
சமஷ்ட்டி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது, அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பால், தமிழர்களது மென்மைப் போக்கை வெளிப்படுத்துவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
காலியில் பெரும்பான்மை இன மக்கள் அதிகம் வசிக்கின்ற பிரதேசம் ஒன்றில் கடந்த வாரம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்களுக்கு சமஷ்ட்டி என்பது தேவையில்லை என்றும், தற்போது இருக்கின்ற மாகாணசபை முறைமையையே சற்று மாற்றினால் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பிலான செய்தியை பதிப்பித்துள்ள த டைம்ஸ் ஒப் இந்தியா, சமஷ்ட்டி அல்லாமல் மாகாண சபை முறைமையை மேலும் விரிவாக்குதன் மூலம் தமிழ் மக்கள் திருப்தி அடையக்கூடும் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செய்தியை வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை எம்.ஏ.சுமந்திரனின் இந்த கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே எதிர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் மக்களுக்கு சமஷ்ட்டி அடிப்படையிலேயே தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகக்கூடாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், கூட்டமைப்பு சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்தே மக்கள் ஆணையைப் பெற்றதாகவும், அதில் இருந்து விலகினால் மீண்டும் மக்களிடம் சென்று அதற்கான ஆணையைப் பெற வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் இந்த கருத்து தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதுவரையில் எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.
எனினும் காலியில் வெளியிட்டிருந்த கருத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.