தபாலில் தாய் இதயம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மகனே …….
முதியோர் இல்லத்து முற்றத்திலிருந்து,
முத்தே நானுனக்கு எழுதும் கடிதம்.
கருவில் நீ வந்த கணத்தில் இருந்து ,
கருமணியாய் போற்றிய பொக்கிஷ்ப் பொழுதுகள்.

வாயிற்றில் நீ உதைக்க கல் சுமந்தேன் நானும்
உதைக்கும் கணந்தோறும் கல் அழுத்திய காயம் மறந்தேன்.
பூமி வரும் நாளில் வேதனையை நான் ரசித்தேன்
மார்போடு உனையணைத்து மனம்வேகும் காயம் மறந்தேன்.
பள்ளி வாசல்வரை உன்னை சுமந்து சென்றேன்.

படுத்துறங்கும் உனதழகை என் கண்ணில் படம் வரைந்தேன்.
பேசும் மொழிகளை இதயத்தில் பதிவிறக்கம் செய்தேன்
பேசாத மொழிகளையும் நன் புரிந்து கொண்டேன்.
சாதம் வடித்து வைத்து வாசலில் காத்திருந்தேன்-நீ
சாப்பிட்ட தட்டினை என் முகம் பார்த்து பசி மறந்தேன்.

வாடிய வடிவழகைப் பார்த்தால்,வாடிடும் என் உள்ளம்
வாட மகனே என்று மடிமீது உறங்க வைப்பேன்.
சின்னவன் நீயென்று நான் கருதும் நேரம்,
சிறுமீசை அரும்ப நாணத்தோடு நெளிந்தாய்.
கூடாத கூட்டத்தோடு கூடிவிட்டாயென்று
கும்பிட்டு அழுதேனே சாமியின் பாதத்தில்.

மகனுக்கு மகன் வந்தான், என் மடி விளையாட
மண்தொட்ட கையாலே மகனை தொடாதே
“மனைதனை விட்டு புறப்படு கிழவி” என்று நீயுரைத்தாய்.
“மகனே நலமா …..?”கேட்கும் தூரம் நானில்லை.
“வீட்டுக்கு நேரத்துக்கு வாறியா….?” தெரியவில்லை
“பெட்டகத்தில் அரிசிமணியிருக்கா …?” தெரியவில்லை.
“மகனே மார்போடு இருந்த காயம் மாறிவிட்டதோ…?”
மருமகள் பேசுகிறாளா….?” உன் தாய்க்கு சொல்லிவிடு.

இருநூறு ரூபாயிருக்கு வந்து வாங்கிச்செல் -இங்கு
இரவுக்கு இறைச்சியாம் வா தம்பி சாப்பிட,ஒருபிடி தாறன்.
காலையில் கடும் குளிரப்பா, போர்த்துப்படுத்திரு.
காகம் கரையுது கண்ட கனவு சரியில்லை,நலத்தோடு நீயிரு.

இல்லத்தில் நித்தம் குளிக்கிறேன் புதுச்சேலை கட்டுறன்
இனிப் பேரனை கூட்டிவா, முந்தானை முடிச்சில் இனிப்பிருக்கு
என் மடியில் பேரனோடு நீயும் உறங்க தாலட்டு பாடவேண்டும்-இங்கு
என் கதை சொல்ல தொலைபேசி இருக்கு
பேசத்தெரியவில்லை, கை உதறுதடா.

பிழையில்லை உன்னில் நீயென் குழந்தையடா
பிற்காலம் வரும் அம்மாவை பாரென்று சொல்லித்தர மறந்தேன்.
நீயென்ன செய்வாயப்பா உன்காலம் சரியில்லை,
நிறுத்துகிறேன் மடலை.சோற்றுக்கு மணியடிக்கின்றது.
என்றும் உன் அம்மா
பவளம்

சிறிலேக்கா பேரின்பகுமார்.
(அரச ஊழியர்களுக்கிடை யிலான ஆக்கத்திறன் போட்டி- 2014
தேசியமட்டத்தில் கவிதை ஆக்கம் முதலாம் இடம்)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*