
காஷ்மீரில் மேஜர் உட்பட 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் 3 பாகிஸ்தான் வீரர்களை பலியான தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், கெரி செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சனிக்கிழமை மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் மேஜர் மோகர்கர் பிரபுல்ல அம்பாதாஸ் மற்றும் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுபோல அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் வீர்ரகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
இந்நிலையில், ரஜவுரி மாவட்டம் நவ்ஷெரா செக்டார் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் திங்கள்கிழமை மாலை இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாடுவதை அவர்கள் கவனித்தனர்.
இதையடுத்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்திய ராணுவ தாக்குதலில் கடந்த 2 நாட்களில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு மேஜர் உட்பட 4 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திங்கள்கிழமை மாலையில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி சுமார் 500 மீட்டர் தூரம் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதனை டெல்லி ராணுவ உயர் அதிகாரிகள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை.
அதேநேரம் எல்லை தாண்டிய இந்தத் தாக்குதலை கடந்த ஆண்டு நடந்த ‘துல்லிய தாக்குதல்’ போன்றது என கூற முடியாது.
இதனிடையே, “இந்திய ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தியது. இதில் எங்கள் நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததுள்ளனர்” என பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது.