தோனி உத்தமர்; கோலி வல்லவர்: ரவி சாஸ்திரி

பிறப்பு : - இறப்பு :

விராட் கோலியும், இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியும் நெருக்கமாக இருப்பதாலேயே, தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்றொரு கருத்து நிலவுகிறது. ஆனால், ரவி சாஸ்திரி இதை மறுத்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி, ஞாயிற்றுக்கிழமை பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டி:

கோலி களத்தில் ஆக்ரோஷமாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவேளை அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தால், அவரை கேள்வி கேட்கலாம். ஆனால், அவர் 500 ரன்களுக்கு 1 ரன் மட்டுமே குறைவாக எடுத்துள்ளார். எனவே, அவர் ஆக்ரோஷமாக செயல்படுவது சரியே. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கூட, விராட் கோலியின் திறமையைப் பாராட்டியுள்ளார்.

கோலி இளமையானவர்; இளம் கேப்டன். அவர் படிப்படியாக கற்று வருகிறார். விரைவில் அவர் முதிர்ச்சியடைந்த வீரராக உருவெடுப்பார்.

தோனி ஓய்வு: மெல்போர்ன் டெஸ்ட் போட்டி, பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் தோனி ஓய்வு அறைக்கு வந்தார். எங்களிடம் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அவரது முடிவு தீர்க்கமான முடிவு என்பது மட்டும் தெளிவு. ஓய்வு குறித்து முதலில் அவர் தன் குடும்பத்தினரிடம் கூட தெரிவிக்கவில்லை. அணியினரிடம்தான் தெரிவித்தார். அணிக்கும், தனக்கும் அவர் நேர்மையுடன் நடந்து கொண்டார். தோனி இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.

கடந்த ஒரு வருடமாக அணியை மேம்படுத்த பல கடின முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை உணர்ந்த அவர், இதுதான் ஒரு இளம் வீரர் தலைமை ஏற்க சரியான நேரம் என கருதி ஓய்வு பெற்றிருக்கலாம். தனக்கு அடுத்த கேப்டன் யார், தனக்கு அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற எதிர்பார்ப்பை எல்லாம் அவர் ஏற்படுத்தவில்லை. அவர் காரணமின்றி விலகவில்லை. அணியை இக்கட்டான நிலையிலும் விட்டுச் செல்லவில்லை. தோனியின் நடவடிக்கை சுயநலமற்றது.

தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுத்து விட்டார். அவர் இன்னும் தொடர்ந்து சில ஆண்டுகள் ஒரு நாள், இருபது ஓவர் ஆட்டங்களில் ஆடுவார், எதிரணிக்கு சிம்ம சொப்பணமாக இருப்பார் என்றார் ரவி சாஸ்திரி.

ஜான்சன் விலகல்

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் தசைப்பிடிப்பு காரணமாக சிட்னி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விஷயம். ஜான்சனுக்குப் பதிலாக மிச்செல் ஸ்டார்க் அல்லது பீட்டர் சிடில் வாய்ப்பு பெறலாம்.

ஹியூஸூக்கு மரியாதை

போட்டி நடைபெறவுள்ள சிட்னி மைதானத்தில்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் உயிரிழந்தார் என்பதால், ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட்டை உணர்வுப்பூர்மாக அணுக உள்ளது. சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்று அதை, ஹியூஸூக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது ஆஸ்திரேலிய வீரர்களின் விருப்பம்.

போட்டி தொடங்கும் முன் ஹியூஸூக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆஸ்திரேலிய அணியினரின் ஓய்வு அறைக்கு முன்னதாக ஹியூஸின் பெயர் பொறிக்கப்பட்ட பலகை நிறுவப்படவுள்ளது.

சொந்த மண்ணில் கடைசி டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ், அடுத்த ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். எனவே, இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்தான், அவர் சொந்த மண்ணில் பங்கேற்கும் கடைசி டெஸ்ட். இந்தத் தகவலை ரோஜர்ஸ் உறுதிப்படுத்தினார்.

“இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த டெஸ்ட் போட்டியைப் போல ஆக்ரோஷத்துடன் செயல்படுவாரா அல்லது ஒரு கேப்டனுக்குரிய நேர்த்தியுடன் செயல்படுவரா என்பதைப் பார்க்க ஆவல். தோனி கிரிக்கெட்டைப் பற்றி பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு வீரரையும்எப்படி ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் அற்புதமான கேப்டன்”
வார்னர், ஆஸ்திரேலிய தொடக்க வீரர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit