ஜல்லிக்கட்டு தடையை உடனடியாக நீக்க வேண்டும்!- செந்தமிழன் சீமான் அறிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜல்லிக்கட்டுக்கு விளையாட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டு. காலம் காலமாகத் தமிழர்களின் வீர அடையாளமாகவும் பண்பாட்டுச் சிறப்பாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டை ஒரு சில காரணங்களைச் சொல்லி நடத்த விடாமல் தடுப்பது தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் செயல். வெளிநாட்டில் நடப்பதைப் போல் மாடுகளை ஒரு வளையத்துக்குள் சுற்ற வைத்தோ, சுவரில் மோத வைத்தோ பலிகொடுக்கும் விளையாட்டு அல்ல இது. மாடுகளின் கொம்புகளுக்கு நிகராக நமது நெஞ்சை உயர்த்தி நிற்கும் தமிழனின் வீர விளையாட்டு. எத்தகைய போட்டியையும் நேருக்கு நேர் நின்று நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளும் தமிழனின் தயக்கமற்ற போர்க்குணத்தின் அடையாளமே ஜல்லிக்கட்டு. ஆனால், இத்தகைய உயரிய விளையாட்டின் கலாசார சிறப்பை உணராமல், மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஆபத்தான நிகழ்வாகச் சித்தரிப்பது வேதனைக்குரியது.

எங்கள் பாட்டன் சிவபெருமான் வழிபாட்டிலேயே மாடுகளைத்தான் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். நந்தியை வணங்கிய பிறகே சிவனை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். ஒரு மாட்டின் கதறலுக்காக சொந்த மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனின் வம்சாவழியான தமிழர்கள் மாடுகளை தங்கள் குடும்பங்களின் ஓர் அங்கமாகக் கொண்டாடி வருகிறார்கள். உழவுத்தொழில் செய்யும் விவசாயிகளின் வாழ்வில் மாடுகள் மனிதநிகர் மகத்துவங்களாகக் கொண்டாடப்படுவதின் அடையாளமே மாடுபிடி விழாக்கள். சமீப காலங்களில் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் மருத்துவ ஏற்பாடுகளுடனும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால், மனிதர்களுக்கோ மாடுகளுக்கோ பெரிய அளவில் பாதிப்பாகாமல் தடுப்பது சுலபம். எனவே, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த எல்லாவித நடவடிக்கைகளையும் அரசுத்தரப்பு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இராணுவத்தில் இருக்கும் குதிரைப்படைகளையோ அண்டை மாநிலமான கேரளாவில் நடக்கும் யானைக் கொண்டாட்டங்களையோ மிருகவதை எனச் சொல்லாதவர்கள் ஜல்லிக்கட்டில் மாடுகளை வதை செய்யப்படுவதாக சொல்வதை மட்டும் எப்படி ஏற்க முடியும்?

மறத்தமிழனின் மன உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் இத்தகைய சித்தரிப்புகளைப் பொய்யாக்கும் விதமாக இந்த வருடம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அரசு உடனடியாகத் திட்டமிட வேண்டும். அதற்கான சட்டப் போராட்டங்களை விரைந்து நடத்தி, தமிழனின் வீர விளையாட்டுக்கு விடிவு கொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. அரசு மட்டும் அல்லாது ஒருமித்த தமிழர்களின் உணர்வாகவும் இது வெளிப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்து உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*