கிழக்கு மாகாணசபைத் தேர்தல் – தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா? – சண் தவராஜா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் ஆட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சிகள் பலவும் கணக்குப் போட ஆரம்பித்துள்ளன. மூவின மக்களும் ஏறக்குறைய சரிசமமாக வாழும் இந்த மாகாணத்தில் கூட்டாட்சியே சாத்தியமாக உள்ள நிலையில் முதலமைச்சர் ஆசனத்தில் யார் அமர்வது என்ற விவாதம் பல மாதங்களுக்கு முன்னரேயே ஆரம்பித்து விட்டது. தமிழ் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கைக் கொண்ட கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கைக் கொண்ட கட்சியாகத் திகழும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து தற்போதைய மாகாண சபையில் ஆட்சி நடாத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டணி தேர்தலின் பின்னரும் தொடருமா, தொடருமாயின் முதலமைச்சராக தமிழர் ஒருவர் இருப்பாரா என்கின்ற கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

தற்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், முஸ்லிம்களின் முதலமைச்சராகச் செயற்படுகின்றாரே அன்றி ஒட்டு மொத்த மாகாணத்தின் முதலமைச்சராகச் செயற்படவில்லை எனத் தெரிவிக்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், அடுத்த முதலமைச்சராகத் தமிழர் ஒருவரே பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுள் ஒருசிலர் ஒருபடி மேலே சென்று பச்சை இனவாதத்தையும் கக்கி வருகின்றனர்.

தமிழ்ச் தேசியவாதிகளின் இத்தகைய உணர்ச்சிக் கருத்துக்கள் தமிழ் – முஸ்லிம் இனங்கள் மத்தியில் உள்ள இன நல்லுறவைக் குலைக்க முயல்வதாகக் குற்றஞ் சாட்டும் நடுநிலையாளர்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையேயான இணைப்பு என்ற நீண்டநாள் இலக்கை எட்டுவதற்கு தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான நல்லுறவு அவசியம் எனத் தெரிவித்து வருகின்றனர். அதற்காக முதலமைச்சர் பதவி மாத்திரமன்றி வேறு எதுவாக இருந்தாலும் அத்தகைய விட்டுக் கொடுப்பைச் செய்தே ஆக வேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். எனினும், தேர்தலுக்குத் தேர்தல் தமிழ்த் தேசியக் கருத்துக்களை விதைத்து வாக்குகளை அறுவடை செய்யும் தந்திரத்தைக் கடைப்பிடித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய நிலையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது புதிராக உள்ளது.

தற்போதைய மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது என்னும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தமைக்கு ஆழமான காரணங்கள் இருந்தன.

37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி உள்ளது. இந்தக் கட்சியில் இரண்டு தமிழர்கள் உட்பட 14 அங்கத்தவர்கள் உள்ளனர். 11 ஆசனங்களைக் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. 7 ஆசனங்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும், மூன்று ஆசனங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் உள்ளன. தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி 200,044 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களையும் 2 மேலதிக ஆசனங்களையும் பெற்றிருந்தது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதல் தடவையாகக் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 193,827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைக் கைப்பற்றியது. 6217 வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 மேலதிக ஆசனங்களை இழக்க நேரிட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து கொள்ள, மாகாண சபை முதலமைச்சராக எம்.என். அப்துல் மஜீத் பதவியேற்றார். செப்டெம்பர் 2012 முதல் பெப்ரவரி 2015 வரை அவர் முதலமைச்சராகத் தொடர்ந்தார்.

மகிந்த ராஜபக்~வைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்கோடு இலங்கையில் உள்ள கட்சிகள் செயற்பட்டு தமது இலக்கை எட்டி, 2015 முற்பகுதியில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக் கொண்ட சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்ட பிளவு கிழக்கு மாகாண சபையிலும் எதிரொலித்தது. இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின.

இத்தகைய முடிவு எட்டப்பட்ட காலகட்டம் மிக முக்கியமானது. அசைக்க முடியாத ஒருநபர் எனக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்~வுக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வி, தேசிய அரசாங்கம் என்ற – இலங்கைக்குப் புதுமையான – ஒரு கருத்துடன் பிரதான கட்சிகள் களமிறங்கியமை, சிறுபான்மை மக்களின் ஆதரவோடு மகிந்த தோற்கடிக்கப்பட்டமை, அனைத்துக்கும் மேலாக தீவிர இனவாதச் சிந்தனை கொண்ட மகிந்த குழுமம் மீண்டும் மீள் எழுச்சி கொள்ள அனுமதிக்கக் கூடாது என்ற மனோநிலை பொது மக்கள் மத்தியில் நிலவியமை போன்றவையே அன்றைய நிலையில் மாகாண சபையில் குறைந்த இடங்களையே கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கக் காரணம்.

அத்தோடு, புதிதாக உருவான தேசிய நல்லிணக்க அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகம் செய்ய உள்ள நிலையில் தமது உரிமைகளை இணைந்து வலியுறுத்தும் நோக்குடன் – சிறுபான்மைக் கட்சிகள் என்ற அடிப்படையில் – முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நல்லுறவைப் பேண வேண்டிய அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்திருந்த நிலையிலேயே அன்றைய ஆட்சியமைப்பு நிகழ்ந்தது.

அத்தகைய முடிவு ஒன்றை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று கவனத்தில் கொண்ட அனைத்து அம்சங்களும் இன்றைய காலகட்டத்திலும் கூட பொருந்தத் தக்கவையாகவே உள்ளன. அதேவேளை, இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முழுமையுமே மாறி மாறி முஸ்லிம் முதலமைச்சர்கள் கையிலேயே கழிந்து விட்டது, இந்நிலையில் தமிழ் முதலமைச்சர் ஒருவர் அந்தக் கதிரையை அலங்கரிக்க வேண்டும் என்று கோருவதில் உள்ள யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கள நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திக்குமாயின் – அதுவே பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இரண்டு மேலதிக ஆசனங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், வடக்கு மாகாண சபையின் இன்று நிலவும் சூழல் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் கேள்விக்கு இலக்காக்கி உள்ளமையை மறுத்துவிட முடியாது.

கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில் மூன்று மாவட்டங்களிலும் 65.67 வீதமானோரே வாக்களித்து இருந்தனர். இந்தத் தொகை இம்முறை 70 விதம்வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் 50.83 வீத வாக்குகளையும், திருமலை மாவட்டத்தில் 29.08 வீத வாக்குகளையும். அம்பாறையில் 16.28 வீத வாக்குகளையும் பெற்றிருந்தது. இயல்பான சூழலில் தேர்தல் என்பதை விட, 2004 ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்று கூட்டமைப்பு அபரிமிதமான அதிகரிப்புடன் வாக்குகளைப் பெறும் என்ற சூழல் இன்று இல்லை. எனினும், கடந்தமுறை அதிக வாக்குகளைப் பெற்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி தற்போது பிளவுபட்டு உள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.

37 ஆசனங்களைக் கொண்ட மாகாண சபையில் 19 ஆசனங்களைப் பெற்றால் மாத்திரமே ஒரு கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியும். முஸ்லிம் கட்சியுடனோ அன்றி ஏதாவதொரு தேசியக் கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். ஆனால், அத்தகைய ஒரு கூட்டணிக்கான வாய்ப்பு கூட்டமைப்பைப் பொறுத்தவரை தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தலுக்குப் பிந்திய சூழலில் முஸ்லிம்களை ஒதுக்கி விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்பது ஒரு சாராரின் கருத்தாக உள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ள போதிலும், இத்தகைய உத்தேசக் கூட்டு என்பது வெறுமனே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு உத்தியாகவே கருதப்படும் அபாயம் உள்ளது. அதேவேளை, தமிழ்த் தரப்பின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்களை தமிழ் மக்களிடம் இருந்து மேலும் விலகிச் செல்லவே இது உதவும்.

எனவே, அடுத்து அமையப் போகும் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்த ஒன்றாகவே அமையலாம் என ஊகிக்கலாம். இத்தகைய நிலையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

ஆனால், முதலமைச்சர் நாற்காலியை முஸ்லிம் காங்கிரசோ அல்லது ஏனைய கட்சிகள் மூலம் தெரிவு செய்யப்படும் முஸ்லிம்களோ விட்டுக் கொடுப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரசும், எனைய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய முஸ்லிம் பிரதிநிதிகளும் நினைத்தால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு அவர்களால் முடியக் கூடும்.

இன்றைய நிலையில் மத்தியில் தேசிய அரசாங்கம் உள்ள நிலையில் இலங்கையின் இருபெரும் அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் போட்டிக் கட்சிகளாக இல்லாத நிலை உள்ளது. எனவே, முஸ்லிம் காங்கிரஸ் இத்தகைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பை மறுதலிக்க முடியாது.

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டால் தனித்தே மாகாண சபையைக் கைப்பற்றி விடலாம் என ஒருசிலர் கருதுகின்றனர். விகிதாசாரத் தேர்தல் முறைமையில் இது பெரும்பாலும் சாத்தியமற்றது. மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் ஒரே கட்சிக்கு வாக்களித்து, அக்கட்சி அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 40 வீதத்திற்கு மேல் பெற்றாலேயே இது சாத்தியமாகும். அத்தகைய ஒரு நிலையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

மறுபுறம், தமிழ்க் கட்சிகளிடையே இணைப்பு என்பதுவும் சாத்தியமில்லை. மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் நேரடியாகப் பங்கேற்காது என எதிர்பார்க்கப் படுகின்றது. மாறாக, சுயேட்சைக் குழுவாகக் களமிறங்கினாலும் கூட தனது பரம வைரியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே செயற்படும் என நம்பலாம். பிள்ளையான் மற்றும் கருணா தலைமையிலான உதிரிக் கட்சிகளுடன் கை கோர்ப்பது என்பது கூட்டமைப்பின் வாக்குகளை அதிகரிக்க எந்த வகையிலும் உதவாது. மாறாக அத்தகைய ஒரு செயல் கூட்டமைப்பின் வாக்குகளைக் குறைக்கவே உதவும். அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்களோடு கை கோர்ப்பது என்பது – தேர்தல் நேரங்களில் தமிழ்த் தேசியம் பேசும் – கூட்டமைப்பைப் பொறுத்தவரை தார்மீக அடிப்படையிலும் ஒத்துவராத ஒரு விடயமே.

எனவே, தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட கட்சிகள் இம்முறையும் அதே அணிகளிலேயே போட்டியிடும் என எதிர்பார்க்கலாம். அதன் பின்னான சூழ்நிலையில் இன்று இருப்பதைப் போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

எனினும், முஸ்லிம் முதலமைச்சர் என்ற அடிப்படையில் – தமிழ் முஸ்லிம் ஐக்கியம் என்பதைத் தள்ளி வைத்துவிட்டு – முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்குமானால் தேசிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைக்க முன்வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம். எனவே, அடுத்து என்ன நடக்கும் என்பதை தேர்தல் அறிவிக்கப்படும் வரை சரியாக எதிர்வு கூறுதல் கடினமே.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*