புதிய அரசியலமைப்பு விடயத்தில் அரசு எப்படிச் சாதிக்கப் போகிறது?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் மீண்டும் ஒரு தடவை ஒத்திப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறிப்படும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தும்படி வழங்கப்பட்ட கடும் அழுத்தங்களைத் தொடர்ந்தே ஒரு வழியாகத் தேர்தலை நடத்த கொழும்பு முன்வந்தது. அதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டது.

ஆனால் உள் ளூராட்சிச் சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து நீதிமன்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு விதித்துள்ள இடைக்காலத் தடையால் முன்னர் திட்டமிடப்பட்டதைப் போன்று ஜனவரி மாதத்தில் தேர்தல் நடப்பது சாத்தியமற்றதாகி விட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கும் ஆதரவு மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அதனால் ஏற்படக்கூடிய பிளவு என்பவற்றைக் கண்டு அஞ்சும் அந்தக் கட்சியே தேர்தலைப் பின்போடுவதற்கு முடியுமான வழிகளில் எல்லாம் முயற்சிக்கின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தாம் விட்ட இடத்தை, இந்தத் தேர்தலின் மூலம் – அரசுக்கு எதிரான கடும் விமர்சனம் தோன்றியுள்ள இந்த நிலையில், – ஈடுகட்டி விட முடியும் என்று மகிந்த அணி எதிர்பார்க்கின்றது.

இந்தத் தேர்தலில் தமது பலத்தைக் கணிசமான அளவு நிரூபித்து விட்டால், சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரி அணியின் பக்கம் மதில் மேல் பூனையாகக் குந்திக்கொண்டிருப்பவர்கள் தமது பக்கம் வந்து விடுவதற்கு வாய்ப்பாகி விடும் என்று அது கணிக்கிறது.

அத்தோடு தமக்கெதிரான அரசின் நடவடிக்கைகளில் அது கடும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்றும் காத்திருக்கின்றது. மகிந்தவுக்கு வாய்ப்பாகி விடக்கூடாது என்பதாலேயே மைத்திரி தரப்பும் இந்தத் தேர்தலை முடிந்த வகையில் எல்லாம் பிற்போட முயற்சிக்கின்றது. பின்னர் அதுவே அந்தத் தரப்புக்கு மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.

தன்னைக் கண்டு மைத்திரி தரப்பு அஞ்சுகின்றது என்பதை வெளியே காட்டிக் காட்டியே மகிந்த தனது செல்வாக்கை இன்னும் அதிகமாக்கிக் கொள்கிறார்.

மைத்திரி தரப்பு இப்படிப் பதுங்குவதால் கிடைக்கும் வெளியைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் இனவாதத்தையும் புதிய அரசமைப்புக்கு எதிரான காழ்ப்புணர்வையும் மக்களிடம் வளர்த்து மகிந்த தரப்பு தனது ஆதரவைப் பெருக்கிக் கொள்கிறது.

அரசு பக்கமோ தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான காத்திரமான விடயங்கள் ஏதும் இல்லாத நிலையே இருக்கின்றது.

பதவிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் அது சாதித்தது என்று சொல்லிக் கொள்வதற்கோ, அதனைக் காட்டி மக்களைக் கவர்வதற்கோ ஒன்றும் இல்லை என்பதே நிலைமை.

எல்லாப் பக்கங்களில் இருந்தும் அது கடும் விமர்சனங்களை மட்டுமே எதிர்கொள்கிறது. ஆக, தேர்தல்களை மேலும் மேலும் தாமதப்படுத்துவது அதற்கு இன்னும் இன்னும் பாதகமாகவே முடிகிறது.

இதுவரை காலமும் தமிழர்களின் பிரச்சினை விடயத்திலேயே கொழும்பு அரசு தாமதித்தலை ஓர் உத்தியாகப் பயன்படுத்தி வந்தது. இப்போது இந்த அரசு எல்லா விடயத்திலும் தாமதித்தலை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்துகிறது.
தமிழர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அவர்களின் காணிகளை விடுவிப்பதில் தாமதம், காணாமற்போனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தாமதம், போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதில் தாமதம், புதிய அரசமைப்பை உருவாக்குதில் தாமதம், பொருளாதார அபிவிருத்தியில் தாமதம் என்று எல்லாவற்றிலும் தாமதங்களையே தனது உத்தியாக்கிக் கொண்டுள்ள இந்த அரசால் வெற்றிகரமாக மக்கள் முன் செல்ல முடியாத நிலையில் அது மீண்டும் மீண்டும் தாமதிப்பதையே தனது உத்தியாகக் கொள்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் விடயத்திலும் அதுவே தான் நடக்கிறது. ஆனால், வெற்றியைப் பெறுவதற்கான காலச் சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மேலும் மேலும் சிக்கலான சூழலுக்குள் தான் அரசைத் தள்ளி வருகின்றது.

அரசும் ஜனாதிபதியும் உள்ளூராட்சித் தேர்தலை இவ்வாறு எதிர்கொள்வதைப் பார்க்கும் போது, புதிய அரசமைப்பின் சாத்தியப்பாடுகள் குறித்த அச்சம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு சிறு தேர்தலையே மகிந்தவை எதிர்த்துக் கொண்டு எதிர்கொள்ள முடியாத அரசு, மிகப் பெரும் அரசமைப்பு விடயத்தில் அதனை எப்படிச் சாதிக்கும்?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*