நாடு போற்ற வாழ்ந்த ஊடகரே! – கவிஞர், த. மதி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாடு போற்ற வாழ்ந்த ஊடகரே!

நாடும் மக்களும் பட்ட பாடுகளையெல்லாம்
ஊடகம் ஊடாக உரக்கச் சொன்னவர் – தன்
வீடும் தன் வாழ்வும் என்றில்லாமல் எப்போதும்
நாட்டினதும் இனத்தினதும் மேன்மைக்காய்
உழைத்தவர். இவ்வுலகு விட்டு நீங்கினாலும்
தமிழ் மக்களின் உணர்வுகளில் நீங்காதார்

அரை நூற்றாண்டு ஊடகப் பயணம் கங்கு
கரை கண்டாலும் நேற்று வரைக்கும் நடந்தவர்
வரையென நிமிர்ந்த பெருவிருட்சம் அன்னார்
எத்திரை போட்டாலும் அத்திரை கிழித்து
பளிச்சென எழுந்த கதிரொளி வெளிச்சம்!
இவரை அறியாதார் எவருண்டு தமிழீழத்தில்
இவர் வாழ்வார் மக்கள் நெஞ்சின் ஆழத்தில்!

நித்திரை மறந்து பத்திரிகைப் பணியாற்றியவர்
சத்தியத்தை உலகறியச் செய்தவர் சரித்திரத்தில்
நித்தியமாய் வாழ்வார் தமிழர் உலகில்!
தேசியத்தை நேசித்து ஆற்றிய அரும்பணிக்காய்
தேசியத் தலைவன் கையால் தங்கப்பதக்கம் பெற்றார்
நீள்துயில் கொள்ள இன்று இவ்வுலகு நீத்தார்

வீரகேசரியில் பிடரி சிலிர்க்க எழுந்தார்
ஈழநாடு ஈழமுரசு தினக்கதிரென வியாபித்து
சுடரொளிப் புலியாய் மிளிர்ந்து மக்கள் இடரினைக்
உலகறியப் பகிர்ந்த ஊடகப்போராளி கோபாலரெத்தினம்
உன் எழுத்துக்கள் காலத்தால் மங்காத இரத்தினம்!

அரசியல் கட்டுரை பொதுக் கட்டுரையென
ஆயிரமாயிரமாய் உரசிப் பார்த்தவர்
பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு,
ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு,
ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறையென நூல்
பல தந்தவர் ஈழநாடு விடியுமுன்னே சென்றதென்ன
கோபு அண்ணா?

எண்பத்தியேழு ஆண்டு கால வாழ்க்கையில்
அரை நூற்றாண்டுகள் பத்திரிகையாளனாக வாழ்ந்து
அஞ்சாது அடங்காது துஞ்சாது பயணித்த ஊடகனே!
துணிவு கொண்ட உயர் மேவு புகழ் கண்ட
கோபு அண்ணா! நிம்மதியாய் உறங்குங்கள்
நல்ல தீர்வு கிட்டும் வரை தமிழினம் போராடும்!

கன்னாதிட்டியில் பிறந்து மக்கள் உள்ளங்களைக்
கூரிய எழுத்துகளால் தட்டித் திறந்து பூம்புகாரில்
இறந்து பூலோகம் துறந்து எங்கு தான் சென்றனையோ
எமை மறந்து? நாடு போற்ற வாழ்ந்த ஊடகரே!
வீடுபேறு காண்க! தலை சாய்த்து வணங்குகிறோம்
போய் வாருங்கள்!

கவிஞர் த . மதி – 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*