21வது கால்பந்து உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கப்போவது யார்? இன்று பலப்பரீட்சை

பிறப்பு : - இறப்பு :

21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமானது.

32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்ஸூம், குரோஷியாவும் இறுதிப்போட்டியில் இன்று சந்திக்கின்றன.

இப்போட்டி மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி மைதானத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

1998 ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2 வது முறையாக வாகை சூடும் முனைப்பில் உள்ளது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது.

இந்நிலையில் குரோஷிய வீரர்கள் தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள் என்பதால் பிரான்ஸூம் தனது வியூகங்களை கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பின்களத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.

இந்த உலக கிண்ணத்தில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்ததும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியாவின் எழுச்சியை பறைசாற்றுகிறது.

மூன்று ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்து சளைக்காமல் போராடி வெற்றிப்பாதைக்கு திரும்பிய குரோஷிய வீரர்கள் மனவலிமை மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் உலக கிண்ணத்தில் இதற்கு முன்பு 1998 ஆம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க குரோஷிய வீரர்கள் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் கொட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

கடைசியாக நடந்த மூன்று உலக கிண்ண இறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்திற்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திற்கோ அல்லது பெனால்டி ஷூட் – அவுட்டுக்கோ சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏனெனில் குரோஷியா ஏற்கனவே 2 வது சுற்று மற்றும் கால்இறுதியில் பெனால்டி ஷூட் – அவுட் அனுபவத்தை சந்தித்து இருக்கிறது.

இறுதிப்போட்டியில் களம் காணும் உத்தேச அணி பட்டியல் வருமாறு:-

பிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கோல் காப்பாளர்), பெஞ்சமின் பவார்ட், ரபெல் வரானே, சாமுல் உம்டிடி, லுகாஸ் ஹெர்னாண்டஸ், பால் போக்பா, நிகோலோ கன்ட், கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பிளைஸ் மடுடி, ஆலிவர் ஜீருட்.

குரோஷியா: டேனிஜெல் சுபசிச் (கோல் காப்பாளர்), சிம் வர்சல்ஜ்கோ, டேஜன் லோவ்ரென், டோமாகோஜ் விடா, இவான் ஸ்டிரினிச், ராகிடிச், மார்சிலோ புரோஜோவிச், ஆன்ட் ரெபிச், லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச், மான்ட்ஜூகிச்.

இறுதிப்போட்டி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit