கோலி, ராகுல் சதம்: மீண்டு வந்தது இந்தியா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

போராட்ட குணத்துக்கு பெயர் போன இந்திய கேப்டன் விராட் கோலி, தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஆகியோர் சதம் அடித்துக் கை கொடுக்க, இந்திய அணி மீண்டு வந்துள்ளது.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 572 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது.

லோகேஷ் ராகுல் 31 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா 40 ரன்களுடனும் வியாழக்கிழமை மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். காலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷத்துடன் செயல்படுவர் என்பதால், இருவரும் ரன் குவிப்பதைக் காட்டிலும், விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்தனர். இதனால் முதல் செஷனில் இந்தியா பெரிதாக ரன் குவிக்கவில்லை. இருப்பினும், அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் நாதன் லியான் வீசிய சுழலில் ஏமாந்த ரோஹித், கிளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன் பின் லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். கோலி சந்தித்த முதல் பந்திலேயே கண்டம் இருந்து தப்பினார். அவரது பேட்டில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் தொடையில் பட்டு கீழே விழுந்தது. அதற்குள் எதிர்முனையில் இருந்த ராகுல் மைதானத்தின் பாதி தூரம் வரை வந்து விட்டார். ஆனால், விராட் கோலி கிரீஸில் இருந்து நகரவில்லை. எனவே, மீண்டும் “நான் ஸ்ட்ரைக்கர் எண்டு’க்கு ஓடினார் ராகுல், அப்போது கையில் இருந்த பேட் கீழே நழுவி விழ, வெறுங்கையுடன் ஓடி ஒரு வழியாக பாய்ந்து எல்லைக்குள் விழுந்து ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பினார். மாற்று வீரராகக் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மட்டும், விக்கெட் கீப்பரிடம் பந்தை வீசாமல், நேரடியாக பந்துவீச்சாளரிடம் பந்தை எறிந்திருந்தால் ராகுல் அப்போதே பெவிலியன் திரும்பி இருக்கக் கூடும்.

ராகுல், கோலி இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பொதுவாக, கேட்ச்களை நழுவ விடாத ஸ்டீவ் ஸ்மித் பாரபட்சமின்றி ராகுல், விராட் கோலி இருவருக்கும் தலா ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார். குறிப்பாக, ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மித் கேட்ச்சை மிஸ் செய்தார். அப்போது “அருமையான வாய்ப்பு ராகுல்… நீங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நழுவ விடாதீர்கள்’ என்றார் வர்ணனையாளர். அவரது வாக்கு பலித்தது.

புதன்கிழமை தட்டுத்தடுமாறிய ராகுல், வியாழக்கிழமை தெளிவுடன் இருந்தார். 88 ரன்களில் இருந்தபோது நாதன் லியான் பந்தை சிக்ஸர் விளாசி, தன் மீதிருந்த நெருக்கடியை ஆஸ்திரேலிய பக்கம் திருப்பி விட்டார். இந்த இடைவெளியில் விராட் கோலியும் அரைசதம் அடித்து முன்னேறி இருந்தார்.

எதிர்பார்த்தது போலவே ராகுல் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். சதம் அடித்ததும், தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை கச்சிதமாக நிறைவேற்றிய திருப்தியில் கோலியை கட்டித் தழுவினார் ராகுல். தன் தேர்வு சோடை போகவில்லை என்ற திருப்தி கோலியின் முகத்தில்.

ஒரு வழியாக மிச்செல் ஸ்டார்க் வீசிய பந்து ராகுலின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆக, அதை ஸ்டார்க் எளிதாக கேட்ச் செய்தார். மெல்போர்னில் தவற விட்ட வாய்ப்பை இங்கு நிறைவேற்றிய (110 ரன்கள்) திருப்தியுடன் ராகுல் வெளியேறினார்.

அடுத்து ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி தனக்கே உரிய பாணியில் பவுண்டரிகளை விரட்டினார். கூடவே, டெஸ்ட் தொடரில் தனது பத்தாவது சதத்தைப் பதிவு செய்தார். இருவரும் இணைந்திருந்தது சிறிது நேரமே என்றாலும், பார்ட்னர்ஷிப் 50 ரன்களை வேகமாகக் கடந்தது.

ஷேன் வாட்சன் வீசிய 100-ஆவது ஓவர் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ரஹானே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழக்க, நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்டில் வாய்ப்பு பெற்ற சுரேஷ் ரெய்னா அடுத்த பந்திலேயே, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் களமிறங்கிய ரித்திமான் சாஹா, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த நினைத்த வாட்சனின் முயற்சிக்கு தடையாக இருந்தார்.

ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 230 ரன்கள் பின்தங்கியுள்ளது.

விராட் கோலி 140 ரன்களுடனும், ரித்திமான் சாஹா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கேட்ச் நழுவியதற்கு ஸ்மித் சொன்ன காரணம்…

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான ஃபீல்டர். ஆனால், வியாழக்கிழமை அவர் நழுவ விட்ட இரண்டு கேட்ச்கள் ஆட்டத்தின் முடிவையே மாற்றி விட்டது. 46 ரன்கள் எடுத்திருந்தபோது லோகேஷ் ராகுல் அடித்த பந்து, கீப்பருக்கு பின்னால் செல்ல அதை ஓடிச் சென்று பிடிக்க முயன்று பந்தைக் கீழே விட்டார் ஸ்மித்.

அதிருப்தியில் அவர், வானத்தை நோக்கி கைகளைக் காட்டி பழித்தார். அதாவது, அந்தரத்தில் பறக்க விட்டிருக்கும் “ஸ்பைடர்கேமரா’வின் வயர் தன்னுடைய கவனத்தை திசை திருப்பி விட்டதாக போட்டி முடிந்த பின் அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோல, இரண்டாவது ஸ்லிப்பில் இருந்தபோது விராட் கோலி கொடுத்த கேட்ச்சையும் அவர் நழுவ விட்டார். இதை சரியாகப் பயன்படுத்தி இருவருமே சதம் அடித்தனர்.

ஸ்டார்க்குக்கு கண்டனம்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க், முரளி விஜயை ஆட்டமிழக்கச் செய்த பின், தகாத முறையில் நடந்து கொண்டார். இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஸ்டார்க்கின் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

“”முதல் சதம் அடித்ததில் பெருமை என்பதை விட ஒரு நிம்மதி கிடைத்துள்ளது. முதல் டெஸ்டில் மோசமாக ஆடியதால், இந்த டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை.

வாய்ப்பு கிடைத்ததும், இதுதான் என்னை நிரூபிக்க சிறந்த தருணம் என கருதினேன். தொடக்க வீரராகக் களமிறங்கியதும் ஒரு வகையில் ஒத்துழைத்தது. முதல் செஷனில் பொறுமையுடன் ஆடினால், அடுத்த செஷன்களில் ரன் குவித்து விடலாம் என்ற என் எண்ணம் பலித்தது”

லோகேஷ் ராகுல், இந்திய தொடக்க வீரர்.

கோலியின் மைல்கல்…

* விராட் கோலி இந்தத் தொடரில் இதுவரையிலும் 639 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் குவித்த ராகுல் திராவிட்டை முந்தினார். 2003-2004 சுற்றுப் பயணத்தின்போது ராகுல் 619 ரன்கள் எடுத்திருந்தார்.

* கோலி இந்தத் தொடரில் நான்காவது முறையாக சதம் அடித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் 10-ஆவது சதம்.

* ஒரு கேப்டனாக கோலி தொடர்ந்து மூன்று இன்னிங்ஸில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் 1975-இல் ஒரு கேப்டனாக, தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார்.

* காவஸ்கருக்கு அடுத்தபடியாக ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன், 1971, 1978-79-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக காவஸ்கர், இந்த சாதனையைப் படைத்திருந்தார்.

* ஹெர்பர்ட் ஸட்கிளிஃப், வால்டர் ஹமண்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரில் நான்கு சதங்கள் அடித்த அன்னிய வீரர் என்ற பெருமையும் கோலிக்கு கிடைத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit