மேஷத்திற்கு சரளமான பணப்புழக்கம்… ஏனைய ராசிகளுக்கு எப்படி? செப்டெம்பர் மாத ராசி பலன்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேஷம்:

மேஷத்திற்கு இப்போது கிரகநிலைகள் நன்றாக இருக்கின்றன. நல்ல சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வந்து கதவை தட்டும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இந்தமாதம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். தனாதிபதி சுக்கிரன் பலம் பெறுவதால் மாதம் முழுவதும் உங்களிடம் சரளமான பணப்புழக்கம் இருக்கும். எந்தப் பிரச்னையும் எல்லை மீறி போகாது. அனைத்தையும் உங்களால் சமாளிக்க முடியும்.

பிள்ளைகள் விஷயத்தில் மனக்கவலைகள், விரயங்கள், சங்கடங்கள் இருந்தவர்களுக்கு தற்போது ஐந்துக்குடையவன் ஆட்சி பெறுவதால் அவர்கள் மூலம் நல்லவைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் தொந்தரவுகள் இருக்காது. நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். என்ன இருந்தாலும் பணப் பற்றாக்குறை வராது என்பதால் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரப் பிரயாணங்கள் இந்த மாதம் உண்டு.

வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். பொதுவில் இது சிறப்பான மாதம்தான். ராசிநாதன் செவ்வாய் வக்கிர நிலையில் கேதுவுடன் இணைந்திருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் இந்தமாதம் தங்களின் ஜென்மநட்சத்திர தினத்திலோ, அல்லது ஒரு செவ்வாய்கிழமையிலோ தமிழ்வேளாம் குமரக்கடவுளின் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மைகளைத் தரும்.

1,2,4,5,6,11,18,19,20,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ந்தேதி இரவு 7.14 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 4.55 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

ரிஷபம்:

ரிஷபநாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் ஆறாமிடத்தில் எதிரியான குருவுடன் இணைந்திருப்பதால் சிலவிஷயங்கள் உங்கள் கையை மீறி நடக்கும். ஆனாலும் அங்கே சுக்கிரன் பலம் பெறுவதால் அனைத்து நல்ல விஷயங்களும் உங்களுக்கு உண்டு. ரிஷபத்திற்கு இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். ராசிநாதன் ஆறில் இருப்பதால் சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

சுக்கிர, குரு சேர்க்கையால் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகி போவதற்கு வாய்ப்பு இருப்பதால் எங்கும், எதிலும் நிதானத்துடன் இருங்கள். பொதுவாக, அடிக்கடி நான் எழுதுவதுபோல் ரிஷப ராசிக்காரர்களைக் கெடுப்பதற்கு வெளியில் இருந்து ஆள் வரவேண்டாம். உங்களுக்கு நீங்களேதான் எதிரி என்பதால் நீங்களே ஏதாவது தவறாக முடிவெடுத்து வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் பிள்ளைகளால் செலவுகளும், பிற்பகுதியில் அவர்கள் மூலம் நன்மைகளும் இருக்கும். கலைத்துறையினருக்கு சற்று சுணக்கமான மாதம்தான் என்றாலும், உங்களுடைய கடின உழைப்பு என்றுமே வீண் போகாது. அரசுத் துறையினர் இந்த மாதம் நல்ல திருப்புமுனைகளைச் சந்திப்பீர்கள்.

எட்டில் அமர்ந்து கணவன்மனைவி இடையே கருத்து வேற்றுமைகளையும், குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்னைகளையும் சனி செய்து கொண்டு இருக்கிறார். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். மனைவி பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. உங்கள் கௌரவமும் பாழாகாது. அஷ்டமச் சனி நடப்பதால் பத்தொன்பது மிளகை முடிச்சாக கட்டி அந்த முடிச்சை புது மண் அகல்விளக்கில் இட்டு நல்லெண்ணெய் ஊற்றி காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் ஏற்றுவதும் சிரமங்களை குறைக்கும்.

3,4,5,8,9,17,18,19,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ந்தேதி அதிகாலை 4.55 மணி முதல் 19-ந்தேதி மாலை 5.22 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும் சண்டையோ, வீண் வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.

மிதுனம்:

மிதுனநாதன் புதன் மாத ஆரம்பத்தில் தனது அதிநட்பு ஸ்தானத்திலும், மாதம் முழுவதும் உச்சவீட்டிலும் இருக்கப் போவதால் இது மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மைகள் தரும் மாதமாக இருக்கும். புத்தகம், கணக்கு, கம்ப்யூட்டர், பத்திரிக்கைத்துறை, அஞ்சல்துறை, வியாபாரிகள், பச்சைநிறம் சம்பந்தப்பட்டவர்கள், சொல்லி கொடுப்போர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் சிறந்த நல்ல பலன்களும், பணவரவுகளும் இருக்கும். வெகு நாட்களாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக இப்போது கிடைக்கும்.

ராசிநாதனின் வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். ஒரு சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். சிலர் உல்லாச பயணம் செல்ல முடியும். வெகு நாட்களாக ஆரோக்கியக்குறைவு இருந்து வந்த மிதுனராசிகாரர்கள் குணம் அடைவீர்கள். இதுவரை மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு. இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து கொள்ளாமல் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.

2,4,6,8,9,10,17,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ந்தேதி மாலை 5.22 மணி முதல் 22-ந்தேதி காலை 6.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

கடகம்:

மாத ஆரம்பத்தில் கடகநாதன் சந்திரன் யோகம் தரும் அமைப்பில் இருக்கிறார். ராஜயோகாதிபதி செவ்வாய் உச்ச நிலையில் இருப்பது கடகராசிக்கு நன்மை தரும் ஒரு அமைப்பு என்பதால் செப்டெம்பர் மாதம் உங்களுக்கு யோகம் தரும் மாதம்தான். ஒன்பதுக்குடைய குருபகவான் சுக்கிரனுடன் இணைந்து நான்காம் வீட்டில் அமர்ந்து, தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துவதால் வேலை, தொழில் அமைப்பில் எவ்வித சிக்கல்களும் வரப் போவது இல்லை. நாலுக்குடைய சுக்கிரன் வலுப் பெறுவதால் இந்த மாதம் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும்.

தனாதிபதி சூரியன் மிகவும் வலுவாக அவருடைய நண்பரான புதனுடன் தன வீட்டில் இருப்பதால் எதிர்பாராத பண வரவு மாதம் முழுவதும் இருக்கும். யார் வீட்டுப் பணமானாலும் பாக்கெட்டில் புரண்டு கொண்டே இருக்கும். பணத் தட்டுப்பாடு இருக்காது. வேலை தொழில் விஷயங்களில் இருந்து வந்த கலக்கமான, பதட்டமான சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தந்தைவழி தொழில் செய்பவர்கள் போன்றவருக்கு இந்த மாதம் மிகுந்த நன்மைகள் தரும் மாதமாக இருக்கும்.

குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். இளைஞர்களுக்கு பெண் சினேகிதிகள் மூலம் உல்லாச அனுபவங்கள் உண்டு. சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். ஏழில் இருக்கும் செவ்வாயால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.

1,2,3,5,7,12,13,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ந்தேதி காலை 6.11 மணி முதல் 24-ந்தேதி மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. ராசிநாதன் வலிமை இழப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

சிம்மம்:

செப்டம்பர் மாதம் பாதிநாள் வரை சிம்மநாதன் சூரியன் ஆட்சி பெற்ற நிலையிலும் அதன்பின் அவரது நண்பரான உச்சபுதனுடன் இணைந்தும் இருக்கிறார். ராசிநாதன் வலுவாக இருப்பதால் உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும் மிகச்சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். அரசு ஊழியர்கள், தனியார் துறையினர், நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில் புரிவோர், பொதுவாழ்க்கையில் இருப்போர், மக்கள் பிரதிநிதிகள் போன்றவருக்கு இந்த மாதம் மிகச்சிறப்பான பணவரவும், அந்தஸ்தும், கௌரவமும் கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த தகப்பனார்வழி பூர்வீகச்சொத்து கிடைக்கும். தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற முடியும்.

மூன்றில் சுக்கிரன் குரு இணைவதால் மாணவர்களுக்கு கல்லூரிகளில் பெண்கள் சம்பந்தப்பட்ட ஜாலியான அனுபவங்கள் இருக்கும். படிப்பைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யவீர்கள். சிம்மராசி பெண்களுக்கு இது அற்புதமான மாதமாகும். ஆண்கள் உங்களுக்கு அடங்கி நடப்பார்கள். இதுநாள் வரை தொந்தரவு கொடுத்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமானவர் அந்த இடத்திற்கு வருவார். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும்.

உங்களில் மகம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால் இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு. பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும். செப்டெம்பர் மாதம் சிலருக்கு திருப்பங்களைக் கொடுக்கும் என்பதால் இந்த மாதம் நல்ல மாதமே.

1,4,5,6,7,8,20,21,22,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ந்தேதி மாலை 5.15 மணி முதல் 27-ந்தேதி அதிகாலை 1.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல் எதுவும் நடக்காது. இருந்தாலும் நீண்ட தூர பிரயாணங்கள் புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எதுவும் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

கன்னி:

கன்னிநாதன் புதன் மாதம் முழுவதும் வலிமை பெற்று வலம் வருவதால் இது கன்னிக்கு நல்ல திருப்பங்களையும் சாதகமான பலன்களையும் தருகின்ற மாதமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்து, கௌரவம் ஓங்கி நிற்கும் காலம் இது. ராசிநாதன் வலுப்பெற்றதால் உங்கள் எண்ணங்கள் செயலாகி நினைத்தது நடக்கும். சொன்னது பலிக்கும். மாதபிற்பகுதியில் தனநாதன் சுக்கிரனும் குடும்ப வீட்டில் வலுவாக இருப்பதால் பணவரவும் சிறப்பாக இருக்கும். குருவும் சாதகமான நிலையில் தன ஸ்தானத்திலும் இருப்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி எதிர்கால நல்வாழ்க்கைக்கான அடிப்படைகளை இப்போது அமைத்துக் கொள்ளுங்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர், மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் இருக்கும். சுக்கிரன் வலுப்பெறுவதால் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வரும் சுபகாரியங்கள் சட்டென்று முடிவாகி ‘ஜாம்ஜாம்’ என்று நடைபெறும். இன்பச்சுற்றுலா செல்லுவீர்கள். சகோதர,சகோதரிகள் உதவுவார்கள். வீட்டுக்கு தேவையான வாஷிங்மிஷின், குளிர்சாதனபெட்டி, ஏசி போன்றவைகளை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் உங்கள் மனம் போல நிறைவேறும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.

விரயாதிபதி சூரியன் வலுப்பெறுவதால் தேவையற்ற வழிகளில் வீண் செலவு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிர்காலத் தேவைக்கு கிடைக்கும் பணத்தை சேமிப்பது நல்லது. பெண்கள் வகையில் நல்ல விஷயங்கள் நடக்கும். குழந்தைகள் உங்களின் சொல்பேச்சை கேட்டு நடப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் முட்டல், மோதல் இருந்தாலும் ஒரு வழியாக சமாளித்து விடுவீர்கள். எழுத்துத்துறையினர், ஊடகத்தினர், கணக்கு, சாப்ட்வேர், தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் போன்றவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ‘அன்னை மீனாட்சியை’ ஒருமுறை தரிசிப்பது அனைத்து வளங்களையும் தரும்.

7,8,9,10,11,15,16,17,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ந்தேதி அதிகாலை 1.54 மணி முதல் 29-ந்தேதி காலை 8.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள் அவசரமான மாற்றங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி பெறுவது உங்களுக்கு “பருத்தி புடைவையாய்க் காய்த்தது” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து விஷயங்களும் அதிக முயற்சி இன்றி நடக்ககூடிய வகையில் இந்த மாதத்தை அமைத்து தரும். சுக்கிர வலுவால் மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள்தான். முப்பது வயதுகளில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை, குடும்பம், தொழில் போன்ற அனைத்திலும் செட்டில் ஆக வேண்டிய காலகட்டம் என்பதால் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு.

இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் அமையும். செலவுகளும் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும் என்பதால் வீடு கலகலப்பும், சிரிப்புமாக இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும் ஆனால் சேமிக்கத்தான் முடியாது. அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்பத்தாரோடு சேர்ந்து வெளியூர் பயணம் செல்வீர்கள். சில புதிய அறிமுகங்கள் இப்போது உண்டு. இளைய பருவத்தினருக்கு பொருளாதார நிலைமை மேம்படும். எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். சிலருக்கு ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும் முதல் திருமணம் கசப்பில் முடிந்து விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான சம்பவங்கள் இருக்கும்.

1,2,3,4,12,13,14,16,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2ம் தேதி அதிகாலை 3.01 முதல் 4-ம் தேதி காலை 7.32 வரையும், மாத இறுதியில் 29-ந்தேதி காலை 8.26 மணி முதல் 1-ந்தேதி மதியம் 1.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடிந்து விட்ட காலம் இது. மனதைத் தளர விடவேண்டாம். வரும் குருப்பெயர்ச்சி முதல் தொந்தரவுகள் எதுவும் இருக்கவே இருக்காது. இந்தவருடத்தோடு உங்கள் பிரச்னைகள் அத்தனையும் ஒழியும் என்பது உறுதி. இந்த மாதம் ஜீவனாதிபதி சூரியன் சுபத்தன்மை அடைவதால் தொழில் மூலம் வருமானங்கள் இருக்கும். எனவே எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. செலவுக்கேற்ற பணவரவு இருக்கும். கவலைப்படத் தேவையில்லாத மாதம் இது.

ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில் இருப்பது பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் கவசம் என்பதால் செப்டெம்பர் மாதத்தில் இருந்து சற்று நிம்மதியாக உணருவீர்கள். ராசிக்கு எந்தவித சுபர் சம்பந்தமும் இல்லாமல் இருந்த நிலைமாறி இன்னும் சில வாரங்களில் குரு ராசியில் அமரப் போவதால் அனைத்தும் இனி விருச்சிகத்திற்கு நல்லதாய் நடக்கும். இரண்டில் சனி இருப்பதால் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினமாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்கும் உதவி செய்வதாகவோ பணம் தருவதாகவோ வாக்கு கொடுக்க வேண்டாம். நிறைவேற்றுவது கடினம். பொருளாதார நிலைமை கெடாது. பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் இனிமேல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் துணிவு வரும்.

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது.

3,5,7,8,9,12,13,14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ந்தேதி காலை 7.32 மணி முதல் 6-ந்தேதி காலை 9.45 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருப்பது நல்லது. எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சண்டை வந்தாலும் ஒதுங்கி போவது நல்லது.

தனுசு:

தனுசுநாதன் குருபகவான் ராசியின் எதிர்த்தன்மை உடைய கிரகமான சுக்கிரனுடன் இருக்கிறார். ஆறுக்குடைய எதிரிக் கிரகம் வலுவாக இருப்பதால் மாதம் முழுதும் நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் நடக்கும். பிடிக்காத ஒருவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு போராட வேண்டியிருக்கும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களும் இப்போது நடக்கும். செய்யும் வேலையை விடவே விடாதீர்கள். ஆனால் சனி விட வைத்து விடுவார். தனுசுராசி இளைஞர்களுக்கு இப்போது போராட்ட காலம். எதுவும் முயற்சி செய்தால்தான் கிடைக்கும். சோம்பலின்றி சுறுசுறுப்பாக செயலாற்றினால் அனைத்தையும் ஜெயிக்கலாம் என்பது உறுதி.

ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர் அதிக வட்டி கட்டும் சூழலில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டு என்ற ஒன்று இருப்பதை மறந்து விடுவது நல்லது. சொல்லிக் கொடுக்கும் தொழில்புரிவோர், மார்க்கெட்டிங் போன்று பேச்சுத் திறமையால் வேலைசெய்பவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் போன்றவருக்கு பணியிடங்களில் நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து போவது நல்லது.

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வாக்குவாதத்தை தவிருங்கள். இளைய பருவத்தினர் ஏழரைச்சனி காலத்தில்தான் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் என்பதால் காதல், கீதல் என்று உங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்தினால் வானம் உங்கள் வசப்படும். சனிக்குப் பரிகாரமாக பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவதும் நன்மைகளை தரும்.

1,2,9,10,11,17,18,19,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ந்தேதி காலை 9.45 மணி முதல் 8-ந்தேதி காலை 10.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக கடகராசிப் பெண்களிடம் விலகி இருக்கவும்.

மகரம்:

செப்டம்பர் மாதம் உங்களுக்கு சுமாரான மாதம்தான். வரப்போகும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மகரத்திற்கு நல்லபலன்கள் நடக்கும். அடுத்த மாதம் முதல் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். எவரிடமும் கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

செவ்வாய், கேது ராசியில் இணைந்திருப்பதால் சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். நீண்ட நாளாக தரிசிக்க நினைத்திருந்த புனிதத்தலங்களை இப்போது தரிசிக்க முடியும். மகான்களின் ஆசி கிடைக்கும். சித்தர்கள் அடங்கிய ஜீவசமாதிக்கு சென்று வர முடியும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள் கணவன் மனைவி உறவு சுமுகமாய் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் நல்ல பொருளை பரிசளிக்க முடியும். வீடு வாகனம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஒருசிலர் இந்த மாதம் வாங்கவும் செய்வீர்கள்.

வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும். வியாபாரிகள் வேலைக்காரர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள் உண்டு. கணவர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார். மாணவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், போன்ற அனைவருக்கும் நல்லமாதம் இது. சுயதொழில் செய்பவர்கள், விமான நிலையங்களில் பணிபுரிபவர்கள், இன்ஜினியர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட துறையினருக்கு நல்ல பலன்கள் நடைபெறும். ஏழரைச்சனி நடந்து வருவதால் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிரமங்களை குறைக்கும்.

2,3,4,5,6,9,11,13,14,15 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ந்தேதி காலை 10.29 மணி முதல் 10-ந்தேதி காலை 11.08 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உங்களின் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகளையும் செய்யக்கூடாது.

கும்பம்:

குருபகவான் ராசியைப் பார்த்து சுபப்படுத்துவதால் கஷ்டங்கள் விலகும் மாதம் இது. பிரச்னைகள் எதுவும் இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும்.

வியாபாரிகளுக்கு மந்த நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். இதுவரை வராமல் இருந்த பாக்கி இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

குழந்தைகள் விஷயத்தில் செலவுகள் வரும். பெண் குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. பத்தாமிடம் வலுப் பெற்று இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் வரவுகளும் ஆதாயங்களும் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி வரும். நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்வகையில் மனக்கசப்புக்கள் அல்லது பூர்வீகச் சொத்து விஷயத்தில் இடையூறுகள் இருக்கும். சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது.

5,6,7,11,12,13,19,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ந்தேதி காலை 11.08 மணி முதல் 12-ந்தேதி மதியம் 1.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் பெரிய சங்கடங்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் ஆரம்பங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

மீனம்:

ராசிநாதன் குரு தனக்கு எதிர்த்தன்மையுள்ள கிரகமான சுக்கிரனுடன் இணைந்து எட்டில் இருக்கிறார். அங்கே சுக்கிரன் வலுவாக இருப்பது மீன ராசிக்கு குழப்பம் தரும் ஒரு நிலைமைதான். இந்த மாத கிரக அமைப்பால் உங்களில் சிலர் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அவரை இந்த மாதம் பார்ப்பீர்கள். அதைவிட மேலாக பிடிக்காத ஒருவருடன் இருந்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள். பணத்தைக் கொடுத்து மனதைக் கெடுக்கும் மாதம் இது.

குருவும், சுக்கிரனும் எட்டில் இணைந்து மறைவதால் சின்ன விஷயத்திற்கு கூட நீங்கள் எரிச்சல் அடைவதற்கோ, தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு உங்கள் பெயரை கெடுத்து கொள்வதற்கோ வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். வீடு, குடும்பம், வேலை, தொழில் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாத மாறுதல்கள் இருக்கும். அந்த மாறுதல்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லவையாக அமையும் என்பதால் வருகின்ற மாறுதல்களை ஏற்று கொண்டு அதன்படி நடப்பது நல்லது. உங்களில் உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்களும் நிம்மதியைத் தரக்கூடிய விஷயங்களும் நடக்கும்.

சுக்கிரன் எட்டில் இருந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு சற்று அப்படி இப்படித்தான் இருக்கும். எதிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல விஷயங்கள்தான் நடக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவதற்கோ, சம்பளம் தாமதம் ஆவதற்கோ வாய்ப்புக்கள் இருப்பதால் அனாவசிய செலவுகள் செய்யாமல் சிக்கனமாக இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு குறிப்பாக தொலைக்காட்சி துறையினருக்கு இது சிறந்த மாதம். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம். மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிமும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம். ஐந்தில் இருக்கும் ராகு சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் அனைத்துப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள்.

2,3,4,10,14,15,16,21,23,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ந்தேதி மதியம் 1.31 மணி முதல் 14-ந்தேதி இரவு 7.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*