உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப ஜெனீவா முன்றலில் அணிதிரள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

பிறப்பு : - இறப்பு :

சமாதானம் பேசியே எம்மை கொன்றொழித்த சர்வதேசத்திடமே எமக்கான நீதியையும் பெற்றாகவேண்டிய கையறுநிலையின் வெளிப்பாடாக போராட்ட மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனீவா முன்றலில் உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப அணிதிரளுமாறு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றோம்.

எல்லாமே முடிந்துவிட்டதாக எண்ணியவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி, ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குள்ளாகவே எமக்கான தீர்வு இருப்பதான பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளது தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டங்கள்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா மன்றம் வரை எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வலியுறுத்தும் இடங்களே தவிர தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் இடமில்லை என்பதை நெற்றிப்பொட்டில் அறைவதாகவே கேப்பாபிலவு போராட்டம் அமைந்துள்ளது.

2009 மே-18 இற்குப் பின்னரான காலத்தில் ஜெனீவா முன்றலில் நாம் முன்னெடுத்த போராட்டங்களுக்கும் தற்போதைய போராட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டின் மையப் புள்ளியே கேப்பாபிலவுப் போராட்டம். ‘நல்லாட்சி’ அரசின் அலங்கார அறிவிப்புக்களையும், இணக்க அரசியலின் பெயரிலான அடிபணிவு அரசியலின் அலங்கோலத்தையும் ஒருசேர அம்பலப்படுத்தியுள்ளது கேப்பாபிலவுப் போராட்டம் உள்ளிட்ட தாயகத்தில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொலை அச்சுறுத்தலுக்குள் குரல்வளை நெரிக்கப்பட்டவர்களாக எமது தாயக மக்கள் இருந்த போது அவர்களின் குரலாகவே இதுவரை நாம் உலக அரங்கில் போராடிவந்தோம். ஆனால் இன்று தாயக மக்கள் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டக்களம் பிரவேசித்து எழுச்சி கொண்டு நிற்கின்றனர். பசியோடு இருக்கும் பார்த்தீபனின் நினைவுத்தூபி முன் இன்று எரியும் விளக்கே மக்கள் எழுச்சியின் அறிகுறியாக உள்ளது.

தாயகத்தில் மக்கள் போராட்டங்கள் மூலம் சிங்கள அரசின் கபடத்தனத்தினையும் தமிழ்த் தலைமைகளின் கையாலாகத்தனத்தினையும் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அதனை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வரலாற்றுக் கடமை புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடமே உள்ளது.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி செப்டம்பர் மாதம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவிருக்கும் பேரணியில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்று விடுதலையை விரைவுபடுத்த களம்காணுமாறு உரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

தீர்வு அல்லது மரணம் என்ற உறுதியின் உச்சநிலைக்கு தாயக மக்களே வந்துள்ள நிலையில் நாம் ஓய்ந்து போகலாமா…? இத்தனை நாள் போராடி என்ன கண்டோம் என்ற விரக்தி நிலை போக்கி விரைந்து வாருங்கள்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் என்ற தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வண்ணம் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் வாரீர்!

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத் தமிழர் மாக்களவை!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit