வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அதிரடி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகள் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில், வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியின் இரண்டாவது கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் பல்வேறு அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, வடக்கு கிழக்கில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இந்த காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி தலைமையில், தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வடக்கு கிழக்கில் கைவிடப்பட்டுள்ள கைத்தொழில்களை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கில் போதைப் பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி காவற்துறையினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற வன்முறைகளை தடுப்பதற்கும், மக்களது சுமுகமான வாழ்க்கையை உறுதி செய்வதற்குமான நடவடிக்கைகளை துரிதமாகவும், விசேடமாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இன்றையக் கூட்டத்தில் அதிகபடியான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், இடவசதி கருதி, அடுத்தக் கூட்டத்தை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 3ம் கட்ட கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்த செயலணிக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை.

எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை தவிர, ஏனைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தவிர, அமைச்சர் மனோ கணேஷன், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுடன், பிரதி அமைச்சர்களான அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

அடுத்தக் கூட்டத்தின் போது அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அரச சேவையில் நிலவும் வேதன முரண்பாடுகளை சீராக்கும் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

அரச துறையினரின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கைகள், ஏற்பாடுகள் தொடர்பாக கவனஞ்செலுத்தி, பிரச்சினைகளோ முரண்பாடுகளோ காணப்படின் அவற்றைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கடந்த 14ஆம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நிமிக்கப்பட்ட இந்த குழுவில், எஸ்.ரணுக்கே தலைவராகவும், எச்.ஜி.சுமனசிங்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் குறித்த பரிந்துரைகளை 2018 ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கி இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிர்வரக்கூடிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவை தயாரிக்கின்றபோது இதனை வழிகாட்டியாக கொள்ளமுடியும் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*