டெல்லியை அலறவைத்த 11 பேர் தற்கொலை… பொலிஸ் விசாரணையில் விலகியது மர்மம்

பிறப்பு : - இறப்பு :

டெல்லியில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அனைவரும் தூக்குப் போட்டுதான் இறந்துள்ளதாக உடற்கூறு ஆய்வின் இறுதி அறிக்கை தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.

10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்துள்ளார்.

அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? எனக் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீட்டில் விசாரணை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வீட்டிற்குள்ளேயே கோயில் கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது.

வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். எனவே மூட நம்பிக்கையால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகித்தனர். மட்டுமின்றி அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டிருந்தன.

11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

மட்டுமின்றி வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன.

ஆனால் அவை தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்ததால் விசாரணை அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் என்பவர். தொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்துள்ளார்.

மேலும் மோட்சத்தை அடைய தற்கொலைதான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரிடம் லலித் தெரிவித்துள்ளார்.

இந்த மர்ம மரணத்தின் புதிரை அவிழ்க்க பொலிசார், அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர், தொழிலதிபர்கள் உட்பட 130 பேரிடம் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில், மரணமடைந்த அந்த 11 பேரில் புவனேஷ், கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கிறார் என்கிற தகவலை தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லலித் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் நடந்தவற்றையும், தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்த வழிகாட்டுதல்களையும் மறைந்த தனது தந்தை தனக்கு சொன்னதாகவும் சிலவற்றை டைரியில் எழுதி வைத்துள்ளார்.

அதில் ஆன்மா, இறப்பு, மோட்சம், சொர்க்கம் என பல்வேறு விடயங்கள் உள்ளன. டைரியில், கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி எழுதப்பட்டவற்றில், ‘தீபாவளி கொண்டாடப்பட்டுவிட்டது. யாரோ செய்த தவறால் சிலவற்றை அடைய முடியவில்லை. நீங்கள் அடுத்த தீபாவளியை பார்க்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையை உதாசீனப் படுத்தாதீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வீட்டில் 10 பேர் உடல்கள் தூக்கில் தொங்கியவாறும் நாராயண் தேவியின் உடல் மட்டும் தரையில் கிடந்த நிலையிலும் மீட்கப்பட்டது.

அதனால் நாராயண் தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை நேற்று பொலிசாருக்கு கிடைத்தது.

அதில் அனைவருமே தூக்குப் போட்டுதான் இறந்திருக்கிறார்கள் என்றும் நாராயண் தேவியின் கழுத்திலும் ஒயர் மாட்டப்பட்டிருந்தது என்றும் அவரும் தூக்கில் தொங்கிதான் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த 11 பேரும் தூக்கில் தொங்கிதான் இறந்துள்ளனர் என்கிற முடிவுக்கு பொலிசார் வந்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit