புளொட் அமைப்பின் உறுப்பினர் வீட்டில் ஆயுதங்கள்! பின்னணி என்ன?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

plod

புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பவுண் என்று அழைக்கப்படும் சிவகுமாரின் ஆக்கிரமிப்பில் யாழ். நகருக்குள் இருந்த வீட்டில் இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் நிறுத்திய போது, தன்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவரது வாக்குமூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதேநேரம், ஆபத்தையும் உணர்த்துகின்றது.

போர்க் காலத்தில் இராணுவத்துடன் சேர்ந்து ஒட்டுக்குழுவாக புளொட் இயங்கிய போது அரசால் அதன் உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

புளொட்டுக்கு மட்டும் என்றில்லை, ஈபிடிபி உள்ளிட்ட வேறு பல குழுக்களுக்கும் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அவர்களின் சுய பாதுகாப்புக்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் துணைப்படை அல்லது ஒட்டுக்குழு என அழைக்கப்பட்ட இந்த அமைப்புகளிடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களும் யாழ். குடாநாடு உட்பட வடக்கு முழுவதும் நடத்தப்பட்டன என்ற பெரும் குற்றச்சாட்டு உண்டு.

அவ்வாறு முன்னாள் தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் 2009ஆம் ஆண்டு போர் முடிந்ததன் பின்னர் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவை அடுத்து திரும்பப் பெறப்பட்டன.

புளொட் அமைப்பும் ஆயுதங்களைத் திரும்ப ஒப்படைத்தாலும், சில ஆயுதங்கள் ஒப்படைக்கப்படாமல் இருந்தன என்றும் ,அவற்றில் சில தான், தான் தங்கியிருந்த வீட்டில் இருந்தவை என்றும் பவுண் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அவரது கருத்தைக் கட்சி வட்டாரங்கள் மறுத்துள்ளன. தம்மிடம் இருந்தவை பழமையான ஆயுதங்கள் என்றும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவை பயன்படுத்தப்படாத நிலையில் இப்போது பாவனைக்கு உதவாதவையாகத்தான் இருக்க முடியும், ஆனால் படங்களில் பார்க்கும்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பவை போன்று தோன்றுகின்றன என்பதால், அவை தமது அமைப்புக்கு அரசால் தரப்பட்டவையாக இருக்காது என்று புளொட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் வேறு ஒரு தகவலும் கட்சி வட்டாரத்தில் இருந்து பகிரப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போருக்குப் பின்னர் நிலை கொண்டிருந்த இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் பவுணுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததாகவும் , அவரால் இயக்கப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான ஆயுதக்குழுவின் உறுப்பினராக இவர் செயற்பட்டு வந்தார் என்றும், அரசல் புரசலாகத் தமக்குத் தெரிந்திருந்தது என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

அவரது அத்தகைய தொடர்புகள் மூலம் அவருக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்தமையால்தான் இப்போது வரைக்கும் அவை பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றன என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தத் தொடர்பை மனதில் வைத்துத்தான் தன்னிடம் ஆயுதங்கள் இருக்கின்றன என்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் என்று பவுண் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கக்கூடும்.

எனவே பவுணிடம் முறையான விசாரணைகளை நடத்துவதன் மூலம் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளன.

தன்னிடம் இருந்த ஆயுதங்களைப் பவுண் எங்காவது பதுக்கி மறைத்து வைக்கவில்லை. அலுமாரியில்தான் வைத்திருந்தார். பாதுகாப்புத் தரப்பினால் இது தொடர்பில் தனக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நம்பிக்கையுள்ள ஒருவரால்தான் இப்படி ஆயுதங்களை வெளிப்படையாகப் போட்டு வைத்திருக்க முடியும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே.

ஆயுதங்கள் தவிர வாள்களும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அவையும் பார்வைக்குப் புதியவை போலவே காட்சியளிக்கின்றன. அவையும் என்ன பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருந்தன என்பதையும் கண்டறிய வேண்டும்.

பவுணிடம் நடத்தப்படும் முறையான விசாரணைகள் யாழ். குடாநாட்டில் நடந்த நீதிக்குப் புறம்பான கொலைகள், கொள்ளைகள் தொடர்பான பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.

எனவே பவுணின் விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பவுணின் பின்னணி, அவர் யாருக்காக இயங்கினார், எத்தகைய குற்றங்களைப் புரிந்தார் அல்லது உடந்தையாக இருந்தார், சட்டத்துக்குப் புறம்பான காரியங்களுக்கு அவரை யார் யார் எல்லாம் பயன்படுத்தினார்கள் என்கிற உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

தேர்தல் ஒன்று நடக்க இருக்கும் நேரத்தில் பவுணிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்ததன் பின்னால் தேர்தல் வன்முறைகள் தொடர்பான திட்டங்கள் எவையும் இருந்தனவா என்பதும் கண்டறியப்பட வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit