்கும் புதன் உச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கிறார். எனவே தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு உறு துணையாக இருப்பர். தேவையான மூலதனத்தைப் போட்டுத் தொழிலைப் பெருக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். வசதிமிக்கவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வங்கிகளின் மூலமும் அனுகூலம் கிடைக்கும்.

ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல்– வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகும்.

இம்மாதம் நடைபெறும் மாபெரும் குருப்பெயர்ச்சி நிகழ்வு உங்கள் லட்சியங்களை நிறைவேற்றப் போகின்றது. குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே, உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது. துர்க்கை வழிபாடும் நன்மையை வழங்கும்.

துலாம் ராசியில் புதன்

மாத தொடக்கத்தில் கன்னி ராசியின் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்கு வருகிறார். அக்டோபர் 4–ந் தேதி வலிமையடைகின்றார். அஷ்டம லாபாதிபதியாக விளங்கும் புதன் 12–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் தக்க தருணத்தில் கைகொடுத்து உதவுவர். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வீடுமாற்றம், இடமாற்றம், இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். உத்தியோகத்தில் உயர்பதவிகள், உங்கள் திறமைக்கு பரிசாகக் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் இல்லத் திருமணங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வாகனங்களை வாங்குவீர்கள்.

குருப்பெயர்ச்சிக் காலம்

அக்டோபர் 4–ந் தேதி குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, ஜென்ம ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியாகவும், பஞ்சம பாக்கியாதிபதியாகவும் விளங்குபவர் குரு பகவான். அவர் ஜென்மத்திற்கு வரும்பொழுது செல்வநிலை உயர வழிபிறக்கும். செய்யும் செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்துத் தகராறுகள் அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். வீட்டில் மங்கல ஓசை கேட்கும் யோகம் உண்டு. மழலையின் ஓசை கேட்கும் வாய்ப்பும் ஏற்படும்.

குருபார்வையால் 5, 7, 9 ஆகிய இடங்கள் புனிதமடைவதால், அந்த ஸ்தானங்கள் அனைத்தும் புனிதமடைகின்றன. இனி வாழ்க்கையில் உங்களுக்கு வசந்த காலம் தான். குருவின் பலம் சிறப்பாக இருப்பதால், தொடர்ந்து வியாழக்கிழமை விரதமும், தட்சிணாமூர்த்தி வழிபாடும், அறுபத்து மூவர் ஆராதனையும் செய்து வருவது நல்லது. பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் நேரமிது. விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவார்கள்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

மாதத் தொடக்கத்தில் சுக்ரன் அயன, சயன ஸ்தானத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அக்டோபர் 11–ந் தேதி சுக்ரன் வக்ர நிலையை அடைகின்றார். 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12–க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது பயணங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் கைகூடும். குறிப்பாக வெளிநாட்டு யோகங்கள் வந்துசேரலாம். புதிய வாகன சேர்க்கை உண்டு. திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றச் சிந்தனை ஏற்படும்.

இம்மாதம் கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய மூவரையும் நவராத்திரி நாட்களில் கொண்டாடி நன்மைகளை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 18,19,20,23,24 அக்டோபர்: 4,5,8,9,16,17

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– சிவப்பு.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் மாதமாகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்திஆகும். வருமானம் இருமடங்காக உயரும்.

கணவன் – மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். தாய்வழி அதரவு திருப்திகரமாக இருக்கும். தங்கம், வெள்ளி போன்ற ஆபரண சேர்க்கை உண்டு. சொத்து களை உங்கள் பெயரில் வாங்கும் யோகம் வாய்க்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டுவர். பணிபுரியும் பெண்களுக்கு இனி நல்ல நேரம்தான். உங்கள் திறமையைக் கண்டு உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். எல்லா நாட்களும், இனிய நாட்களாக அமைய குலதெய்வ வழிபாடும், பராசக்தி வழிபாடும் கை கொடுக்கும்.

தனுசு

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதனான குரு பகவான் லாப ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பகை கிரகத்தோடு ராசிந£தன் இணைந்திருக்கும் பொழுது, எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. யாரிடம் பேசினாலும் கொஞ்சம் யோசித்துப் பேசுவது நல்லது. உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் முன்னேற்றப் பாதிப்புகள் வரலாம். நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தால் மட்டுமே எதையும் சொல்லலாம். ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் திடீர் திடீரென திட்டங்களை மாற்றுவீர்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

விரயாதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் தன விரயமும் உண்டு. குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், அஷ்டமத்தில் ராகுவும் ஆட்சி செய்வதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாவசியச் செலவுகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி ஏதேனும் தொகைகளை வாங்கிக் கொடுத்தால் அதன் மூலம் பிரச்சினைகள் உருவாகலாம். நட்பும் பகையாகலாம். இதுபோன்ற காலங்களில் எதிரிகளின் பலம் மேலோங்கியிருக்கும். எனவே துணிவைவிட பணிவே உங்களுக்கு அவசியமாகும்.

ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். உடல் நலத்திலும் அடிக்கடி தொல்லை ஏற்படும். பாகப்பிரிவினையில் இருந்து பதவி வாய்ப்பு வரை இழுபறி நிலையிலேயே இருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம்இருந்து சனி பகவானையும், அனுமனையும் வழிபாடு செய்வதோடு சனிகவசப் பாராயணமும் செய்வது நல்லது. மனக் குழப்பங்களும், தடுமாற்றங்களும் அடிக்கடி வரும் நேரமிது. அருளாளர்களின் ஆலோசனைகள் அவ்வப்போது கைகொடுக்கும்.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் கன்னி ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கு அஸ்தமனத்தில் இருக்கிறார். அக்டோபர் 4–ந் தேதி பலம் பெறுகிறார். துலாம் ராசியில் சுக்ரனோடு புதன் இணைவதால், புத–சுக்ர யோகம் உருவாகின்றது. எனவே சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும். இளைய சகோதரத்தோடு ஏற்பட்ட பிணக்குகள் மாறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முடங்கிக் கிடந்த சில காரியங்கள் அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு விறுவிறுப்பாக நடைபெறும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் வரவேண்டிய நீண்ட நாளைய சம்பளப் பாக்கிகள் இப்பொழுது வரலாம்.

குருப்பெயர்ச்சிக் காலம்

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11–ம் இடத்தில் இருக்கும் குரு பகவான், அக்டோபர் 4–ந் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே வீடு வாங்கும் வாய்ப்பு உருவாகும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். பிள்ளைகள் உயர்கல்வி கற்க வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பீர்கள். பழைய வீட்டை பழுது பார்க்கும் யோகம் உண்டு. தாயின் உடல்நலம் சீராகும். புதிய நூதன வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததற்கு உரிய ஆதாயம் கிடைக்கும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

அக்டோபர் 11–ந் தேதி துலாம் ராசியில் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6–க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான். தற்போது பார்க்கும் பணியில் இருந்து புதிய வேலையில் சேர முயற்சித்தவர்களுக்கு, அதற்குண்டான பலன் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வியாபாரத்தில் புதிய பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். அதிரடி மாற்றங்கள் பலவும் செய்ய முன்வருவீர்கள். உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வேலைப்பளு காரணமாக ஆரோக்கியப் பாதிப்புகள் அதிகரிக்கும். கடன் சுமையில் ஒரு பாதி குறையும்.

இம்மாதம் வடக்கு நோக்கிய அம்மனை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபடுவதோடு, சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும் வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 21, 22, 25, 26 அக்டோபர்: 6, 7, 10, 11, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– மஞ்சள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வீண் விரயங்கள் அதிகரிக்கலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைக் கூடுதலாகப் பெற இயலும். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது மட்டுமல்லாமல், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் தான் மன அமைதி கிடைக்கும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய சீர்கேடும், சரும நோய்களும் வரலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களின் உறவில் விரிசல் ஏற்படலாம். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களைத் தீர்க்கும்.

மகரம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த சுக லாபாதிபதியான செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல வழிபிறக்கும். உங்கள் திறமை பளிச்சிடும் நேரமிது. தெய்வ பலத்தின் காரணமாக சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருப்பதால் சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. இருப்பினும் புத–ஆதித்ய யோகமும், குரு சுக்ர சேர்க்கையும் இருப்பதால் தடைகள் ஓரளவுவிலகும். தனவரவு தாராளமாக வந்துசேரும். நீண்டநாட்களாகத் தள்ளிப் போன காரியங்கள் இப்பொழுது தானாக முடிவடையும்.

சப்தம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே கொஞ்சம் பிரச்சினைகள் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் உரசல் இல்லாமல் அமைதி ஏற்பட, எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்வது நல்லது. மேலும் குடும்ப பெரியவர்களை கலந்து ஆலோசித்துச் செய்தால் எதிர்பார்த்த பலன்கள் எளிதில் கிடைக்கும். ராகு–கேதுக்களுக்குரிய சர்ப்ப சாந்திப் பரிகாரங்களையும் குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே செய்து வழிபட்டு வந்தால் தொழிலில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, கவனம் தேவை. புத–ஆதித்ய யோகம் இருப்பதால் இம்மாதம் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும். எல்லாவற்றிற்கும் மேலாக இம்மாதம் நடைபெறப் போகும் குருப்பெயர்ச்சி உங்களுக்குச் சாதகமாக இருக்கின்றது. இதுவரை 10–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயத்திற்கேற்ற லாபத்தைக் கொடுப்பார்.

என்ன இருந்தாலும் ஏழரைச் சனியின் ஆதிக்கமும், ஜென்ம கேதுவும் இருப்பதால் அதற்குரிய வழிபாடுகளை செய்வதன் மூலமே எதையும் விரைந்து செயல்படுத்த இயலும்.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த புதன், உச்சம் பெற்றிருக்கிறார். அவர் அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்கு வருகிறார். அங்கு அஸ்தமனம் பெற்று இருக்கும் அவர், அக்டோபர் 4–ந் தேதி வலிமையடைகிறார். துலாத்தில் உள்ள சுக்ரனோடு சேருவதால் புத–சுக்ர யோகம் உருவாகிறது. இதன் விளைவாக தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வாரிசுகளின் வளர்ச்சி பெருமைப்படத்தக்கதாக இருக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்துசேரும். பெண் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

குருப்பெயர்ச்சி காலம்

உங்கள் ராசிக்கு 10–ம் இடத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அக்டோபர் 4–ந் தேதி லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை பார்வையிடப் போகிறார். எனவே உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்து தகராறு அகலும். புதியமனை கட்டிக் குடியேறும் எண்ணம் கைகூடும். முன்னோர்கள் கோவில் திருப்பணியை முறையாகச் செய்ய முன்வருவர். திருமண பேச்சுகள் முடிவாகி மகிழ்ச்சிப்படுத்தும். கொடுக்கல்– வாங்கல் களில் இருந்த நிலுவை தொகைகள் தானாக வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் கூடுதலாகக் கிடைக்கும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அதே நேரத்தில் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். பங்குதாரர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும். தொழிலிலும் சரி, உத்தியோகத்திலும் சரி, மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைப்பது அவ்வளவு நல்லதல்ல. பெண் வழிப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். வாங்கிய கடனுக்காக ஒருசிலர் சொத்துகளை விற்க நேரிடும். வாகனப் பழுதுகளால் கவலை கொள்வீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் விநாயகப்பெருமானையும், செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 17,23,24,27,28 அக்டோபர்: 9,10,12,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– கரும்பச்சை.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இம்மாதம் தன்னம்பிக்கையின் மூலம் தக்க பலன் கிடைக்கும். பெற்றோர்களின் அரவணைப்பும், உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பும் எதிர்பார்த்தபடி அமையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கவேண்டுமென்ற ஆர்வம் இருந்தாலும், ஏழரைச் சனி நடப்பதால் தடைகள் ஏற்படத்தான் செய்யும். நிதி நிறுவனங்களில் பணிபுரிவோர் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகவும், கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படவும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். முன் கோபத்தை குறைத்துக்கொண்டு செயல்படுவதன் மூலம் மற்றவர்களின் மனதில் இடம்பிடிக்க இயலும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு, பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து

வேறுபாடு அகலும். ஆதியந்தப் பிரபு வழிபாடு ஆனந்த வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.

கும்பம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி மீது குரு பார்வை இருக்கிறது. மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். லாபச் சனியாலும் பொருளாதார நிலை உயரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்ட படியே செய்து முடிப்பீர்கள். திறமை பளிச்சிடும் நேரமிது. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஒருசில சமயங்களில் செலவீனங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். இருப்பினும் சாதுர்யமான பேச்சாலும், சமயோஜிதமாக நடந்து கொள்வதன் மூலமும் அதைச் சமாளித்து விடுவீர்கள்.

4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 12–ம் இடத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு கேதுவும் இணைந்திருக்கிறார். எனவே ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும். சொத்துகள் வாங்க, விற்க எடுத்த முயற்சி தடைபட்டிருக்கலாம். இப்போது அது சுலபமாக முடியும். விரும்பிய சொத்துகளை வாங்குவதற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். தர்ம சிந்தனை அதிகரிக்கும். தாராள மனப்பான்மை உருவாகும். உடன்பிறப்புகளின் இல்ல திருமண விழாக்களை முன்னின்று நடத்திவைக்க உறுதுணையாக இருப்பீர்கள்.

மாபெரும் கிரகமான குருபகவான் அக்டோபரில் பெயர்ச்சியாகப் போகிறார். 10–ல் குரு வருகின்றபொழுது பலவிதமான மாற்றங்களை உங்களுக்கு வழங்குவார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருபகவான், கேந்திர ஸ்தானத்தில் வரும்பொழுது, ராகுபகவான் 6–ல் சஞ்சரிப்பதால் ஒரு மிகப்பெரிய நன்மை கிடைக்கப் போகின்றது. 6–ல் ராகு நின்று குரு கேந்திரத்தில் இருந்தால் ‘அஷ்டலட்சுமி யோகம்’ என்ற ஒரு அற்புதமான யோகம் ஏற்படும். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதமாக இந்த மாதத்தைக் கருதலாம்.

இந்த நேரத்தில் குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே யோகபலம் பெற்ற நாளில் திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வருவதுடன், குரு பீடங்களுக்கும் செல்லலாம். நவராத்திரி நாயகியை வழிபடுவது நல்லது.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன், அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதே நேரத்தில் கொஞ்சம் வலிமையிழந்தும் இருக்கின்றார். அக்டோபர் 4–ந் தேதி புதன் பலம்பெறுகிறார். பலம்பெற்ற புதன் சுக்ரனோடு இணைந்து புத– சுக்ர யோகத்தை உருவாக்குவதால், இக்காலம் ஒரு இனிய காலமாகும். தக்க விதத்தில் தொழில் நடைபெறும். தடைகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். தாயின் உடன்பிறப்புகளோடும், சகோதர வர்க்கத்தினரோடும் இருந்த பிரச்சினைகள் தானாக விலகும்.

குருப்பெயர்ச்சி காலம்

உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், அக்டோபர் 4–ந் தேதி 10–ம் இடத்திற்கு செல்கிறார். இந்த குரு மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மற்றவர்களுக்கெல்லாம் 10–ல் குரு வந்தால் பதவி மாற்றம் என்பது வழக்கம். அது பொதுநியதி என்றாலும் உங்களைப் பொறுத்தவரை தனலாபதிபதி 10–க்கு வரும்பொழுது தனவரவு அதிகரிக்கும். பதவி உயர்வு கூட ஒரு சிலருக்கு கிடைக்கலாம். தொழில் புரிபவர்களுக்கு கிளை தொடங்கும் வாய்ப்பு உருவாகும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்புக் கிட்டும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

மாதத் தொடக்தக்தில் சுக்ரன் உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அவர் அக்டோபர் 11–ந் தேதி வக்ரம் பெறுகின்றார். 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் தொல்லைகளும், பிரச்சினைகளும் உருவாகலாம். வாரிசுகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பூர்வீகச் சொத்துகளில் பிரச்சினைகள் தலைதூக்கும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரியம் கொஞ்சம் குறையலாம். விரயங்கள் அதிகரிக்கின்றதே என்று கவலைப்படுவீர்கள். விலையயுர்ந்த பொருட்களை வாங்கும் பொழுது கவனம் தேவை. ஒரு சிலருக்கு ஏமாற்றங்கள் வந்து சேரும். எந்த மாற்றமும் உங்களுக்கு நல்ல மாற்றமாக அமைய திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

இம்மாதம் அறுபத்து மூவர் வழிபாடும், வராஹி அம்மன் வழிபாடும் அனுகூலம் தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 17,18,19,25,26,29,30 அக்டோபர்: 10,11,15,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– கருநீலம்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இம்மாதத் தொடக்கத்தில் தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தனித்து இயங்க வாய்ப்புகள் கைகூடி வரும். உடன்பிறப்புகளுடன் இருந்த பிணக்குகள் மாறும். ஊர் மாற்றச் சிந்தனை அதிகரிக்கும். கடன் சுமையில் பாதிக்கு மேல் திருப்பிச் செலுத்துவீர்கள். கணவன் –மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் தாய்வழி ஆதரவும், சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பணி உயர்வும், எதிர்பார்த்த மாற்றங்களும் கேட்காமலேயே கிடைக்கலாம். சக பணியாளர்களால் உங்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் அகலும். அதிகாரிகளின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். வராத சம்பளப் பாக்கிகள் வந்து மகிழ்ச்சியைத் தரும். சனி பார்வை இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை வரும்பொழுது, உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. குலதெய்வ வழிபாடும், நவராத்திரி நாட்களில் துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி வழிபாடும் நன்மையைத்தரும்.

மீனம்

விளம்பி வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் இணைந்திருக்கிறார். குருவின் பார்வை 2, 12 ஆகிய இடங்களில் பதிவதால் வரவும், செலவும் சமமாக இருக்கும். ஒரு சில காரியங்களில் போராட்டத்தின் முடிவிலேயே வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் அதிகரிப்பதால், வீடு மாறலாமா என்ற சிந்தனை உருவாகும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். சப்தம ஸ்தானத்தில் புதன் உச்சம் பெற்றுச் சூரியனுடன் இணைந்திருப்பதால் புத–ஆதித்ய யோகம் உருவாகிறது. எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதால், வரவு திருப்திகரமாகவே இருக்கும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பணியிடத்தில் உங்களது நேர்மையைப் பாராட்டி சில முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்கலாம். 10–ல் சனி இருப்பதால் தொழில் புரிபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பழைய பங்குதாரர்கள் விலக நேரிடலாம். அவர்களின் கணக்கு வழக்குளை ஒழுங்கு செய்து கொண்டு புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன் வருவீர்கள். உடல்நலனில் அவ்வப்போது சிறுசிறு தொல்லைகள் தலைதூக்கும்.

இம்மாதம் உங்கள் ராசிநாதன் குரு, விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகப் போகிறார். அதன் பிறகு அதன் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிவதால் எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போகிறது. குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே நீங்கள் குருவை வழிபடுவது நல்லது. அனுகூலம் தரும் நட்சத்திரத்தில் நீங்கள் வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிகிடைக்கும். பிறக்கும் பொழுது குரு வக்ர இயக்கத்தில் பிறந்தவர்கள், திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது.

துலாம் ராசியில் புதன்

மாதத் தொடக்கத்தில் புதன் கன்னி ராசியில் உச்சம் பெற்று அஸ்தமன இயக்கத்தோடு இருக்கிறார். அவர் அக்டோபர் 2–ந் தேதி துலாம் ராசியில் அடியெடுத்து வைக்கிறார். அக்டோபர் 4–ந் தேதி புதன் வலிமைபெற்று புத–சுக்ர யோகத்தை ஏற்படுத்துகிறார். இதன் விளைவாக சகோதர சச்சரவுகள் அகலும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் உள்ள பகை மாறும். வியாபாரத்தில் முடங்கி இருந்த பணம் இப்பொழுது கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். அலுவலகப் பணியிலிருந்து அகற்றப்பட்ட உத்தியோகஸ்தர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கைகூடும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

அக்டோபர் 4–ந் தேதி விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சியாகிச் செல்கிறார். அஷ்டம குரு 9–ம் இடம் எனப்படும் ஒப்பற்ற இடத்திற்கு வருகிறார். 5–ம் பார்வையாக உங்கள் ராசியையும் பார்க்கிறார். எனவே தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைகள் விலகி ஓடும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். மாலை சூடும் வாய்ப்பும், மக்கள் பேறு கிடைப்பதற்கான சூழ்நிலையும் அமையும். பணிபுரியும் இடத்திலிருந்த பிரச்சினைகள் தானாக விலகும். பணப்புழக்கம் தாராளமாகும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் சகல பாக்கியங்களை வாரி வாரி வழங்குவார். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். பொதுவாக சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

சுக்ரனின் வக்ர இயக்கம்

மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சுக்ரன் பலம் பெற்றிருக்கிறார். எனவே எதிர்பாராத ஒரு சில விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு உண்டாகக்கூடும். அக்டோபர் 11–ந் தேதி சுக்ரன் வக்ரம் அடைகிறார். இது ஒரு வழிக்கு நன்மைதான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கிணங்க அஷ்டமாதிபதி வலிமையிழக்கும் போது மிகச் சிறந்த பலன்கள் வந்துசேரும். குறிப்பாக இதுவரை பலமுறை முயற்சி செய்தும் முடிவடையாத ஒரு சில காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.

இம்மாதம் நவராத்திரி நாட்களில் விரதமிருந்து முப்பெரும் தேவியரை வழிபடுவதோடு, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

செப்டம்பர்: 17, 21, 22, 27, 28 அக்டோபர்: 11, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் குரு இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகக் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். பணியிடத்தில் மாற்றமும், பார்க்கும் வேலைகளில் திருப்தியின்மையும் ஏற்படும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். கணவன்–மனைவி உறவு பலப்படும். பண நடமாட்டம் திருப்திகரமாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மதிப்புக் கொடுப்பர். சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இம்மாதம் திங்கட்கிழமை விநாயகரையும், செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும் வழிபடுவது நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*