வடகொரியாவுடன் இன்னும் தொடர்பில் இருக்கும் நாடுகள் எவை?

பிறப்பு : - இறப்பு :

உலக நாடுகளால் வட கொரியா முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அடிக்கடி காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் கிட்டத்தட்ட 50 நாடுகளுடன் வட கொரியா ராஜீய உறவுகளை வைத்துள்ளது.

வட கொரியா தனிமைப்படுத்தப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

இருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவதாகத் தெரிவதில், ஒரு வித்தியாசமான முரண்பாடு உள்ளது. வியக்கத்தக்க விதமாக வட கொரியா விரிவான ராஜீயத் தொடர்புகளை வைத்துள்ளது.

1948-ல் வட கொரியா உருவாக்கப்பட்டதில் இருந்து, வட கொரியா 160க்கும் மேற்பட்ட நாடுகளுடன் முறையாக ராஜீய உறவுகளை ஏற்படுத்தியது. 48 நாடுகளில் 55 தூதரங்கள் மற்றும் துணைத் தூதரங்களை வைத்துள்ளது.

ஜெர்மனி, பிரிட்டன், ஸ்வீடன் உள்ளிட்ட 25 நாடுகள் வட கொரியாவில் தூதரகங்களை வைத்துள்ளன என லோவி நிறுவனம் கூறியுள்ளது.

வட கொரியா உருவாக்கப்பட்டவுடன், சீனா ரஷ்யா ஆகிய கம்யூனிஸ்ட் அண்டை நாடுகள் உடனடியாக கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுடன் (வடகொரியாவின் அதிகாரபூர்வ பெயர் இதுதான்) இராஜீய உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன.

வட கொரியாவுடன் உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு மற்ற உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஸ்பெயின் , குவைத், பெரு, மெக்சிகோ, இத்தாலி, மியான்மர் போன்ற நாடுகள் கடந்த சில மாதங்களில் அந்த நாட்டில் இருந்து தங்களது தூதர்களை வெளியேற்றியது.

போர்ச்சுகல், உகாண்டா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை தங்களது உறவுகளை இடைநிறுத்தியுள்ளன.

ஆனால், உலகம் முழுவதும் உள்ள பல வட கொரியத் தூதரங்கள் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சில நாடுகள் வட கொரியாவுடனான உறவுகளை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. பல ஆஃப்ரிக்க நாடுகளுடன் இணைந்து வட கொரியா கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆற்றல் மற்றும் விவசாய திட்டங்களுக்காக மற்ற நாடுகளுடன் வட கொரிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இருந்தாலும் வட கொரியாவுடனான ராஜீய உறவுகள் குறைகள் உள்ளவையே.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் உறுப்பினராக உள்ள 35 வளர்ந்த நாடுகளில் வெறும் 6 நாடுகள் மட்டுமே வட கொரியாவுடன் தொடர்பு வைத்துள்ளன.

வட கொரியா உடன் ராஜீய உறவுகளை அமெரிக்கா ஏற்படுத்தியதே இல்லை.

ஜப்பான், தென் கொரியா அல்லது பிரான்ஸ் ஆகியவையும் இதுவரை வடகொரியாவுடன் ராஜீய உறவினை ஏற்படுத்திக்கொண்டதில்லை.

எனவே, அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய ஆசிய கூட்டாளிகளும் வட கொரியா பற்றிய தகவல்களைப் பெற பிற நாடுகளைச் சார்ந்திருக்கின்றன.

ஜெர்மனி, பிரிட்டன், ஸ்வீட்ன் ஆகிய நாடுகளிடம் இருந்து வட கொரியா பற்றிய தகவல்கள் வருகின்றன. இந்த நாடுகள் இன்னும் தங்களது தூதர்களை வட கொரியாவில் இருந்து திரும்ப அழைக்கவில்லை.

ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆஃப்ரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள வடகொரியத் தூதங்கள் அந்நாட்டுக்கு வருமானம் ஈட்டுவதில் இன்றியமையாத பணியாற்றுகின்றன.

அந்த தூதரகங்கள் பெரும்பாலும் தங்கள் செலவுக்கு தாங்களே சம்பாதித்துக்கொள்கிறவையாக உள்ளன . சட்டவிரோத நடவடிக்கைகளால் இது நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

ஐரோப்பியாவில் உள்ள வட கொரியா தூதரக கட்டடங்கள் சட்டவிரோதமாக உள்ளூர் தொழிலுக்காக உள்வாடகைக்கு விடப்படுவதாகப் என புகார்கள் வந்துள்ளன.

வடகொரியாவுடன் பாரம்பரியமாக நட்பு கொண்டுள்ள பாகிஸ்தானில் வடகொரியத் தூதர் ஒருவரது வீட்டில் நடந்த திருட்டு வழக்கு, அவர் பெரிய அளவில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது. இருதரப்பிலும் உளவுத்துறை அதிகாரிகள் ஒருவர் மற்றவரது நாட்டு அதிகாரிகளை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். தூதர்கள் கடுமையான கண்காணிப்புக்கும், பயணக் கட்டுப்பாட்டுக்கும் உள்ளாகின்றனர்.

அணி மாறிவிடக்கூடும் என்ற பயத்தில் வடகொரியாவே தமது தூதர்களை தீவிரமாகக் கண்காணிக்கிறது.

கியூபா, வெனிசுலா மற்றும் லாவோஸ் போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளுடன் வட கொரியா கொண்டுள்ள உறவு பரஸ்பரம் கருத்தியல் ஆதரவு நிலையையும் வழங்குகிறது.

கருத்தியல் தொடர்பு என்பதை விட, அமெரிக்காவுக்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாடு இந்நாடுகள் இடையே ராஜீய உறவுகள் தொடர்ந்து நீடிக்க காரணமாகின்றது. சிரியா, இரான் உடனான உறவுகளும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

கொரியப் பிரச்சனையைத் தீர்க்க ராஜதந்திர தொடர்பே சிறந்தது என ஜெர்மனி போன்ற நாடுகள் கருதுகின்றன.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஜி20 அமைப்பின் 48 நாடுகளில் வெறும் 8 நாடுகள் மட்டுமே வட கொரியா உடனான உறவுகளைக் குறைத்துள்ளன.

உண்மையில், ஹங்கேரி, துருக்கி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் தங்களது ராஜீய உறவுகளை விரிவுபடுத்தியுள்ளன.

வட கொரியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எவ்வளவு பலவீனமாக இருந்தபோதும் அந்நாட்டுடனான ராஜீய உறவுக்கான வாய்ப்புகள் தீர்ந்துவிடவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit