
பிரம்மபுத்திரா நதி மீது அமைந்திருக்கும் இயற்கை அணைகளால் அருணாசல பிரதேசத்துக்கு ஆபத்து ஏற்படும் என்ற கூற்று தொடர்பாக இந்தியாவுடனான பேச்சுவார்ததை நீடிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனாவிலேயே மிகப்பெரிய நதியாக அறியப்படும் யர்லாங் சேங்போ, சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவில் பிரம்மபுத்திரா நதியாக பாய்கிறது.
திபெத்தில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தால் இந்த நதியோரங்களில் அதிக அளவில் மண் மாசுகள் சேர்ந்து பெரிய அணைகள் போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்வாறு, இந்தியாவின் அருணாசலபிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களையொட்டிய சீனப் பகுதிகளில் மூன்று பெரிய ‘இயற்கை அணைகள்’ இருக்கின்றன.
ஒருவேளை, இந்த அணைகளில் விரிசலோ, உடைப்போ ஏற்படுமேயானால் மேற்குறிப்பிட்ட இந்திய மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரு கிறது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சூனியிங் கூறும்போது: யர்லாங் சேங்போ நதியில் இருக்கும் அணைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அவை இயற்கை யாக அமைந்தவை ஆகும். இதுதொடர்பாக, இந்தியா சார்பிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரமற்ற பரப்புரைகளை இந்திய ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பிரச்சினை குறித்து இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை நீடிக்கும்.
இவ்வாறு ஹூவா சூனியிங் தெரிவித்தார்.