
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கோப்ரா கிங் என்றழைக்கப்படும் எல் லிஸ் பீட்டர் நாகப் பாம்பு ஒன்று தீண்டியதால் இறந்துள்ளார்.
எல் லிஸ் பீட்டர், பிலிப்பைன்ஸ் நாட்டின் ‘கோப்ரா கிங்’ என்று அழைக்கப்பட்டவர். தனது 15 வயதில் இருந்தே பாம்புகளைத் தன்னால் கையாள முடியும் என்று கண்டறிந்து, பாம்புகளை செல்லப் பிராணிகள் போல வளர்த்து வந்தார்.
பாம்புகள் அவரைக் கடித்துவிட்டால், கடிபட்ட இடத்தில் மூலிகையை வைத்து தேய்த்துக் கொள்வார். பின்னர், தன்னிடம் இருக்கும் சில மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரித்து குடித்து விடுவார். மேலும், அவர் ஒருமுறை கூட மருத்துவமனைக்கு சென்றதில்லை.
இதனால், நாகப் பாம்புகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவதை தொழிலாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஒருநாள் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் இருந்த ஒரு நாகப் பாம்பை எடுப்பதற்காக மூடியைத் திறந்துள்ளார்.
நாகப் பாம்பின் வால் மூடியில் சிக்கியிருந்ததால் அது வலியால் துடித்துள்ளது. திடீரென மூடியை திறந்தவுடன்கோபத்தில் இருந்த அந்த பாம்பு, பீட்டரைக் கொத்தியது.
இதனால் கோபமடைந்த பீட்டர், நாகப் பாம்பின் தலையை வெட்டி, அதன் ரத்தத்தைக் குடித்துவிட்டார். பின்னர் வழக்கம்போல மூலிகையை கடிபட்ட இடத்தில் தேய்த்துவிட்டு மருந்தையும் விழுங்கியுள்ளார்.
இது எப்போது நடக்கும் செயல் தான் என்பதால் வீட்டில் இருந்தவர்கள் இவரைக் கண்டு பதற்றமடையவில்லை.
ஆனால் சிறிது நேரத்தில் பீட்டரின் வாயில் இருந்து நுரை வருவதை கண்ட அவரின் உறவினர்கள், உடனடியாக பீட்டரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பீட்டர் இறந்த செய்தி நாடு முழுவதும் பரவியது. அவரின் இறப்புக்கு காரணம் பாம்பு தீண்டியதுதானா அல்லது வேறு ஏதாவது உடலியல் பிரச்சனை அவருக்கு இருந்ததா என்பது புதிராக உள்ளதாக பீட்டரின் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்