யேமன் மோதல் – ம(றை)றக்கப்படும் யுத்தம் – பூமிபுத்ரன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

yeman

இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டில் இரண்டு உலக மகா யுத்தங்களைக் கண்டுவிட்ட உலகில் யுத்தம் தொடர்பிலான வெறுப்பு கணிசமான அளவில் இருந்தாலும் கூட யுத்தங்களும் ஆயுத மோதல்களும் முடிந்து போகாமல் இல்லை. இரண்டாம் உலக யுத்தம் முடிவிற்கு வந்த கையோடு ஆரம்பமான கொரிய யுத்தம், இன்றும் கூட உலக மக்களால் நினைவு கூரப்படும் வியட்நாமிய யுத்தம், இன்றும் தொடர்கதையாக உள்ள ஆப்கானிஸ்தான் யுத்தம், ஈரான்-ஈராக் யுத்தம், இவற்றுக்கும் அப்பால் நடைபெற்ற தேச விடுதலைப் போர்கள் என யுத்தங்கள் தொடர்ந்து நடைபெற்றே வந்திருக்கின்றன. இன்றும் கூட உலகின் பல மூலை முடுக்குகளில் யுத்தங்கள் இடம்பெறவே செய்கின்றன.

இவற்றுள் சில உலகின் கவனத்தை ஈர்ப்பவையாகவும் ஒரு சில மறக்கப்பட்ட, உலகின் கண்ணில் இருந்து மறைக்கப்பட்ட யுத்தங்களாகவும் இருந்து வருகின்றன. இத்தகைய மறக்கப்பட்ட, உலகின் கண்ணில் இருந்து மறைக்கப்பட்டு வரும் யுத்தங்களில் ஒன்று யேமன் யுத்தம். உள்நாட்டு யுத்தம் என வரையறை செய்துவிடப்பட முடியாத இந்த யுத்தம் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளின் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல் காரணமாக பன்னாட்டு யுத்தமாக மாற்றம் கண்டுள்ளது. மனித உரிமைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள சவூதி அரேபியாவிற்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் தொடர்ச்சியாக ஆயுத விநியோகங்களை மேற்கொண்டு வருவதன் காரணமாக அந்த நாட்டு அரசாங்கங்கள் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கண்டனங்களைச் சந்தித்து வருகின்றன.

நலன்கன் என்ற அச்சிலேயே உலகம் சுழல்கின்றது. யேமன் மோதலுக்கும் நலன்களே காரணம். இன்றைய நிலையில் சவூதி அரேபியா களம் இறங்கக் காரணம் ஈரான். தலைநகர் சானாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கௌத்தி படைகள் ஈரான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவை. இந்தப் படைகளால் பதவி விலக்கப்பட்டு, சிறைப் பிடிக்கப்பட்டு, பின்னர் சவூதி அரேபியாவிற்குத் தப்பியோடிய ஹாடி தலைமையிலான அரசாங்கத்தையே சவூதி அரேபியாவும் மேற்குலகும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஹாடி தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் பதவியில் அமர்த்துவதே சவூதி அரேபியாவின் இலக்கு. தனது இலக்கை அடைய எத்தகைய விலையையும் தருவதற்கு சவூதி தீர்மானித்துள்ள காரணத்தால், விமர்சனங்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தனது அராஜகத்தைத் தொடர்கிறது.

சவூதி அரேபியாவின் கரிசனைக்கு மற்றொரு காரணம் யேமனின் பூகோள அமைவிடம். சவூதி அரேபியாவுடனும் ஓமானுடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள யேமன், ஆபிரிக்கக் கண்டத்துக்கு மிக அருகில் உள்ளது. ஷஆபிரிக்காவின் கொம்பு| என அழைக்கப்படும் பிராந்தியத்தில் ஒருசில பத்து கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அப்பால் ட்ஜிபுற்றி, எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.

அரேபிய பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய பரப்பளவைக் கொண்ட நாடான யேமன் பாலைவனப் பிராந்தியத்தில் உள்ள பசுந்தரையாகவும் விளங்குகிறது.

வலதுசாரி வடக்கு, இடதுசாரி தெற்கு என இரண்டு நாடுகளாக இருந்த யேமன் 1990 இல் ஒன்றாக இணைந்தது. இரண்டு ஆண்டுகளிலேயே இரு தரப்புக்கும் இடையில் ஆயுத மோதல் உருவாகியது. தீவிரமடைவதும், தணிவதுமாக இந்த மோதல் இன்றுவரை தொடர்கிறது. இந்த மோதல்களின் பின்னணியில் சவூதி அரேபியாவே உள்ளது என்பது சொல்லாமலேயே புரியும்.

இணைந்த யேமனின் முதல் அரசுத் தலைவராக 1990 இல் பதவியேற்ற அலி அப்துல்லா சலே 2015 இல் தானாகப் பதவி விலகும் வரை அப் பதவியில் நீடித்தார். ரியூனிசியாவில் தோன்றி சுழன்றடித்த அரபுப் புரட்சி காரணமாக சலே பதவி துறக்க நேரிட்டது. துணை அரசுத் தலைவராக விளங்கிய ஹைடி தற்போது சவூதி அரேபியாவின் வலையில் வீழ்ந்து, சலே அவர்களை எதிர்க்கும் அணியில் இருந்து வருகிறார். ஒரு காலத்தில் எதிரெதிர் அணியில் இருந்த சலேயும் கௌத்தி படையினரும் தற்போது ஓரணியில் நின்று போரிடுகின்றனர்.

இந்தச் சண்டையில் அமெரிக்கா மூக்கை நுழைக்க இரண்டு காரணங்கள். ஒன்று உள்நாட்டில் நிலவும் அமைதியின்மையைத் துணைக்கு வைத்துக் கொண்டு யேமனில் எழுச்சி பெற்றுவரும் அல் கைதாவும், ஐ.எஸ். அமைப்பும். அடுத்த காரணம், ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பிற்கு எதிரி நிலைப்பாட்டை யேமன் எடுத்தமை. அக் காலகட்டத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்புரிமையைக் கொண்டிருந்த யேமன் அமெரிக்க நிலைப்பாட்டை எதிர்த்ததோடு, வாக்களிப்பில் கலந்து கொள்வதையும் தவிரித்திருந்தது.

ஷபட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும|; என்ற பழமொழியை நிரூபிக்க ஒரு எடுத்துக் காட்டு இன்றைய காலகட்டத்தில் உள்ளதென்றால் அது யேமன் நாட்டில் நடைபெறும் யுத்தமும் அதன் விளைவாக மக்கள் படும் துயரமுமே ஆகும். குண்டு வீச்சு, கடலிலும் தொடரும் முற்றுகை என்பவற்றால் வழங்கல்கள் தடைப்பட்டுள்ள நிலையில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டு வருகின்றனர். வறுமை, இடப்பெயர்வு போதிய மருத்துவ வசதியின்மை என்பவை மக்களை வாட்டி வருகின்றது. யேமன் நாட்டில் செயற்பட்டு வந்த மருத்துவமனைகளில் அரைவாசிக்கும் மேல் செயலிழந்து உள்ள நிலையில், இவ்வருட ஆரம்பத்தில் அந்த நாட்டில் பரவிய வாந்திபேதி நோய் 1.500 பேர் வரையானோரைப் பலி கொண்டுள்ளது. இதில் சிறுவர்களும், பெண்களும், வயோதிபர்களுமே அதிகம்.

சோமாலியா நாட்டிற்கு மிக அண்மையில் அமைந்துள்ளதாலேயே என்னவோ அந்த நாட்டில் அரங்கேறிய அவலங்கள் இந்த நாட்டிலும் அப்படியே பிரதிபலித்து வருகின்றன. உலகிலேயே நடைமுறை அரசாங்கம் இல்லாத ஒரு நாடு சோமாலியா என ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட, யேமனும் அத்தகைய நிலையிலேயே உள்ளது.

2015 முதல் இடம்பெற்றுவரும் மோதலில் இதுவரை 10,000 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் சவூதி அரேபியா தலைமையிலான படைகளின் விமானக் குண்டு வீச்சிலேயே இறந்துள்ளனர். பல தடவைகளில் பொதுமக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் என்பவை குண்டு வீச்சுக்கு இலக்காகி உள்ள போதிலும் உலக நாடுகளின் கண்டனங்கள் வாய்மொழியோடு நின்று போகின்றன. அதற்கு அப்பால் செல்வதற்கு மத்திய கிழக்கின் சண்டியனான சவூதி அரேபியாவின் செல்வாக்கு இடந் தரவில்லை.

ஐ.நா. மத்தியஸ்தத்துடனான அமைதிப் பேச்சுக்கள் பெயரளவில் இடம்பெற்று வந்தாலும் அதன் பலன் இன்னும் துயரப்படும் மக்களுக்கு ஆறுதலாக அமையவில்லை. வரண்ட பாலைவனங்கள் நிறைந்த அரேபியாவில் சோலைவனமாகத் திகழும் ஒரேயொரு நாடான யேமனின் இன்றைய துயரைத் தீர்க்க எந்த மேய்ப்பன், எப்போது வருவார்? அந்த மக்களின் காத்திருப்பு நிறைவேறுமா?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit