சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்ட மகிந்த! சண் தவராஜா

பிறப்பு : - இறப்பு :

சிறி லங்காவின் ஏழாவதும் இறுதியுமான (?) அரசுத் தலைவர் தேர்தலில் நேற்றுவரை பிரபல்யம் இல்லாது இருந்து வந்த மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். தோற்கவே மாட்டார் எனத் தான் திடமாக நம்பியது மட்டுமன்றி பெரும்பாலான மக்களையும் நம்பச் செய்த மகிந்த ராஜபக்ஷ ஒரு சிறிய வீத வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்டார். சிங்களக் கிராமிய மக்களினதும் கடும்போக்கு சிங்கள மக்களினதும் ஆதரவையும் பெரிதும் பெற்றிருந்த மகிந்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அரவணைப்பில் வகுக்கப்பட்ட திட்டத்தைத் தோற்கடிக்க முடியாமற் போய் விட்டது.

இலகுவில் தோற்க மாட்டார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகிந்த தப்பித் தவறித் தோற்றாலும் கூட தனது துட்ட கைமுனு கனவு கலைந்து போவதை அனுமதிக்க மாட்டார், எனவே பதவியை இலகுவில் விட்டுக் கொடுக்க மாட்டார். தனது பதவிக் காலத்தில் இன்னும் இரண்டு வருடம் மீதம் இருப்பதைக் காரணம் காட்டியோ, அன்றி நாடாளுமன்றத்தைக் கலைத்தோ, தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைத்தோ, எதுவுமே பலன் தராதவிடத்து இராணுவத்தின் உதவியுடனேயோ தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயலுவார் என்ற நியாயமான சந்தேகம் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து வந்தது. ஆனால், அத்தகைய முயற்சிகள் எவையுமே வெற்றியளிக்காத நிலையில் எதிர்க் கட்சித் தலைவரும் தற்போதைய பிரதம அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவை நேரில் அழைத்து கலந்தாலோசனை நடத்தி அதிகாரத்தைக் கையளித்து உள்ளார். இதனைத் தொடரந்து தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் உள்ள மெதமுலனவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே கூடியிருந்த தனக்கு வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றி தெரிவித்த அதே வேளை வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு வாழ் (சிறுபான்மை) மக்கள் தனக்கு வாக்களிக்காமல் விட்டமையினாலேயே தான் தோல்வி அடைந்ததாகக் கூறினார்.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது தனது வெற்றி நிச்சயம் என்ற நிலையிலேயே மகிந்த அந்த அறிவிப்பைச் செய்திருந்தார். தனது சகோதரர்கள் மற்றும் தொண்டரடிப் பொடிகளுடன் நடாத்திய கலந்தாலோசனை மட்டுமன்றி, தனது ஆஸ்தான சோதிடரின் ஆலோசனையையும் பெற்றே தேர்தல் நாளையும், வாக்களிக்கும் நேரத்தையும் குறித்துக் கொண்டார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதனை எதிர் கொள்வதற்கு எதிரணி தயாராக இருந்திருக்கவில்லை. திக்கு முக்காடிப் போன எதிரணி நிதானத்திற்கு வருவதற்கு முன்பாகவே மகிந்தவின் பரப்புரை ஆரம்பமாகி விட்டிருந்தது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினுள் தலைமைப் போட்டி பலமாக நடந்து கொண்டிருந்தது. அதன் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இராசி இல்லாத தலைவர் என்ற அவப் பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய வெளிநாட்டுச் சக்திகள் திடமான, பலமான உத்தி ஒன்றை வகுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. மகிந்தவின் ஆதரவுத் தளம் இரண்டு வகையானது. நடுத்தர மற்றும் சாதாரண கிராமப்புற மக்களின் தலைவர் என்ற அவரது பிம்பம் முதலாவது. சிங்களக் கடும் போக்காளர்களின் ஆதரவு இரண்டாவது. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை இந்த இரண்டு தளங்களிலும் அவரது செல்வாக்கு குறைவானது. கொழும்பின் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த அவரின் செல்வாக்கு படித்த மேல்தட்டு வர்க்கத்திடமும் தமிழ் பேசும் மக்களிடமுமே அதிகமானது. எனவே, இத்தகைய செல்வாக்கோடு இணைத்து சாதாரண சிங்கள மக்களின் வாக்குகளையும் கவரக் கூடிய ஒருவர் எதிரணிக்குத் தேவைப்பட்டார். அந் நிலையில் முன்னாள் அரசுத் தலைவி சந்திரிகா அம்மையாரால் முன் மொழியப் பட்டவரே மைத்ரிபால சிறிசேன. இவரின் தெரிவு இரட்டை இலாபத்தை நோக்காகக் கொண்டது. சாதாரண அடித்தட்டு சிங்கள மக்களின் வாக்கை வசீகரம் செய்யும் ஒருவராக மாத்திரம் அன்றி தெரிவு செய்யப்படும் நபர் எதிரணி வேலைத்திட்ட சூத்திரதாரிகளின் சொல்கேட்டு நடக்கக் கூடிய ஒருவராகவும் இருக்க வேண்டி இருந்தது. அதற்கு மைத்ரி வெகுவாகப் பொருந்தி இருந்தார்.

மைத்ரியின் வெற்றிக்காக 46 எதிரணிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி தனது பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவையே விலையாகக் கொடுக்க வேண்டி இருந்தது. தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான உத்தியை மனோ கணேசன் வகுக்க, முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கவரும் உத்தியை அசாத் சாலி வகுத்துக் கொண்டார். தமிழ், முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யும் முன்னரேயே தமிழ் முஸ்லிம் மக்கள் மைத்ரிக்கு வைக்களிப்பது என்ற முடிவை எடுத்து விட்டமை குறிப்பிடத் தக்கது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசும் வெகு சாதுரியமாக நடந்து கொண்டன. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தாலும் இறுதிக் கணத்திலேயே மைத்ரிக்கான ஆதரவை அவை வெளிப்படுத்தி இருந்தன. இதன் மூலம் இனவாதத்ததைக் கிளப்பி சிங்களக் கடும் போக்காளர்களின் வாக்கை அறுவடை செய்வதற்கான வாய்ப்பை மகிந்தவுக்கு எதிரணியின் வியூகம் வழங்கி இருக்கவில்லை.
எதிரணியின் வியூகம் என்பது நவம்பர் 22 இல் மைத்ரியின் பொது வேட்பாளர் அறிவிப்போடு உருவான ஒன்றல்ல. அது பல வருடங்களுக்கு முன்னரேயே திட்டமிடப்பட்டு, மிகவும் இரகசியமான முறையில் பேணப்பட்டு வந்த ஒன்று. அதன் முக்கிய சூத்திரதாரி முன்னாள் அரசுத் தலைவி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவே.

சமாதானத் தேவதை என்ற அடைமொழியுடன் 1994 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வரும்போது நிறைவேற்று அரசுத் தலைவர் முறையை ஒழிப்பேன் என்ற உறுதிமொழியுடனேயே அவர் பதவியை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்த 10 வருடங்களில் அவரால் சாதிக்க முடியாமற் போன விடயத்தை அவர் 20 வருடங்களின் பின்னர் சாதித்து இருக்கிறார்.

அடுத்து வரும் நாட்களில் சிறி லங்காவில் பல அரசியல் மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன. இன்றைய நிலையில் மைத்ரி முன்வைத்த 100 நாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பாரிய சிக்கல்கள் இருக்காது எனவே எதிர் பார்க்கப் படுகின்றது. ஆனால், தோல்வியைத் தழுவிக் கொண்ட மகிந்த ராஜபக்ஷ இலகுவில் விட்டுக் கொடுக்க மாட்டார். எந்தச் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதனூடாக தனது துட்ட கைமுனு கனவை நிறைவேற்றிக் கொள்ள அவர் முனைந்தாரோ அவர்களது வாக்களிப்பு காரணமாகவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளமை அவரது ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். ஏதாவது ஒரு வகையில் மீண்டும் அந்த மக்களைப் பழிவாங்கிவிடவே அவர் துடிப்பார். அதற்கு புதிய அரசாங்கம் இடம் தரக் கூடாது.
அது மட்டுமன்றி மகிந்தவின் தேர்தல் தோல்வியோடு அதி தீவிர சிங்கள பௌத்த பேரினவாதிகள் தற்காலிகமாக தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்கள் தம்மை மீளமைத்துக் கொண்டு முன்னைவிட பலம் பொருந்தியவர்களாக மீள் வருவதற்கு இடையில் மைத்ரியும் ரணிலும் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை ஓரளவேனும் நிறைவேற்ற முயல வேண்டும். தவறினால் சந்திரிகா அம்மையாருக்கு நிகழ்ந்ததே அவர்களுக்கும் நடக்கும்.
தமிழர் தரப்பில் ஒருசில சக்திகள் தேர்தல் சமயத்தில் – தெரிந்தோ தெரியாமலோ (?) – மைத்ரிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுத்துவிட முயன்றன. கடும் போக்காளரான மகிந்த போன்ற ஒருவர் சிங்கள தேசத்தின் தலைவராக இருப்பது தமிழ் மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் வலுவோடு பேச உதவும் என்பது அவர்களது வாதங்களுள் ஒன்று. இதில் நியாயம் இருப்பது போன்று தோன்றினாலும் உண்மையில் தற்போதைய ஆட்சி மாற்றம் என்பது தமிழ் மக்களின் பிரச்சனைத் தீர்வுக்கான அம்சங்களுள் ஒன்றாக சர்வதேச சமூகத்தினால் கருதப் படுகின்றது என்ற விடயத்தை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கின்றார்கள்.

 

இத்தகைய முடிவின் பின்னால் புலம் பெயர் தமிழ் மக்களின் சொந்த இருப்பு, எதிர்காலத்தில் புலம் பெயர இருப்பவர்களின் எதிர்காலம் போன்ற விடயங்களும் அடங்கி இருக்கின்றன. அது மாத்திரமன்றி, சிறி லங்காவில் எதிராளி இல்லாத சூழலில் அங்கிருந்து புறப்பட்டு நாடு நாடாக வலம்வந்து கூட்டங்களில் பேசவும், மனித உரிமை மன்றங்களில் அறிக்கை சமர்ப்பிப்பதற்குமான வாய்ப்பு இழக்கப்படுவதும் இத்தகையோருக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தகைய குறுகிய நலன்களுக்காக, தாயகத்தில் அன்றாடம் துயரத்தை அனுபவித்துவரும் மக்களுக்கு மூச்சு விடுவதற்கான ஒரு வாய்ப்பை மறுப்பதா? முள்ளி வாய்க்காலின் பின்னான சூழலில் ஆயுத மோதல் உருவான காலத்திற்கு முந்திய அடக்குமுறைச் சூழலுக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளதை அனுதாபத்துடன் பார்க்க ஏனோ இவர்கள் தயாராக இல்லை.

இந்நிலையில், அமையப் போகும் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது பற்றிய விவாதம் ஒரு சாராரால் பற்ற வைக்கப் படுகின்றது. ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைத் திட்டமோ, அதற்கான மக்கள் அணிதிரட்டலோ இல்லாமல் இணையங்களில் அரசியல் நடாத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் சிலர் இந்த விடயத்தில் கூட்டமைப்புக்கு துரோகிப் பட்டம் வழங்கத் தயாராகி வருவதைக் காண முடிகின்றது.
தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை மாகாண சபைக்கு ஊடாக, பிரதேச சபைகளுக்கு ஊடாகப் பெறலாம் என்றால், மத்திய அரசின் அமைச்சுப் பதவிகளுக்கு ஊடாக அதனைப் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்ற வேளைகளில் தட்டிக் கேட்காமல் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்ததைப் போன்று தமிழ் மக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறும் போது தட்டிக் கேட்காமல் அரசில் பங்காளியாக இருப்பதே பிழை.
மூவின மக்களும் இணைந்து சிறி லங்காவில் ஊழல் மலிந்த ஒரு குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளார்கள். அவர்களது விருப்பு மற்றுமொரு குடும்ப ஆட்சியால் அதனைப் பிரதியிடுவது அல்ல. அதனைப் புரிந்து கொண்டு ஆட்சியாளர்கள் நடந்து கொண்டால் மகிந்த அடிக்கடி கூறியதைப் போன்று சிறி லங்கா உண்மையிலேயே இன ஒற்றுமை நிறைந்த பொருளாதார வல்லரசான சிங்கப்பூராக மாறும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit