டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியபோது, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் கெஜ்ரிவாலை கடுமையாக சாடினார்.
‘‘49 நாள் ஆட்சி நடத்தி விட்டு, ஓராண்டு காலத்தை வீணாக்கிய கெஜ்ரிவாலை தண்டியுங்கள்’’ என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடி தருகிற வகையில், டெல்லியில் நேற்று கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘49 நாள் ஆட்சியில் நாங்கள் எவ்வளவோ செய்தோம். வங்கிகளில் கணக்கு தொடங்கியதை தவிர அவர்கள் (மோடி) என்ன செய்தார்கள்? பணம் எங்கே?’’ என்று கேள்வி எழுப்பினார்.
கலகக்காரர் என தன்னை மோடி கூறியது குறித்து அவர் பதில் அளிக்கையில், ‘‘ நான் எப்படியும் இருந்து விட்டுப்போகிறேன். ஆனால், நான் 49 நாளில் செயல்பட்டிருக்கிறேன். டெல்லி அரசில் ஊழலை ஒழித்திருக்கிறேன். பா.ஜனதா வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது. பின்னர் மறந்து போகிறது’’ என சாடினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘எங்களுக்கு போராட்டம் நடத்தவும் தெரியும். ஆட்சி நடத்தவும் தெரியும். பாரதீய ஜனதாவுக்கு போராட்டம் நடத்தவும் தெரியாது. ஆட்சி நடத்தவும் தெரியாது’’ என்றார்.