மீண்டும் கிளம்பும் பூதம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திடீரென ஏற்பட்ட சுகவீனத்தினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த எதிர்கட்சித் தவைரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வீடு திரும்புவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது மகனான நாமல் ராஜபக்சவும் அவரைச் சந்தித்திருந்தனர்.

நாமல் ராஜபக்சவை தலைமைப் பதவிக்கு கொண்டு வரும் திட்டத்துடன் மகிந்த ராஜபக்ச செயற்படுகிறார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விமர்சித்து வருவதை மெய்ப்பிக்கும் விதமாக இதுபோன்ற சந்திப்புகளுக்கு அவரையும் அழைத்துச் செல்கிறார் மகிந்த.

சம்பந்தன் குணமடைந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச அவரைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தார் என்பதால் கொஞ்சம் அரசியலையும் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று வரும் போது அதனைக் குழப்ப வேண்டாம் என்று மகிந்தவிடம் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சம்பந்தன் தீர்வு என்று குறிப்பிட்டது புதிய அரசியலமைப்பைத் தான். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று அவர் இன்னமும் நம்புகிறார்.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றக் கூடியதாகவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடியதாகவோ இல்லாவிடினும் புதிய அரசியலமைபு ஒன்றின் ஊடாக அவற்றை முற்றாக தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தனிடம் இருக்கிறது.

அதனால் தான் அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது போனாலும் பரவாயில்லை. அவற்றைக் குழப்பி விடாதீர்கள் என்ற தொனியில் சம்பந்தன் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.மகிந்த ராஜபக்சவோ சம்பந்தனின் அந்த வேண்டுகோளை காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைவர்களுடன் தான் இணக்கமாக இருக்கிறேன், அவர்களின் மீது அக்கறை கொண்டுள்ளேன் என்று வெளியே காண்பிப்பதற்காக இதுபோன்ற சந்திப்புகளை வைத்துக் கொள்ளும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உண்மையான முயற்சிகளை எடுக்கவோ அவ்வாறான முயற்சிகளைக் குழப்பாமல் இருப்பதற்கோ தயாராக முடியவில்லை.

சம்பந்தனைச் சந்தித்த சில மணி நேரங்களின் பின்னர் ஹோமகமவில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, புதிய அரசியலமைப்பை நாட்டைப் பிரிக்கின்ற சர்வதேச சதி என்று கூறியதுடன், தான் கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையவில்லை என்றும், சர்வதேச சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு விடயங்களும் தான் மகிந்தவின் அடுத்த கட்ட அரசியலுக்கான அத்திபாரங்களாக உள்ளன. உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தலைமை தாங்கவுள்ளார். அவரது அந்த நடவடிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் அடுத்த நகர்வாக இருக்கும்.

சுதந்திரக் கட்சியின் யாப்பின்படி இன்னொரு கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் அங்கம் வகிக்க முடியாது. மகிந்த ராஜபக்ச பொதுஜன முன்னணிக்குத் தலைமையேற்றால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவரை வெளியேற்றினால் அதனையும் ஒரு அனுதாப அலையாக மாற்ற அவர் முனைவார். அவ்வாறான அரசியல் சூழலை கையாளுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு பலமான அரசியல் கொள்கைகள் தேவைஇ அதனை அவர் கிட்டத்தட்ட வகுத்து விட்டார் என்பதையே மகிந்தவின் அண்மைய கருத்துக்கள் உணர்த்துகின்றன.

சர்வதேசத்தினால் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை இந்தத் தேர்தலின் மூலம் மகிந்த ராஜபக்ச பிரசாரம் செய்யப் போகிறார். இதன் மூலம் சிங்கள மக்களின் அனுதாபத்தை அவர் தனது பக்கம் திருப்புவதற்கு முனைகிறார். தான் தோற்கவில்லை என்றும் சர்வதேச சகதிகள் தான் தோற்கடித்தன என்றும் அவர் நம்பவைக்க முற்படுகிறார்.

தன்னைத் தோல்வியுற்றவனாகவும் காட்டிக் கொள்ளாமல் அதேவேளை தன்னைத் தோற்கடித்த வாக்காளர்களையும் நோகடிக்காமல் மூன்றாவது தரப்பான சர்வதேச சக்திகளையே அதற்குப் பழிகாரர் ஆக்குவது தான் மகிந்தவின் திட்டம்.

இதன்மூலம் அவர் தான் வெளிநாட்டு சக்திகளின் சதியினால் தான் தோற்கடிக்கப்பட்டேன் என்று ஆனதாப அலையை அவர் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க முனைகிறார்.

எதற்காக சர்வதேச சக்திகள் தன்னைத் தோற்கடித்தன என்ற கேள்வி எழும் என்பதால் தான் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நாட்டைப் பிரிக்கவே வெளிநாடுகள் சதி செய்கின்றன என்ற வாதத்தை அவர் முன்னிறுத்தப் பார்க்கிறார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் சர்வதேச தலையீடுகள் இருந்தன என்ற போதிலும் அவர் கூறுவது போல அந்தத் தலையீடுகளுக்கு அதிகாரப் பகிர்வு மூலம் நாட்டைப் பிரிக்கும் எண்ணம் காரணமல்ல.

இந்தியாவிடமோ அமெரிக்காவிடமோ இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்தும் எண்ணக் கரு ஒருபோதும் இருந்ததில்லை. அவ்வாறு பிளவுபடுத்தும் எண்ணம் இருந்தால் அதனை இந்த நாடுகளால் எப்போதோ செய்திருக்க முடியும்.

அதற்குச் சாதகமான சூழலும் முன்னர் காணப்பட்டது.அதிகாரப் பகிர்வு என்ற பெயரிலோ வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பெயரிலோ அவ்வாறு நாட்டைத் துண்டாட வேண்டிய தேவை வெளிநாடுகளுக்கு கிடையாது. இலங்கை ஒருமித்த நாடாக இருப்பதே சர்வதேச சக்திகளுக்கு சாதகமானது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையின் ஒருமைப்பாடும் இறைமையும் முக்கியம் என்பதை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றன.

இருந்தாலும் தான் சர்வதேச சக்திகளால் தான் தோற்கடிக்கப்பட்டேன் என்றும் நாட்டைப் பிளவுபடுத்த புதிய அரசியலமைப்பு மூலம் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் சர்வதேச சதி நடப்பதாகவும் மகிந்த பயத்தைக் காட்ட முனைகிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தாக வேண்டும். அதன் மூலம் தான் மகிந்த ராஜபக்ச தான் ஒரு பலம் வாய்ந்தவர் என்பதை வெளிப்படுத்த முடியும்.

எனவே இந்தத் தேர்தலின் வெற்றி அவருக்கு மிகவும் முக்கியம் என்பதால் பிரசாரங்களின் போது அவர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடும்.

ஹோமகமவில் நடந்த கூட்டத்தில் அவர் நிகழ்த்தியிருக்கின்ற உரை இதனை தெளிவாகவே எடுத்துக் கூறியுள்ளது.

புதிய அரசியலமைப்பைத் தோற்கடிக்கும் அதிகாரப் பகிர்வை நிராகரிக்கும் பிரசாரங்களின் மூலம் அதிகாரத்துக்கு வர முனையும் மகிந்த ராஜபக்சவிடம் சம்பந்தன் முன்வைத்த வேண்டுகோள் ஒருபோதும் எடுபடும் என்று நம்புவதற்கில்லை.

அதேவேளை ராஜபக்ச குடும்பத்தையும் மகிந்தவின் ஆட்சியையும் கொள்ளைக்காரர்கள் ஊழல் செய்தவர்கள் என்று குற்றம் சாட்டிய தற்போதைய அரசாங்கம் இதுவரை எதனைக் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறது?

ஒரே ஒரு வழக்கில் சஜின் வாஸ் குணவர்தனவை குற்றவாளியாக நிரூபித்திருக்கிறது. அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை வெறும் 1000 ரூபா அபராதம் மாத்திரம் தான்.இந்த 1000 ரூபா அபராதத்துக்காக அரசாங்கம் எவ்வளவு நிதியை செலவிட்டது.

இதுபோலத் தான் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களைத் தேடிக் கொள்ளாமல் தம்பட்டம் அடித்த அரசாங்கம் இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல ஆகியிருக்கிறது.

முன்னைய ஆட்சிக் காலத்தில் இங்கு நடந்த ஊழல்கள் மோசடிகளும் அறிவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்டதால் அவ்வளவு இலகுவாக கண்டறியப்படவோ குற்றவாளிகளை கூண்டில் ஏற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முனைகிறார். தாங்கள் செய்யாத ஊழலுக்காக பழி சுமக்க நேரிட்டதாக அவர் இந்த தேர்தலில் சிங்கள மக்களின் முன்பாக கூறப் போகிறார். அதனை இந்த அரசாங்கம் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது.

மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த வாக்காளர்கள் இந்தக் கட்டத்தில் அவருக்குச் சார்பாகத் திரும்பினார்களேயானால் அவரதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தீவிரமானதாகவே இருக்கும்.

அது அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு எல்லாவற்றையுமே இல்லாமல் ஆக்கிவிடக் கூடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*