மாற வேண்டியது தமிழர்கள் அல்ல, சிங்கள அரசும் அரசியல் தலைவர்களுமே!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் அரசியல்வாதிகள் தமது எதிர்ப்பு அரசியல் போக்கிலிருந்து மாற வேண்டும் என்று கேட்டிருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே.

60 ஆண்டுகளாகத் தமிழ்த் தலைமைகள் எதிர்க்கட்சியாகவே இருந்து வருவதால் தான் அவர்களால் அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவுகளுக்கு இடையில் சேவையில் ஈடுபடவுள்ள பயணிகள் படகான எழுதாரகையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அபிவிருத்தியில் வடக்கு மாகாணம் பின்தங்கியிருப்பதற்கு தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பு அரசியலைத் தனது உரையில் காரணம் காட்டிய ஆளுநர், மலையக மற்றும் முஸ்லிம் தலைமைகளைப் போன்று அரசுடன் சேர்ந்து பதவிகளைப் பெற்று மக்களுக்கான அபிவிருத்தியைத் துரிதப்படுத்தியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது நாட்டின் அபிவிருத்தி என்பது கட்சி அரசியலிலேயே தங்கியிருக்கின்றது என்கிறார் ஆளுநர். ஆட்சியிலிருக்கும் கட்சியை ஆதரித்து நடந்தால் அபிவிருத்தி கிடைக்கும். எதிர்த்து நடந்தால் அபிவிருத்தி தாமதப்படும் என்று கூறுகின்றார்.

அதிலும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்த்தால் அவர்களுக்கான அபிவிருத்தி மிக மோசமாக இருக்கும் என்கிறார். இவ்வளவு அப்பட்டமாக அவர் உண்மையை ஒப்புக் கொண்டமைக்காக அவரைப் பாராட்ட வேண்டும்.

ஆனால், கொழும்பு அரசுகளின் இந்தப் பிற்போக்கு அரசியல் காரணமாகத்தான் தமிழர்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்கள் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தார்கள் என்பதை அவர் இலகுவாக மறந்து விட்டார்.

அபிவிருத்தி என்பது ஒரு அரசு தனது மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களை முன்னேற்றுவதற்கான செயன்முறை. அந்தச் செயன்முறை நாட்டில் வாழும் எல்லா மக்களுக்குமே உரியது.

ஆட்சியில் உள்ள கட்சியை ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி அனைத்து மக்களுக்கும் உரியது அபிவிருத்தி. நியாயமான, நேர்மையான, நல்லாட்சி அரசு ஒன்று தன்னுடைய மக்கள் அனைவரையும் சமமாகக் கருதித்தான் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், பிரிட்டிஷாரின் வெளியேற்றத்துக்குப் பின்னர் கொழும்பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சிங்களக் கட்சிகள் எவையும் இந்த நாட்டின் அனைத்து மக்களையும் சமமானவர்களாக நடத்தவில்லை.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிறுமைப்படுத்தி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கவே முயன்றன. அதற்கான ஒரு கருவியாக அபிவிருத்தியையும் அவை பயன்படுத்தின.

ஒன்றில் சிறுபான்மை மக்களின் பகுதிகளில் அபிவிருத்தியை முடக்கின அல்லது அபிவிருத்தி என்ற பெயரில் சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியிருத்தின.

இப்படி தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒடுக்குவதற்கு அபிவிருத்தியைக் கொழும்பு பயன்படுத்தியதன் விளைவே தமிழர்கள் எதிர்ப்பு அரசியலைத் தொடர்வதற்குக் காரணமானது என்பதுடன் கொழும்பின் அபிவிருத்தித் திட்டங்கள் மீதும் எப்போதும் சந்தேகங்கொள்வதற்கும் காரணமானது.

இப்போதும் கூட கொழும்பு மீதான தமிழர்களின் எதிர்ப்பைக் கைவிடச் செய்வதற்கான ஆயுதமாகவே அபிவிருத்தியை ஆளுநர் பயன்படுத்தப் பார்க்கிறார். எதிர்ப்பைக் கைவிட்டால் வளமான வாழ்வு கிட்டும் என்கிறார்.

தமிழர்களுக்கு அபிவிருத்தி தேவை என்றால் அவர்கள் அரசோடு சேர வேண்டும் என்று மென்மிரட்டல் விடுக்கிறார் ஆளுநர் என்றுகூட இதனைக் கொள்ள முடியும்.

இதைத்தான் வடக்கின் முதலமைச்சர்கூட அண்மையில் வடக்கு மாகாண வரவு செலவுத் திட்ட அறிமுக உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எமக்கு ஏதேனும் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்போது எமது பகுதிகளை வளப்படுத்தவேண்டும், விருத்தி செய்ய வேண்டும் என்பதிலும் பார்க்க தமக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கிறார்கள் என்றார் முதலமைச்சர்.

ஆளுநரின் உரையும் அதைத்தான் பிரதிபலிக்கிறது. அபிவிருத்தி வேண்டுமானால் எதிர்ப்பைக் கைவிடுங்கள் என்கிறார்.

ஆனால், மக்கள் எதிர்க்கிறார்களோ இல்லையோ, ஆதரிக்கின்றார்களோ இல்லையோ அவர்களுக்குத் தேவையான அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியது அரசுகளின் கடமை.

இந்த நேர்மையுடன் கொழும்பு அரசும் சிங்கள அரசியல்வாதிகளும் நடந்து கொள்ள முன்வரும் போது தமிழர்களின் எதிர்ப்பும் தானாகவே காணாமற்போய்விடும். எனவே மாற வேண்டியது தமிழர்கள் அல்லர். தெற்கிலுள்ள அரசும் அரசியல்வாதிகளுமேயாவர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*