வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் உத்தரவு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியா உள்ளூர் பேருந்து சேவைகளை தனியார் மற்றும் இலங்கை பேருந்து சபைகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இரு வாரங்களுக்கு செயற்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டு செயற்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டிருந்தது.

இந் நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சராக வட மாகாண முதலமைச்சர் பெறுப்பேற்றதன் பின்னர் புதிய பேருந்து நிலையத்தினை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் பிரகாரம் 25 ஆம் திகதியில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடவேண்டும் என உத்திரவிட்டிருந்ததுடன் பழைய பேருந்து நிலையத்தினை மூடுவதற்கான ஏற்பாடுகள் 24 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியில் இருந்து எடுக்குமாறும் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந் நடைமுறைக்கு குறித்த பழைய பேருந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தகர்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்ததுடன் தமது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் தெரிவித்து இரண்டு பேருந்து சேவைகளின் உள்ளூர் சேவைகளையாவது பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்ததுடன் அவ்வாறு இடம்பெறாவிட்டால் தாம் கடையடைப்பில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதற்கு வவுனியா வர்த்தகர் சங்கமும் ஆதரவு தெரிவித்திருந்தது. எனினும் 24 ஆம் திகதி இரவு வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட குழுவினர் பேருந்து நிலையத்தில் காத்திருந்ததுடன் பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

எனினும் பொலிஸார் தமக்கு பேருந்து நிலையத்தினை மூடுமாறு உத்தரவு வரவில்லை எனவும் நகரசபையினரே மூட வேண்டும் என தெரிவித்ததுடன் அவ்வாறு மூடும் பட்சத்தில் தாம் பாதுகாப்பு தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான சூழலில் பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு வருகை தந்த வவுனியா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி வவுனியா நகரசபை செயலாளரிடம் நகரசபையினால் பேருந்து நிலையத்தினை மூடுங்கள் என தெரிவிக்கப்பட்டபோதிலும் அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கே உத்தரவு இட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் தெரிவித்தார்.

இந் நிலையில் முதலமைச்சரின் உத்தரவை பொலிஸார் கடைப்பிடிக்காமையினால் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுத்திருந்தது.

இந் நிலையில் இன்று காலை முதலமைச்சரின் உத்தரவை மதித்து தாம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேலையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து தனியார் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட்டிருந்தது.

எனினும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வராவிட்டால் தாம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான குழப்பகரமான நிலையில் வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், சிரேஸ்ட செயலாளர் வியஜலட்சுமி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் வவுனியாவிற்கு வருகை தந்திருந்தனர்.

காலை 10 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த குழுவினர் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தனியார் பேருந்து உரிமையளார்களின் கோரிக்கையை செவிமடுத்த அவர்கள் முதலமைச்சரின் உத்திரவை செயற்படத்தாத காரணத்தினை அறிவதற்காக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதனையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபையினரை அவர்களது வவுனியா சாலையில் சந்தித்திருந்ததுடன் அங்கு இணைந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலமைச்சரின் உத்தரவிற்கமைய சேவையில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் இலங்கை போக்குவரத்து சபையினர் குறித்த பழைய பேருந்து நிலையம் நகரசபையிடம் குத்தகையடிப்படையில் பெறப்பட்டுள்ளதாகவும் அதனை தாம் கைவிட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டமை தொடர்பாக ஆராய்ந்த குழுவினர் மேலதிக நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க தீர்மானித்தருந்தனர்.

இந் நிலையில் புதிய பேருந்த நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினை சந்தித்த வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதுடன் வவுனியாவிற்கான உள்ளூர் சேவையினை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்படுத்த ஒத்துழைப்பு தருமாறும் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இதன்போது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அதற்கு நாம் உடன்படுகின்றோம் உள்ளூர் சேவைகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முன்னெடுக்க ஏதுவாக இலங்கை போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடி எமக்காக இடத்தினை பெற்றுத் தரவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கான பதிலை நாளை காலை தமக்கு அறிவிக்குமாறு கோரியதுடன் இல்லையேல் வர்த்தகர் சங்கமானது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் கலந்துரையாடல் எத்தனிக்க கூடாது எனவும் திடமாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வவுனியா வர்த்தகர் சங்கம் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளா சங்கத்தினர் இணைந்து வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது நிலைப்பாட்டை தளர்வின்றி தெரிவித்த நிலையிலும் வர்த்தகர் சங்கத்தின் கருத்தை ஏற்று உள்ளூர் சேவையினை பழைய பேருந்து நிலையமான இபோச பேருந்துகள் சேவையில் ஈடுபடும் இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறு இணைந்து கேட்டுக்கொண்டனர்.

இதற்கான கால அவகாசமாக நாளை காலை 10 மணி வரை வழங்கப்பட்ட நிலையில் செயலாளர் உள்ளடங்கிய குழு உடனடியாக முதலமைச்சருடன் கலந்துரையாடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட தனியாருக்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்ததுடன் அச் செயற்பாட்டை வவுனியா நகரசபையின் செயலாளர் முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய நாளை முதல் வவுனியா இபோச பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பேருந்துகள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க முடியும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதனுடைய பொறுப்பு நகரசபையின் செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே நாளை காலை இணைந்த நேர அட்டவணையின் பிரகாரம் இரு சேவைகளும் இடம்பெறும். ஆகவே முதலமைச்சர் மற்றும்; அவர்களுடைய செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நகரசபை, செயலாளர், வவுனியா வர்த்தகர் சங்கத்தினருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து இரண்டு பேரூந்து சேவைகளும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இபோச தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் இதனை கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது. ஆகவே புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதனை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பேருந்தின் உள்ளூர் சேவைகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து தரப்பினரையும் அழைத்து சுமூகமாக கலந்துரையாடி நல்ல முடிவு எடுக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்தினை முழுமையாக செயற்படுத்த முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

இதன்போது இவ்விடயம் தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கலந்துரையாடினீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்டபோது,

அவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. எனினும் அவர்கள் உடன்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இதேவேளை இபோசவின் இணைந்து தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவனிடம் இது தொடர்பாக கேட்டபோது,

தமது இடத்தில் வேறு எவரும் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்ததுடன் தாம் தனித்துவமாகவே சேவையில் ஈடுபட உள்ளதாகவும் தமது தலைமைப்பீடம் எந்த அறிவித்தலும் வழங்காது தாம் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*