உலகக் கோப்பைக்கு முன்னதாக ஓர் ஒத்திகை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகக் கோப்பைக்கு ஒத்திகையாக நடைபெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாக இருப்பதால், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடர், இந்திய அணிக்கு சிறந்த பயிற்சிக் களமாக அமைந்துள்ளது.

டெஸ்ட் தொடரில் 0-2 என தோல்வியடைந்த போதிலும், இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாகவே இருந்தது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று, இரண்டு வாரங்களுக்குப் பின் புத்துணர்ச்சியுடன் ஒரு நாள் தொடரை அணுக உள்ளார் தோனி. இந்தத் தொடரில் அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

உலகக் கோப்பைக்கு குறைவான நாள்களே இருந்த போதிலும், இந்திய அணியின் தொடக்க ஜோடி யார் என்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. ரஹானே அல்லது ரோஹித் ஆகிய இருவரில் யார் ஷிகர் தவனுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ரஹானே தொடக்க வீரர் எனில், ரோஹித் எந்த இடத்தில் களமிறங்குவார்? அல்லது ரோஹித் தொடக்க வீரராக இறங்கினால் ரஹானே நான்காவது இடத்தில் இறங்குவரா? அல்லது விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருந்து மாற்றப்படுவாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

சனிக்கிழமை பயிற்சியின்போது அம்பாதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் பாரபட்சமின்றி வலைப் பயிற்சியில் ஈடுபட்டதால், யார் எந்த இடத்தில் களமிறங்குவர் என்று தீர்மானிக்க முடியவில்லை என்கின்றனர் மெல்போர்னில் முகாமிட்டுள்ள பத்திரிகையாளர்கள்.

சுழற்பந்து வீச்சைப் பொருத்தவரை அஸ்வின், அக்ஷர் படேல் ஆகிய இருவரும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் புவேனஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

தற்போது ஒரு நாள் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்று வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் பெரிதாக சாதிக்கவில்லை. 12 ஆட்டங்களில் இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை நடைபெறவுள்ள நியூஸிலாந்தில், அந்த அணியை 293, 293, 304, 315 ரன்கள் குவிக்க வழிவகுத்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள். தென் ஆப்பிரிக்காவில் 359, 281 ரன்கள் வாரி வழங்கினர். எனவே, இந்திய பேட்ஸ்மேன்களுடன், பந்து வீச்சாளர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்.

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்து வீச்சு நன்கு பழகி விட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு, சொந்த மண் மற்றுமொரு சாதகமான அம்சம். டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோரை இந்திய பந்து வீச்சாளர்கள் எப்படி கட்டுப்படுத்தப் போகின்றனர் என்பதைப் பொறுத்தே முடிவு அமையும்.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், பிராட் ஹாடின், ஜேம்ஸ் ஃபாக்னர், மிச்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ஜேவியர் டோஹர்டி.

தோராய இந்திய அணி: ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன்), அஸ்வின், அக்ஷர் படேல், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

ஓய்வு குறித்து தோனி மெளனம்; ஒரு நாள் தொடரில் கவனம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதிலும், தோனி அதற்கு விளக்கம் அளிக்கவில்லை. “என் ஓய்வு குறித்து பிசிசிஐ தெளிவாக விளக்கி விட்டது. நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால், பதில் சொல்வது எனது விருப்பம். பதிலளிக்க விரும்பினால் பதில் சொல்வேன்’ என்றார் தோனி.

அதேபோல, தொடக்க வீரர்கள் குறித்த கேள்விக்கு, “நீங்கள் சிறிது காத்திருக்க வேண்டும்’ என்று பதிலளித்தார். சிக்கலான கேள்விகளைத் தவிர்த்த அவர் முத்தரப்பு தொடர் குறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார். அதன் விவம்:

இந்தத் தொடரில் பல வித்தியாசமான விஷயங்களை முயற்சிப்போம். தற்போது நான்கு ஆட்டங்களில் ஆட உள்ளோம். இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினால் ஐந்து ஆட்டங்களில் ஆடுவோம். எல்லா விதத்திலும் சரியான இணைவு இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மேலும் வற்புறுத்தினால் காயம் வீரியமடையும். தேவையெனில் அவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். பணிச்சுமையை நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.

சூழலைப் புரிந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. உலகக் கோப்பை ஆடுகளங்களும், இந்த ஆடுகளங்களும் ஒரே மாதிரி இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப ஆட பழக வேண்டும்.

பிரதான பந்து வீச்சாளர்கள் காயமடைந்தால் தவல் குல்கர்னி, மொஹித் ஷர்மா ஆகியோர் உலகக் கோப்பையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாலேயே, அவர்கள் இந்தத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்டூவர்ட் பின்னி போராட்ட குணம் நிறைந்த வீரர். தேவையெனில் அவர் அதிரடியாகவும் ஆடுவார். பந்தும் சிறப்பாக வீசுவார் என்று தோனிதெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*