தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ், இந்த உலகின் மதிப்பு மிக்க வீரர் என்று, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆதம் கில்கிறிஸ்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 1999, 2003, 2007ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை வென்றபோது, முக்கிய காரண கர்த்தாவாகத் திகழ்ந்த கில்கிறிஸ்ட் அளித்த பேட்டி:
டி வில்லியர்ஸ் உலகின் மதிப்பு மிக்க வீரர். பல துறைகளிலும் அவர் ஜொலிக்கிறார். இது அசாதாரணமானது. அவரது ஆட்டம் ரசிக்கும்படி இருக்கும். புதுமையைப் புகுத்துவதிலும் வல்லவர். அவரால் நிதானமாகவும் ஆட முடியும், அடித்தும் ஆட முடியும். விக்கெட் கீப்பராகவும் ஜொலித்துள்ளார். உலகின் சிறந்த ஃபீல்டர்களில் அவரும் ஒருவர். சமீபத்தில் அவர் பந்து வீச்சிலும் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒரு கேப்டனாக அணியையும் திறம்பட வழி நடத்துகிறார். எனவேதான், அவரை உலகின் மதிப்பு மிக்க வீரராகக் கருதுகிறேன் என்றார் கில்கிறிஸ்ட்.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடர் குறித்து கில்கிறிஸ்ட் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மிச்செல் மார்ஷ் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவர். அதேபோல, இந்திய அணியின் கேப்டன் தோனி, விராட் கோலி ஆகியோரும் பெரிய அளவில் கவனிக்க வைப்பர்.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். பெரிய அளவில் ரன் குவிப்பதற்கும், கிரிக்கெட்டை அனுபவிப்பதற்கும் ஆஸ்திரேலிய சூழல் உகந்ததாக இருக்கும்.
நியூஸிலாந்தில், விக்கெட் வீழ்த்துவதைப் பொருத்தே முடிவுகள் அமையும். அங்குள்ள ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க போராடுவர். ஒட்டுமொத்தத்தில் இந்த உலகக் கோப்பை எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருக்கும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.