
உரிமை கேட்ட தமிழ் இனம்
உயிர் இழந்து உடல் சிதைந்து
எரிந்த போது
சிதறிய எலும்புத் துண்டுகள்
புதைந்ததை எப்படி மறப்பது
ஈழத்தின் விதைகளை சுமந்த
கர்ப்பிணிப் பெண்களின்
அங்கங்கள் உருக்குலைந்து
முள்ளிவாய்க்கால்
தெருவோரம் கிடந்ததை
எப்படி அறியாமல் இருப்பது
சிசுக்களின் உயிர்களை
புதைகுழியில் புதைத்து விட்டால்
மீண்டும் துளிர் விட்டு
வளராது என்று எப்படி நினைப்பது
உயிர்மூச்சுடன் படுகுழியில் விதைத்த
என் இன வித்துக்கள்
உயிரற்று உறங்கிடுமோ
வெய்யிலின் வியர்வையிலும்
மழையின் குளிர்ச்சியிலும்
மண்ணில் மலர் மலர்ந்திடாமல்
இருந்திடுமா
நாட்டில் யுத்தங்கள் முடிந்தாலும்
வீட்டில் சத்தங்கள் ஓயவில்லை
ஒவ்வொருவர் உதடுகளும்
விம்மி விம்மித் துடிக்கிறது இன்று
இரத்த வாடை காய்ந்து போனாலும்
ஈழமுகாங்களின் வாசல்கள்
இன்றும் திறந்தே இருக்கிறது
நந்திக் கடல் எங்கும் நீந்தும்
பிணங்களின் உணர்வுகள் நீதி கேட்கிறது
எதற்காக நான் இறந்தேன்
என் தாய் எங்கே
என் தந்தை எங்கே என்று
பிணங்களின் உணர்வுகள்
இன்றும் எம்முடன் பேசுகிறது
ஈழத்தில் பூக்கும்
மலர்களின் வாசனை
இரத்த வாடைகளாய் வீசுகிறது
என் இனம் சிதைந்து போனாலும்
ஒவ்வொரு மனதுகளிலும் சேர்ந்து
துளிர் விடும் மூச்சுக் காற்றாய்
வன்னியூர் கிறுக்கன்