ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் தயாராக வேண்டும்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

cvwikneswaran

சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சித் தேர்தலில் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். அதேபோல, அண்மையில் தமிழ்த் தேசியப் பேரவையும் ஊழலற்ற தமிழ் தலைவர்களை நாடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

தென் பகுதியில் தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களும் அமைப்புகளும் இயங்கி, பல ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து, ஊழல் செய்த மத்திய அமைச்சரைக்கூட அமைச்சுப் பதவியில் இருந்து அகற்றி விட்ட நிலையில், வட பகுதியில் உண்மையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

வட மாகாண சபை பதவி ஏற்ற சிறிது காலத்தினுள்ளேயே அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலும் ஏனைய தரப்பினராலும் சுமத்தப்பட்டு இருந்தன.

கால தாமதம் ஆனாலும், முதலமைச்சர் தமது சொந்த அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சுயாதீனமான குழு ஒன்றை அமைத்த போது, நல்லாட்சிக்கான முன்னுதாரணமாக நாட்டிலுள்ள அனைத்து மக்களாலும் அந்தச் செயற்பாடு வரவேற்கப்பட்டது.

குற்றம் நிருபிக்கப்பட்ட இரு அமைச்சர்களைப் பதவி நீக்கி, ஏனைய இரு அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சூளுரைத்த போது, அவரை நீதி தேவதையின் மறு வடிவமாக மக்கள் பார்த்தார்கள்.

குறிப்பாக இந்தக் கால கட்டத்தில் இளைய தலைமுறையினரால் ஊழலுக்கு எதிராகப் போராடக் கூடிய ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் கருதப்பட்டார்.இதனாலேயே முதலமைச்சருக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட அவர்கள் துணிந்தனர்.

ஆனால் தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தனது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்த முதலமைச்சர், விசாரணையின் பின்னர் அமைச்சர்களை மாற்றினால் அவர்கள் குற்றம் செய்ததாக அர்த்தப்படாது என்று தெரிவித்ததன் மூலம், பதவிக்காக தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு சராசரி அரசியல்வாதியாகத் தன்னை இனம்காட்டினார்.

ஊழல் நிருபிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் மீதும் பதவி நீக்கத்தை தவிர வேறு எந்தவித நடவடிக்கை எடுக்காததும், ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் சடுதியாகக் கைவிட்டதும், குறைந்த பட்சம் முதலமைச்சர் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவிடம் ஊழல் விசாரணை அறிக்கை யைச் சமர்ப்பித்து விரயமாக்கப் பட்ட பொதுமக்களின் வரிப்பணத்தை மீளப்பெற்று மக்களின் அபிவிருத்தியை மேம்படுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பார் என்று எண்ணியிருந்தவர்களை பலத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், பகிரங்கமாக அமைச்சர்களின் ஊழலை முதலமைச்சர் வெளிப்படுத்தினால், தாம் முதலமைச்சரின் ஊழல்களை வெளிப்படுத்துவேன் என்று மிரட்டியதில் உண்மை இருக்கலாம் என்று பலரும் எண்ணத் தலைப்பட்டனர்.

அதற்கு வலுச் சேர்ப்பதுபோல, முதலமைச்சரின் பிந்திய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.உதாரணமாக, சுன்னாகம் பகுதிக் கிணறுகளில் குடி தண்ணீரில் கழிவு எண்ணெய் கலந்த பிரச்சினையில், நீர்வழங்கல், மாகாணசபையின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்றும், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தனக்குச் சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்படாததும், நிர்வாக ரீதியாக தொடர்பு அற்றதுமான குறித்த விடயத்தில் தலையிட்டு தன்னிச்சையாக 1.9 மில்லியன் ரூபா பணத்தைச் செலவழித்து ஒரு குழுவை அமைத்து, பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கையை அக்குழுவின் மூலம் பெற்று, அந்த நிறுவனத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டிருக்கிறார் என விசாரணைக்குழு தெளிவாகத் தெரிவித்திருக்கிறது,

அமைச்சரின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு அவர் மாற்றப்பட்ட நிலையில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைப் பாதிக்கும் இந்தப் பாரதூரமான பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு முன்னர் வெளியிடப்பட்ட போலி நிபுணர் குழு அறிக்கையை மீளப்பெற்று இருக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசாங்கமே நீரில் கழிவு எண்ணெய் கலந்து இருப்பதை ஏற்றுக்கொண்டு விட்ட நிலையில், முதலமைச்சர் நேர்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் தீர்வையும் வழங்குமாறு மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்திருக்க வேண்டும்.

ஆனால், இன்று வரை நீதிமன்றங்களிலும் ஏனைய உத்தியோகபூர்வ விடயங்களிலும் சுன்னாகம் நீரில் கழிவு எண்ணெய் கலக்கவில்லை என்பதே வட மாகாண சபையின் நிலைப்பாடாக இருக்கிறது.சட்டத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட நீதிபதி யாக இருந்த முதலமைச்சர், மாகாண சபையின் அதிகார வரம்பை அறியாமலா விவசாய அமைச்சரை நீர் வழங்கல் பிரச்சினையில் குழு அமைக்க அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது.

இதைவிட, இன்றுவரை அந்த அறிக்கையை மீளப்பெறாமல் இருப்பது ஐங்கரநேசன் தனது சாட்சியத்தின் போது முதலமைச்சரின் சம்மதத்துடனேயே தாம் இந்த விடயத்தில் ஈடுபட்டதாக தெரிவித்ததை நிருபிக்கும் விதமாக இருப்பதுடன், முதலமைச்சரும் இந்த விடயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்துக்கு ஆதரவாக செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஊழலினால் ஏற்பட்ட பாதிப்புகளை உரிய முறையில் நிவிர்த் திக்கத் தவறியுள்ள முதலமைச்சர், முன்னர் ஊழல் விசாரணையை ஆரம்பித்தது, அமைச்சர்களைக் காவு கொடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தனது நற்பெயரையும் விம்பத்தையும் காப்பற்றுவதற்கு மேற்கொண்ட ஒரு முயற்சியே என்பது தற்போது வெளிப்பட்டு விட்டது.

இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உதட்டளவில் ஊழலுக்கு எதிராக பாவனை செய்து, மீண்டும் தனது விம்பத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் பிரயத்தனம் செய்கிறார். பதவிக் கதிரைகளுக்காக குடுமிபிடிச் சண்டையில் ஈடுபட்டு இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் முதலமைச்சர் பதவிக்குத் தன்னை நியமிக்காது என்ற யதார்த்தத்தை முதலமைச்சர் உணர்ந்து கடைசி வரை ஊழலுக்கு எதிராக நேர்மையாகப் போராடி இருந்தால், பதவி விலகிச் செல்லும்போது தமிழர் வரலாற்றில் ஒரு மதிப்புக்குரிய தலைவராக நிரந்தர இடமொன்றை அவர் பிடித்திருப்பார்.

அடுத்ததாக, தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் மக்கள் பேரவையை எடுத்துக்கொள்வோம். இவர்கள் வடமாகாண சபையில் மற்றும் நாட்டில் ஊழல் பல இடம்பெற்ற போது கண்டும் காணாதது போல இருந்ததும், சுன்னாகம் பிரச்சினை உட்பட தமிழர்களைப் பாதிக்கும் பல போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டபோது அவற்றில் கலந்துகொள்ளாது வாளாதிருந்ததும், குறைந்தபட்சம் ஆதரவு தெரிவிக்கக்கூட முன்வரவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

முன்னைநாள் போராளிக் குழுக்களின் கிரிமினல்களை இணைத்தலைவர்களாகவும், முக்கிய உறுப்பினர்களாகவும் பேரவை இணைத்துக் கொண்டுள்ள நிலையில், பேரவையின் ஊழலுக்கு எதிரான கோரிக்கை, உள்ளக விமர்சனத் துக்கு உட்படாத அமைப்பாகத் தன்னை இனம் காட்டியுள்ளதுஎன்பதுடன் “ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே’’ என்ற பழமொழியையும் நினைவுபடுத்தியுள்ளது.

சிலதினங்களுக்கு முன்னர் முன்னைநாள் போராளிக்குழு ஒன்று இன்னமும் யாழ்ப்பாணத்தில் அடாத்தாக பொதுமக்களின் வீடுகளைப் பிடித்து வைத்து இருப்பதும், ஆயுதங்களுடன் இரகசியமாக மக்களை அச்சுறுத்துவதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டியது இந்த கிரிமினல் குழுக்களிடம் இருந்து என்பதை பேரவை உணர்ந்து கொள்ளவேண்டும்.

முதலில் இந்த ஆயுதக் குழுக்களை கடந்த காலத்தில் ஆயுதம் ஏந்தி செய்த தவறுகளுக்கும் அராஜகச் செயல்களுக்கும் மக்களிடம் மன்னிப்புக் கோருமாறும், அதேவேளை செய்த பாவங்களுக்காக பின்வரும் வழிகளில் பிராயச்சித்தமும் செய்யு மாறும் பேரவை வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

1. கடந்த காலத்தில் இந்தக் குழுக்கள் படுகொலை செய்த, முக்கியமாக ஆயுதம் ஏந்தாத பொதுமக்களின் உறவினர்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும்.

2. பயமுறுத்தி மற்றும் படுகொலை செய்து சம்பாதித்த சொத்துக்களை மீளவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அல்லது அவர்களின் உரித்துக்காரர்களிடம் கையளிக்க வேண்டும். தொடர்ந்தும் பொதுமக்களின் வீடுகளை அடாத்தாக பிடித்து வைத்திருப்பது, இரகசியமாக ஆயுதங்களுடன் பயமுறுத்துவது போன்ற செயல்கள் இவர்கள் இன்னமும் சட்டவிரோத செயல்களை நிறுத்தி ஜனநாயக வழிக்கு வர விரும்பவில்லை என்றே பொருள்படும் நிலையில், பேரவையில் இருந்து இவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3. வரதராஜபெருமாள் போலல்லாது, இந்தியாவிடம் பல உதவிகளைப் பெற்றுக் கொண்டு இந்திய நலன்காக்கும் ஐந்தாம் படையாகச் செயற்படாமல், ஈழத்துத் தமிழ் மக்களின் நலன் காப்பதற்காக நேர்மையாக, இதயசுத்தியுடன் இனியாவது செயற்படுவோம் என்ற உறுதிமொழியை அளிக்கவேண்டும். ஈழ மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக கடந்த காலங்களில் இந்தியாவிடம் பெற்றுக் கொண்ட உதவிகளை பகிரங்கப்படுத்த வேண்டும்.

4. கடந்த காலத்தைப் போலல்லாது பொதுமக்களின் சொத்து மற்றும் வரிப்பணத்தில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும்.

5. தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் வேட்பாளர் இலங்கையிலும் புலத்திலும் தனது பெயரிலும் பினாமிகளின் பெயரிலும் இருக்கும் சொத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துவது அவர்கள் ஊழல் மற்றும் நிதிமோசடியில் ஈடுபடமாட்டார்கள் என்னும் நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட வேண்டுகோள்களை பேரவை வெளிப்படையாக முன்வைத்து, தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும் தமிழ்ப் பிரதேசங்களில் உண்மையான ஜனநாயகம், அராஜகம் மற்றும் ஊழலற்ற நல்லாட்சியை வழங்க முன்வருமா?

தமிழர் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமாயின், முதலில் இலங்கையில் நலிந்துவரும் தமிழர் குடித் தொகையை அதிகரிப்பதற்குரிய செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பேரவை செயற்பட்டிருக்க வேண்டும்.

இன்றுவரை அதைப்பற்றி எந்தவித கரிசனையும் இல்லாமல், தமிழ் மக்களின் குடித்தொகைப் பலமே தமிழருக்கு உரிமைகளை பெற்றுத்தரும் என்ற அடிப்படை உண்மையையும் உணராமல் அரசியல் யாப்பில் எவ்வாறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று விவாதிப்பது எந்தப் பயனையும் தமிழருக்கு ஏற்படுத்தாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit