விருச்சிக ராசிக்கு பணம் கொட்டப் போகுது… ஏனைய ராசிகளுக்கு எப்படி? ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

பிறப்பு : - இறப்பு :

astrology_july

மேஷம்:

ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு மிகவும் நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதுவரை இருந்து வந்த தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் மேஷ ராசியினர் எந்த விஷயத்திலும் இனிமேல் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும்.

வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும்.
கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். சிலருக்கு சுபச்செலவுகளும், விரயங்களும் இருக்கும். செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த மாதம் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும். அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள். பொதுவில் இது சிறப்பான மாதம்தான்.

1,2,3,7,8,9,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி காலை 10.59 மணி முதல் 20-ம் தேதி இரவு 9.41 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள், ஆரம்பங்கள் எதையும் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதமோ, வீண் பிரச்சனைகளையோ செய்ய வேண்டாம்.

ரிஷபம்:

உங்களின் முயற்சிகள் தடைபடும் தரும் மாதமாக ஆகஸ்டு மாதம் இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் நீசமாக இருப்பதால் குழப்பங்களும், சாதகமற்றவைகளும் இப்போது இருக்கும். அஷ்டமச்சனியின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதால் இளைய பருவத்தினர் கடுமையாக உழைக்க வேண்டிய மாதம் இது. ரிஷபத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள்.

சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாத நிலைமை இருக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும். சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள்.

2,4,6,10,14,15,22,23,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி இரவு 9.41 மணி முதல் 23-ம் தேதி காலை 10.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் வலுக்குறைந்து இருந்தாலும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்ல அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு தந்தையின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் உண்டு. வயதான தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். பழைய கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
ஆறுக்குடையவன் உச்ச வலுப் பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராசிநாதனை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் சேருவார்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

நீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தாய் வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும்.

திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம். ஆகஸ்டு மாதம் மிதுனத்திற்கு தொல்லைகள் எதுவும் தராமல் நன்மைகள் மட்டுமே இருக்கும் மாதம்தான்.

5,6,8,9,11,12,22,24,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி காலை 10.26 மணி முதல் 25-ம் தேதி இரவு 11.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது.

கடகம்:

கடகத்திற்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. எல்லாவகையிலும் சந்தோஷமாக இருப்பீர்கள். அவரவர்களின் வயதுக்கு தகுந்தபடி நல்ல விஷயங்கள் மட்டுமே இந்த மாதம் நடக்கும்.

குறிப்பாக இளைய பருவத்தினரின் ஆனந்த மாதம் இது. பருவத்திற்கேற்ப உல்லாசமாக இருப்பீர்கள். ஆணுக்கு, பெண்ணையும் பெண்ணுக்கு ஆனையும் அறிமுகப்படுத்தும் மாதம் இது. எதிர்கால நன்மைக்கு தேவையான அத்தனையும் இப்போது கிடைக்கும். உங்களில் பூசம் நட்சத்தினருக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகள் இந்த மாதம் அமையும்.

வருமானத்தை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். நீங்கள் மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

2,3,4,5,11,12,13,28,29,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி இரவு 11.14 மணி முதல் 28-ம் தேதி காலை 10.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட நாட்களில் நீண்ட பிரயாணங்களோ, புதிய முயற்சிகளோ செய்வதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் ஆகஸ்டு மாத முற்பகுதியில் பனிரெண்டில் மறைந்திருந்தாலும் பிற்பகுதியில் அவர் ராசியில் ஆட்சி பெறுவது யோக அமைப்பு என்பதால் ஆகஸ்டு மாதம் கெடுதல்கள் இல்லாத நல்ல மாதமாகவே இருக்கும். உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. குருபகவான் மூன்றாமிடத்தில் அமர்ந்து ஒன்பதைப் பார்ப்பதால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது கிடைக்கும். ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் இப்போது வெற்றியாகும். சிம்மத்தினர் அனைவருமே புத்துணர்ச்சி பெறும் மாதம் இது.

உங்களில் தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் சிலருக்கு பொருள் சேர்க்கையும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள்.

வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது.

1,2,4,5,6,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி அதிகாலை 4.54 மணி முதல் 3-ம் தேதி மதியம் 2.25 மணி வரையும், மாத இறுதியில் 28ம் தேதி காலை 10.39மணி முதல் 30ம் தேதி இரவு 8.01 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

கன்னி:

ராசிநாதன் புதன் பலவீனம் அடைந்திருந்தாலும் குருபகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும் மாதம் இது. ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடைபெறும்.

அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக்குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களில் சிலர் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.

பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். கோபத்தை தவிருங்கள். மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் கன்னியின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.

3,8,9,10,16,17,18,19,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 3-ம் தேதி மதியம் 2.25 மணி முதல் 5-ம் தேதி இரவு 8.45 மணி வரையும், மாத இறுதியில் 30ம் தேதி இரவு 8.01 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி அதிகாலை 3.01 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் மேற்கண்ட தினங்களில் எடுக்க வேண்டாம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள் என்பதால் ஆகஸ்டு மாதம் உங்களின் குணநலன்களுக்கு ஏற்ப நன்மைகளை மட்டும் தரும் மாதமாக இருக்கும். உங்களை சந்தோஷப்படுத்தும் மாதம் இது. துலாத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் என்று சொல்ல எதுவுமே இல்லை. இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் வீட்டிற்குள் வரும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் எதையும் சாதிப்பீர்கள். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் நல்ல வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.
இளைஞர்களுக்கு எதிர்மறை பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும்.

உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு.

1,2,4,7,11,16,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி இரவு 8.45 மணி முதல் 7-ம் தேதி இரவு 11.49 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்:

ஆகஸ்ட் மாதம் விருச்சிக ராசிக்கு ஆனந்த மாதமே. வருமானமும், எதிர்பாராத பண வரவும், திருப்தியாக வரும். வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு பணஉதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. அலட்சியம் வேண்டாம். பெண்கள் விஷயத்தில் கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.

இளைஞர்களின் மனோதைரியம் கூடுதலாகும். பிரச்னைகளை இனிமேல் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். புதிய முயற்சிகளை சிலவாரங்களுக்கு தள்ளி வைப்பது நல்லது. பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். இதுவரை மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் உதவுவார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். விருச்சிகத்திற்கு நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும் மாதம் இது.

3,8,11,12,13,14,21,22,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி இரவு 11.49 மணி முதல் 10-ம் தேதி அதிகாலை 12.25 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். மேற்கண்ட தினங்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.

தனுசு:

தனுசு ராசி இளைஞர்களுக்கு முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்தமாதம் நல்லவைகள் நடக்கும். கிரக அமைப்புகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசியில் இருக்கும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். குறிப்பாக மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சனி இப்போது மூல நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள், வேலையில் நெருக்கடிகள், மன அழுத்தம் தரும் சம்பவங்கள், காதல் தோல்வி போன்றவைகள் இருக்கும். எதிலும் நிதானமும், தைரியமும் தேவைப்படும்.

என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த மாதம் சுமாரான மாதமாகத்தான் இருக்கும். ஏழாம் அதிபதிக்கு பாபகிரக தொடர்பு இருப்பதால் கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது.

உங்களை கோபப்படுத்தி எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். உங்களின் நண்பர்களே உங்களின் கோபத்தால் பாதிக்கப்பட்டு எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். பொதுவில் இளையவர்களுக்கு நிதானமான பலன்களும், பெரியவர்களுக்கு நல்ல பலன்களும் நடக்கும் மாதம் இது.

5,6,7,11,12,13,19,24,25,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி இரவு 12.25 மணி முதல் 12-ம் தேதி அதிகாலை 12.05 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய ஆரம்பங்கள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். கூடுமான வரை நீண்ட பிரயாணங்களை தவிர்ப்பதும் நல்லது.

மகரம்:

மகர ராசியினர் தேவையற்ற கோபத்தையும் அடுத்தவர் மேல் காட்டவேண்டிய எரிச்சலையும் வீட்டில் காட்டுவீர்கள் என்பதால் நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது. ராசியில் செவ்வாய், கேது, ஏழில் ராகு என்ற அமைப்பு இப்போது மகரத்திற்கு இருப்பதால் ஒருமுறை ராகு, கேது பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று ராகு,கேது பரிகாரங்களை செய்து வாருங்கள். உங்களில் சிலருக்கு இந்த மாதம் பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.

ராசிநாதன் வலுவாக குருவின் வீட்டில் இருப்பதால் பெரிய கெடுபலன்கள் எதுவும் வரப்போவது இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் லாபத்துடன் இயங்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. வேகமாக போய்க் கொண்டிருக்கும் கார்
வேகத்தடையை பார்த்ததும் வேகம் குறைவதைப் போல சிலருக்கு மட்டும் எதிர்மறை அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு நிறைய மாற்றங்கள் இருக்கும். வேலையில் டிரான்ஸ்பர் கிடைத்து ஊரை விட்டு மாறுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும்.

ஆறாமிடம் பாபத்துவம் பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். தன, லாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் பணவரவு இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.

1,2,4,10,11,12,21,24,25,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி அதிகாலை 12.05 மணி முதல் 14-ம் தேதி அதிகாலை 12.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆயினும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

கும்பம்:

கும்ப ராசிக்கு எதிர்மறை பலன்கள் எதுவும் இருக்காது. நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இந்த மாதம் ஆரம்பிக்கும். உங்களின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முக்கியமான பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும்.

கும்பத்திற்கு எப்போதோ ஒருமுறை நன்றாக அமையும் கோட்சார கிரகநிலைகள் இப்போது நன்றாக அமைந்திருக்கின்றன. ஆனாலும் பிறந்த ஜாதகப்படி நன்மை தரும் தசாபுக்தி அமையாத சிலர் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ராசிப்படி பலன் சொல்வது இன்றைய கிரக நிலையான கோட்சார நிலையை கணித்து சொல்லப்படுவது. ஆனாலும் நீங்கள் பிறந்த ஜாதகத்தின் படி என்ன தசா, புக்திகள் நடக்கின்றன

என்பதுதான் மிகவும் முக்கியம். தசா, புக்தி அமைப்பு சரியில்லை என்றாலும் கோட்சார நிலைகளை வைத்து ஓரளவிற்கு சமாளிக்க முடியும். எனவே கும்பத்திற்கு கெடுதல் சொல்வதற்கு இல்லை. நல்ல தசாபுக்தி அமையப் பெற்ற கும்ப ராசிக்காரர்கள் இந்தமுறை மனதளவிலும் உடல்நிலையிலும் பத்துவயது குறைந்து புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம்.

நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இனிமேல் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

3,5,6,11,13,14,21,22,23,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி அதிகாலை 12.39 மணி முதல் 16-ம் தேதி அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

மீனம்:

தொழில், வேலை போன்ற விஷயங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல வருமானத்துடனும், வரவுடன் இருக்கும் என்பதால் மீனராசிக்காரர்கள் வெற்றி பெறும் மாதமாக இது இருக்கும். வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இடைஞ்சல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆவார். வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும்.

அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு.

இளைய பருவத்தினருக்கு திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள். பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு.

1,8,9,10,15,16,19,21,22,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி அதிகாலை 3.55 மணி முதல் 18-ம் தேதி காலை 10.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், புதிய ஆரம்பங்கள் எதையும் ஒத்தி வைப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit