
ஒருவருக்கு காதல் கை கூடவேண்டும் என்றால் சுக்கிரனின் அருள் வேண்டும். அதிலும் காதலித்தவரையே கைப்பற்ற வேண்டும் என்றால் சுக்கிரனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு ஜாதகத்தில் காதலை குறிப்பிடும் பாவம் ஐந்தாம் பாவமாகும். பூர நக்ஷத்திரம் கால புருஷனின் ஐந்தாம் வீடாகிய சிம்மத்தில் அமைந்திருப்பதன் மூலம் காதலுக்கும் பூரத்திற்க்கும் உள்ள தொடர்பை உணர முடியும்.
கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையை நிறைவடைய செய்யும் காதல் மற்றும் காமத்தின் காரகரும் சுக்கிர பகவனேதான். சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்பு மற்றும் நீசம், வக்ரம், பாவர்கள் தொடர்பு பெற்றுவிட்டால் அவர் வாழ்க்கையில் படுக்கை சுகமும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் எட்டாகனிதான்.
காலையில் இருந்து எத்தனை விஷயங்களில் வெற்றி பெற்றுவிட்டாலும் இரவில் படுக்கையில் ஒருவர் தோற்றுவிட்டால் அவர் நிலையை யோசித்து பார்க்கவே முடியாது. ஒருவர் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து நின்றுவிட்டாலோ, சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நின்று விட்டாலோ அவர்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்துவிடும்.
தூக்கத்தை தீர்மானிக்கும் முக்கிய கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்க்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூரநக்ஷத்திரம் கட்டில் கால் வடிவில் இருப்பதில் வியப்பென்ன இருக்கமுடியும்?
இவை மட்டுமல்லாது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற சுக்கிரனின் அருள் வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பரணி, பூரம் மற்றும் பூராடம் ஆகிய நக்ஷத்திரங்களின் அதிதேவதை மஹாலக்ஷமி எனவும் பூர நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் மஹாலக்ஷமியின் அவதாரமான ஆண்டாள் எனவும் நக்ஷத்திர சிந்தாமணி எனும் பழம்பெரும் ஜோதிட நூல் கூறுகிறது.
ஜோதிட ரீதியாக காதலில் வெற்றி பெறும் அமைப்பு யாருக்கு?
1. சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப மற்றும் துலாம் ராசியை லக்னமாகவோ சந்திரா லக்டனமாகவோ கொண்டவர்கள்.
2. சுக்கிரன் ரிஷபம் அல்லது துலா ராசியில் ஆட்சி பெற்றவர்கள் மற்றும் மீனத்தில் உச்சமடைந்தவர்கள், கன்னியில் புதன் சந்திரனோடு சேர்ந்து நின்று நீசபங்க மடைந்தவர்கள்.
3. லக்னம் சுக்கிரன் சாரத்தில் அமையப்பெற்றவர்கள்.
4. பஞ்ச மகா புருஷயோகத்தில் மாளவியா யோகம் பெற்றவர்கள்.
5. சுக்கிரன் ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள்
6. எந்ந லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள்.
7. ரிஷப, துலாம் வீடுகளை 2,5,7,9 வீடுகளாக அமையப்பெற்றவர்கள் அல்லது 2,5,7,9 ஆகிய வீடுகளில் சுக்கிரன் நிற்கப்பெற்றவர்கள்.
8. ஜோதிடத்தில் செவ்வாய் ஆண்மகனையும், சுக்கிரன் அழகிய இளம்பெண்ணையும் குறிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் எந்த விததில் சேர்க்கை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு காதல் மற்றும் காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இத்தகைய அமைப்பு பெற்றவர்கள் காதலில் ஒரு வேகத்தோடு இருப்பதோடு அதிகமாக வளையல்/ரிஸ்ட் பேண்ட் போன்ற ஆபரணங்களை தன் காதலர்/காதலிக்கு வழங்க விரும்புவார்கள்.
இந்த ஆடி பூர நாளில் திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும், சண்டை போட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாக கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும், வியாபரத்தில் பிரச்சனை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும், அனைத்து பகைவர்களும் நட்பு பாராட்ட விரும்புபவர்களும் அன்னை ஆண்டாளை வணங்குவது சிறப்பாகும்.