மேளகர்த்தா இராகங்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

பிறப்பு : - இறப்பு :

“தமிழிசையின் கூறுகள் – அறிமுகம்!”

மேளகர்த்தா இராகங்களும் அவற்றின் நுட்பமான அமைப்பு முறைகளும் – 1

சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் பின்வரும் பாடல் உள்ளது
“ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை”

ஏழு சுரங்களுக்கு தமிழிசையில் நமக்கு கிடைத்த முதல் வாக்கியங்கள் இவையே.
ச – ப வரிசையை, குரல் – இளி என தமிழிசையில் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

“அகநிலைக்குரிய நரம்பின திரட்டி
நிறை, குறை கிழமை பெறுமென மொழிப”

மேற்கூறிய சிலப்பதிகார வரிகள்படி, சுர வரிசையை குறை, நிறை எனவும் பகுத்துள்ளனர் எனத்தெரிகிறது.

ஏழு சுரங்களையும் குறை, நிறை உள்ளவையெனப் பாகுபடுத்தி அவற்றை மேலும் 12 சுரங்களாக விரித்துள்ளனர். ஆங்கில எழுத்துக்கள் மூலம் சுலபமாக இவற்றைக் குறிக்க முடியும்.

ச – ஷட்ஜம் – குறை, நிறை கிடையாது – S
ரி – சுத்தரிஷபம் -குறை – R2
ரி – சதுசுருதிரிஷபம் – நிறை. – R3
க – சாதாரண காந்தாரம் -குறை – G2 = R3
க – அந்தரகாந்தாரம் – நிறை – G3
ம – சுத்தமத்யமம் – குறை -M1
ம – பிரதிமத்யமம் – நிறை – M2
ப – பஞ்சமம் -P
த – சுத்த தைவதம் – குறை – D1
த – சதுசுருதி தைவதம் – நிறை – D2=N1
நி – கைசிகி நிஷாதம் – குறை – D3=N2
நி – காகலி நிஷாதம் – நிறை- N3

இதில் ச-ப எனும் ஒலி நிலைகளில் நிறை/குறை நிலைகள் கிடையாது.
ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலான சுரக்கோர்வையை ஸ்தாயி எனக்கூறுவர்.
தமிழிசை மரபில் இதற்கு மண்டிலம் என்றும் பெயருண்டு.

“வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓர் ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்”
சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

முதல் மண்டிலத்தின் அலைவரிசை 240 ஹெர்ட்ஸ் எனக் கொண்டால், இரண்டாவதை 480 ஹெர்ட்ஸ் எனப் பண்டைய தமிழிசையில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு இரட்டித்த குரல் என்றும் பெயர்.

இப்படியாக ஏழு சுரங்கள் பன்னிரண்டாகப் பிரிவது போல், இந்தப் பன்னிரண்டும் நுண்ணிய சுரங்களாய் மேலும் இருபத்திரண்டு ஆகப் பிரிக்கலாம்.

மேளகர்த்தா இராகங்களின் மிகநுட்பமான அமைப்பு முறைகளை நோக்குவோம்.

ஒவ்வொரு தாய் ராகத்திலும், எல்லா சுரங்களும் இருத்தல் அவசியம்.
ஆரோஹணம் (ஏறுநிரல்), அவரோஹணம் (இறங்குநிரல்) இவை இரண்டிலும் சுரங்கள் வரிசைப்படி இருக்க வேண்டும்.

மேல் ச, கட்டாயம் இருத்தல் வேண்டும். அதாவது ஒரு ச, ப இருத்தல் வேண்டும்.
இரண்டு “ம” க்களில் (மத்யமம்) ஒன்றாவது இருத்தல் வேண்டும்.
இரண்டு ரி, க வில் ஒன்றாவது இருத்தல் வேண்டும்.
ஒரு த, நி இருத்தல் வேண்டும்.

 

மேளகர்த்தா இராகங்களும் அவற்றின் நுட்பமான அமைப்பு முறைகளும் – 2

மேளகர்த்தா ராகசக்கரம்
மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில் ச – ரி – க – ம – ப – த – நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
தாய் இராகம்
கர்த்தா இராகம்
சம்பூர்ண இராகம்
மேள இராகம்
ஜனக இராகம்
என்ற பெயர்களாலும் இதனை அழைக்கப்பர்.

பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான். இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன.

மேளகர்த்தா இராகங்களின் வரலாறு

தொடர்-–-47

1550 இல் ராமாமாத்தியா இயற்றிய “சுவரமேளகலானிதி” என்னும் நூலில் இருந்து இதன் வரலாறு தொடங்குகின்றது.
ராமாமாத்தியா விசயநகரப் பேரரசில் அவைப் புலவராக இருந்த கள்ளிநாதரின் பேரர் எனக் கருதப்படுகின்றார். இவரே மேளகர்த்தா என்னும் முறைக்குத் தந்தை என்று கருதப்படுகின்றார்.

மேளம் என்பது முறைப்படி அடுக்கப்பட்ட கட்டமைப்பு என்னும் பொருள் கொண்டது. பின்னர் கோவிந்த தீட்சதர் “சங்கீதசுதா” என்னும் நூலை ஆக்கினார்.

கடைசியாக கோவிந்த தீட்சதரின் மகன் வேங்கடமகி, 17ம் நூற்றாண்டில் எழுதிய “சதுர்த்தண்டிப் பிரக்காசிகை” என்னும் நூலில்தான் தற்பொழுது பரவலாக அறியப்படும் மேளகர்த்தா இராகம் அமைப்பு கூறப்பட்டுள்ளது. அவருக்குப்பின் வாழ்ந்த கோவிந்தாச்சாரியார் என்பவர் இயற்றிய “சங்கிரக சூடாமணி” என்னும் நூலில் இருந்தும் மேளகர்த்தாக்களின் வரலாறு அறிய முடிகின்றது.

72 மேளகர்த்தாக்களையும் மூன்று பிரிவுகளாக வெங்கடமகி பிரித்திருக்கிறார். தனது காலத்தில் பிரசித்தமாக இருந்த 19 மேள கர்த்தாக்களை கல்பித மேளகர்த்தக்கள் என்றும், மிகுதி 53 மேளகர்த்தாக்களை கல்ப்யமான மேளகர்த்தாக்கள் என்றும், பிற்காலத்தில் பிரசித்திமாக வரக்கூடியவற்றை கல்பயிஷ்யமான மேளகர்த்தாக்கள் என்றும் பிரித்திருக்கிறார். அனைத்து மேளகர்த்தாக்களுக்கும் அவர் பெயர்கள் கொடுக்கவில்லை.

நூறு வருடங்களுக்கு பின் தஞ்சை துளசி மகாராஜாவினால் எழுதப்பட்ட “சங்கீத சாராம்ருதம்” எனும் விடயம் காணப்படுகிறதே தவிர 72 மேளகர்த்தாக்களுக்கு பெயர்கள் காணப்படவில்லை.

கிரம, ஸம்பூர்ண, ஆரோகண, அவரோகண முறையுடன் கூடிய மேளங்களைக் குறிக்கும் கனகாங்கி – ரத்னாங்கி பெயர் தொகுதியானது சங்கீத சாராம்ருதத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்டது.

கோவிந்தாச்சாரியார் இயற்றிய “சங்கிரக சூடாமணி” எனும் சமஸ்கிருத இசை நூலில் முதன் முதலில் இப்பெயர்த் தொகுதியைக் காண்கின்றோம்.

கருநாடக இசையில் 72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. இந்த அமைப்பைக் கொண்டு எந்தவொரு இலக்கம் உள்ள மேளகர்த்தா இராகத்தின் அடையாளப் பண்பையும் (இராக லட்சணத்தையும்) எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இந்த 72 மேளகர்த்தாச் சக்கரம் கர்நாடக சங்கீதத்திற்கு மகுடம் போன்றது என்பர்.

இம் முறையை வேங்கடமகி தாம் இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் நூலில் விளக்கியுள்ளார்.

ஒரு கட்டையில் (ஸ்தாயியிலுள்ள) 12 சுரங்கள் உள்ளன என்பது பல நாட்டு இசைக்கும் பொதுவானது.

இந்த 12 சுரங்களைக் கொண்டு பின்னி விரிவாக்கப்பட்டிருக்கும் 72 மேளகர்த்தாக்கள், பிற நாட்டு இசை இலட்சண, இலட்சிய கலைஞர்களும் போற்றும் ஒன்றாகும்.

வேங்கடமகி என்பவர் தமது “சதுர்த்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலில் 12 சுருதித் தானங்களையே 16 ஆக மாற்றி (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு) 72 மேளகர்த்தா இராகங்களாக ஆக்கினார்.

இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன.

72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த 72 மேளகர்த்தா ராகங்களை,  பனிரெண்டு குழுக்களாக பிரித்துள்ளனர்.

ஆக மொத்தம் 12 சக்கரங்கள். ஒவ்வொன்றிலும் ஆறு ராகங்கள் இருக்கும்.

ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் ஐந்து விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது.

1. சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம் அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை.

2. கிரம சம்பூர்ண ஆரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள்.

3. ஆரோகணத்தில் வரும் சுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.

4. ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.

5. மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை சுரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.

72 மேளகர்த்தாச் சக்கரம் இரு சரிசமமான பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

முதல் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு பூர்வ மேளகர்த்தாக்கள் என்றும் இரண்டாம் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு உத்தர மேளகர்த்தாக்கள் என்றும் பெயர்.

1-36 மேளகர்த்தாக்களில் சுத்த மத்திம சுரமும், 37- 72 மேளகர்த்தாக்களில் பிரதி மத்திம சுரமும் வருவதால் பூர்வ மேளகர்த்தாக்களை சுத்த மத்திம மேளகர்த்தாக்கள் என்றும், உத்தர மேளகர்த்தாக்களை பிரதி மத்திம மேளகர்த்தாக்கள் என்றும் அழைப்பர்.

பூர்வ பாகத்திலும், உத்தர பாகத்திலும் மேளகர்த்தா இராகங்கள் ஒரே விதமான வரிசை முறைப்படி வருகிறன.

72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் ராகங்களில் தைவதமும், நிஷாதமும் மட்டுமே மாறுபடும்.

இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் கீழ்க்கண்டவாறு பெயர்கள் இடப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் அந்தச் சக்கரத்தின் எண்ணைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.

 

-–-48-e1420419666793சுத்த மத்திம இராகங்கள் (பூர்வ மேளகர்த்தாக்கள்)
01 – இந்து (நிலவு , ஒரே நிலவு)
02 – நேத்ரம் (இரு கண்கள்)
03 – அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ).
04 – வேதம் (நான்கு வேதங்கள்)
05 – பாணம் (மன்மதனின் ஐந்து பாணங்கள்)
06 – ருது (ஆறு ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)

பிரதி மத்திம இராகங்கள் (உத்தர மேளகர்த்தாக்கள்)
07 – ரிஷி (சப்த ரிஷிகள்)
08 – வசு (அஷ்ட வசுக்கள்)
09 – பிரம்மா (நவ பிரம்மாக்கள்)
10 – திசி (பத்து திசைகள் – எட்டுடன் மேல் கீழ் சேர்ந்து)
11 – ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)
12 – ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்).

இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் உரிய இராகங்கள் எவையெனப் பார்ப்போம். தொடர்ந்து இந்த வகை இராகங்களின் விரிவுகள், அமைப்பு முறைகள் பற்றியும் தொடர்ந்து வரும் தொடர்களில் காண்போம்.

சுத்த மத்திம இராகங்கள் (பூர்வ மேளகர்த்தாக்கள்)

இந்து (நிலவு , ஒரே நிலவு)
01 – கனகாங்கி
02 – ரத்னாங்கி
03 – கானமூர்த்தி
04 – வனஸ்பதி
05 – மானவதி
06 – தானரூபி

நேத்ரம் (இரு கண்கள்)
07 – சேனாவதி
08 – ஹனுமத்தோடி
09 – தேனுகா
10 – நாடகப்பிரியா
11 – கோகிலப்பிரியா
12 – ரூபவதி

அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ)
13 – காயாகப்பிரியா
14 – வகுளாபரணம்
15 – மாயாமாளவகெளளை
16 – சக்கரவாகம்
17 – சூர்யகாந்தம்
18 – ஹாடகாம்பரி

வேதம் (நான்கு வேதங்கள்)
19 – ஐந்காரத்வனி
20 – நடபைரவி
21 – கீரவாணி
22 – கரகரப்பிரியா
23 – கெளரிமனோகரி
24 – வருணப்பிரியா

பாணம் (மன்மதனின் ஐந்து பாணங்கள்)
25 – மாரரஞ்சனி
26 – சாருகேசி
27 – சரசாங்கி
28 – ஹரிகாம்போஜி
29 – தீரசங்கராபரணம்
30 – நாகாநந்தினி

ருது (ஆறு ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)
31 – யாகப்பிரியா
32 – ராகவர்த்தனி
33 – காங்கேயபூஷணி
34 – வாகதீச்வரி
35 – சூலினி
36 – சலநாட

பிரதி மத்திம இராகங்கள் (உத்தர மேளகர்த்தாக்கள்)

ரிஷி (சப்த ரிஷிகள்)
37 – சாலகம்
38 – ஜாலவர்ணவம்
39 – ஜாலவராளி
40 – நவநீதம்
41 – பவானி
42 – ரகுப்பிரியா

வசு (அஷ்ட வசுக்கள்)
43 – கவாம்போதி
44 – பவப்பிரியா
45 – சுபபந்துவராளி
46 – ஷட்விதமார்க்கிணி
47 – சுவர்ணாங்கி
48 – திவ்யமணி

பிரம்மா (நவ பிரம்மாக்கள்)
49 – தவளாம்பரி
50 – நாமநாராயணி
51 – காமவர்த்தனி
52 – ராமப்பிரியா
53 – கமனாச்ரம
54 – விஷ்வம்பரி

திசி (பத்து திசைகள் – எட்டுடன் மேல் கீழ் சேர்ந்து)
55 – சியாமளாங்கி
56 – சண்முகப்பிரியா
57 – சிம்மேந்திரமத்திமம்
58 – ஹேமவதி
59 – தர்மவதி
60 – நீதிமதி

ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)
61 – காந்தாமணி
62 – ரிஷ்பப்பிரியா
63 – லதாங்கி
64 – வாசஸ்பதி
65 – மேசைகல்யாணி
66 – சித்ராம்பரி

ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்)
67 – சுசரித்ர
68 – ஜோதிஸ்வரூபிணி
69 – தாதுவர்த்தனி
70 – நாசிகாபூஷணி
71 – கோசலம்
72 – ரசிகப்பிரியா

இசைத்தமிழ் வரலாறு- இசையமுதம் – தொடர் –47, 48,  49
சிறீ சிறீஸ்கந்தராஜா

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit