
ஈழத்து ஊடகத்துறையில் நீண்ட காலம் பணியாற்றியவரும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவருமான எஸ். எம். கோபாலரெத்தினம் நவம்பர் 15 புதன்கிழமை மட்டக்களப்பில் இயற்கை எய்தினார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்த நிலையில் அவர் தன்னுடைய பேரன் வீட்டில் இருக்கும்போதே காலை 9.00 மணியளவில் மரணமடைந்தார்.
ஈழநாடு, ஈழமுரசு, தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களை அலங்கரித்த கோபு, இந்தியப் படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் இந்தியப் படையினரால் சிறை வைக்கப்பட்டிருந்தார். பின்னாளில், தனது அனுபவங்களை ‘ஈழ மண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். தொடர்ந்து, ‘அந்த ஒரு உயிர்தானா உயிர்?’, ‘ஈழம் – முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு’, ‘பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு’ ஆகிய நூல்களை வெளியிட்டார்.
தனது பத்திரிகைத்துறை வரலாற்றில் பல பத்து ஊடகர்களைப் பயிற்றுவித்த அவர் வயது வித்தியாசம் இன்றிப் பழகும் போக்கைக் கொண்டிருந்தார். இதனால், அவரை அணுகுதல் இளம் ஊடகவியலாளர்களுக்கு எளிதாக அமைந்திருந்தது.
ஆற்றல் மிகுந்தவராக இருந்த போதிலும், இறக்கும் வரை எளிமையாக வாழ்ந்து மறைந்த எஸ். எம். ஜீ. அவர்களுக்கு கதிரவன் குழுமம் சார்பில் எமது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.