
தமிழகத்தில் என்னடா கொட்டாங்குச்சி எப்படி இருக்கிறாய் என்று கேட்டதால் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(29). நேற்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இவர் மது அருந்துவதற்காக அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
மது அருந்திவிட்டு வெளியில் வந்த போது, மது அருந்துவதற்காக வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஓம்பிரசாத்(27), ஐசிஎப் மேற்கு காலனியில் வசிக்கும் அவரது நண்பர் தர்ஷன்(23) டாஸ்மாக் உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது ஓம்பிரசாத்தை பார்த்த கணேஷ் என்னடா கொட்டாங்குச்சி எப்படி இருக்கிறாய் என்று கேலியாக அவரது பட்டப்பெயரை வைத்து அழைத்துள்ளார்.
தனது பட்டப்பெயரை பலர் முன்னால் கேலியாக சொல்லி அழைத்ததால் ஆத்திரமடைந்த ஓம்பிரசாந்த் யாரை பார்த்து கொட்டாங்குச்சி என்றாய் என்று கணேஷை தாக்கி உள்ளார்.
இதனால் கணேஷ் அவரை திருப்பி தாக்க, கணேசுடன் வந்த தர்ஷன் என்ற நபரும் அவரை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கணேஷ் பீர் பாட்டிலால் தர்ஷன் தலையில் அடித்துள்ளார். இதைப்பார்த்த அங்கு வந்த ஓம்பிரசாந்த்தின் நண்பர் அரவிந்த் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கணேஷை தாக்கியுள்ளனர்.
இதனால் கணேஷ் ஓடியுள்ளார். அவரை விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அப்போது தர்ஷன் திடீரென கணேஷ் கையில் வைத்து இருந்த பீர் பாட்டிலை பிடுங்கி உடைத்து கணேஷின் கழுத்தில் குத்தியதில் கணேஷ் பலத்த காயத்துடன் கீழே விழுந்துள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இச்சம்பவத்தை அறிந்த பொலிசார், இதற்கு காரணமான தர்ஷன், ஓம்பிரசாத், அரவிந்த் அவரது நண்பர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.