புலியாக வந்து சிங்கமாகச் சென்றார்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கென்யாவுக்கு பயணப்பட்ட 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கி விட்டனர் எனத் தெரிந்த பின் என்னிடம் வந்தார்; அடுத்ததாக நான் என்ன செய்ய வேண்டும் என்றார்; அதன் பின் நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம்; அதையடுத்து நடந்தவை எல்லாமே வரலாறு’ என்கிறார் தோனியின் முதல் பயிற்சியாளரான சஞ்சல் பட்டாச்சாரியா.

அன்று தோனியின் இடத்தை ஆக்கிரமித்திருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இன்று தினேஷ் கார்த்திக்கின் இடம்…..? இதுதான் காலச் சக்கரத்தின் சுழற்சி. மீண்டும் இதோ தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல விக்கெட் கீப்பர்களுக்கு வழி விடும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டார் தோனி. அநேகமாக, உலகக் கோப்பைக்குப் பின் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போடுவார் என்பது பலரது கணிப்பு.

தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியானதும் “கிரிக்இன்ஃபோ’ இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல, “ஓய்வு அறிவிப்பு குறித்து முறையான பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை; கடைசி டெஸ்ட் என உணர்ச்சி வசப்படவில்லை; தோளில் தூக்கி வைத்து சக வீரர்கள் மைதானத்தை வலம் வரவில்லை. ஏன்… “கார்டு ஆஃப் ஹானர்’ மரியாதை கூட இல்லை’ என, வழக்கமாக ஒரு வீரர் ஓய்வு பெறும்போது நடைபெறும் சம்பிரதாயங்கள் எதுவுமின்றி பிசிசிஐ மூலமாக அறிவிப்பை வெளியிட வைத்து விட்டார், டெஸ்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை ஈட்டித் தந்த தோனி.

சிவப்பு கம்பள வரவேற்புக்கு முன்னதாக கரடு முரடான பாதைகளைக் கடந்து வந்தவர் என்பதாலோ? இல்லை, உச்சத்தில் இருக்கும்போது போற்றும் உலகம், ஒரு நாள் கீழே தள்ளும் என்பதைப் புரிந்து வைத்திருந்தார் என்பதாலோ, ஓய்வு குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், இந்த முடிவு திடுதிப்பென எடுக்கப்பட்டது அல்ல என்பது மட்டும் தெளிவு. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என முன்பே அவர் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும், ஒரு தொடரின் பாதியில் ஓய்வு பெற்றது, வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது.

தற்போதைய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் சிறந்த வீரர் யார் எனக் கேட்டதும், அப்போது அணியில் இல்லாத கெளதம் கம்பீரின் பெயரைச் சொல்லி, தென் ஆப்பிரிக்க பத்திரிகையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய தோனியா, ஓய்வு குறித்து நொடியில் முடிவெடுத்திருப்பார். வாய்ப்பே இல்லை. பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் சொன்னதுபோல இது அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல.

சமீபகாலமாக டெஸ்டில் பெரிதாக சாதிக்கவில்லை என்பதும், தனது தலைமையில் இந்திய அணி அன்னிய மண்ணில் அடி மேல் அடி வாங்குகிறது என்பதையும், விராட் கோலி கேப்டன் பதவிக்கு தயாராகி வருவதையும் ஒரு வகையில் கூட்டிக் கழித்து பார்த்து, தோனி இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

ஆஸ்திரேலிய பயணத்துக்கு முன்னதாக தோனி ரொம்பவே குழம்பி இருப்பார் என்றே தெரிகிறது. ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சில கேள்விகளும், தோனியை ரொம்பவே தர்மசங்கடப் படுத்தி விட்டதாகத் தெரிவிக்கிறார் அவரது பயிற்சியாளர் பட்டாச்சாரியா.

ஆஸ்திரேலியாவில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. குறிப்பாக, விராட் கோலி – இந்திய அணியின் இயக்குநராக இருக்கும் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு இடையிலான நெருக்கமும், தோனி இந்த முடிவை எடுக்க ஒரு காரணம் என்ற தகவல் பரவுகிறது. அடுத்த ஆறு மாதத்துக்கு டெஸ்ட் போட்டிகள் இல்லை. அடுத்த டெஸ்ட் தொடரும் கூட இந்தியாவில்தான் நடைபெறவுள்ளது. இந்தியாவில் வெற்றி என்பது நமக்கு சிரமம் அல்ல. ரசிகர்களும் கூட, அன்னிய மண் தோல்வியை மறந்து வெற்றியைக் கொண்டாட தயாராகி இருப்பர் என்பதால், தோனி வெற்றியுடன் விடை பெற்றிருக்கலாம். ஆனால், இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல், இதுதான் விடைபெறும் நேரம் என “பொசுக்கென’ முடிவெடுத்து விட்டார்.

அதனால்தான் தோனியின் ஓய்வு அறிவிப்புக்குப் பின் முகநூலில் ஒருவர், “புலியாக வந்து சிங்கமாக சென்றார் தோனி’ என தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதாவது, சூழலைப் புரிந்து கொண்டு தாமாகவே விலகி விட்டார் என்பது அவரது வாதம். கூடவே, சமூக இணையதளங்களில் பரபரப்பான இன்னொரு விவாதம் நடந்தது. “தோனி நினைத்திருந்தால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இன்னும் கொஞ்ச காலம் டெஸ்ட் ஆடலாம். ஆனால், விராட் கோலியின் தலைமையில் ஆட விரும்பாமல்தான் ஒரேயடியாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்’ என்பதே அதன் சுருக்கம். இது உண்மையா, பொய்யா என்பது தோனிக்கே வெளிச்சம்.

அதோடு, “இனிமேல் விராட் கோலிக்குத்தான் சவால் காத்திருக்கிறது. கோலி தோற்கும் ஒவ்வொரு போட்டியின்போதும், தோனிடா…. என தோனி ரசிகர்கள் பொங்குவர்’ என்ற இன்னொரு பதிவு சுட்டுரையில் கண்ணில் பட்டது. உண்மை அது.

அனில் கும்ப்ளேவிடம் இருந்து தோனி கேப்டன் பொறுப்பேற்றபோது இருந்த இந்திய அணி வேறு, தோனியிடம் இருந்து கோலி பொறுப்பேற்கும்போது இருக்கும் இந்திய அணி வேறு. சச்சின், சேவாக், திராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், கம்பீர், ஹர்பஜன், ஜாகீர் கான் என தோனிக்கு கிடைத்தது ஒரு அட்டகாசமான அணி. இஷாந்த் ஷர்மாவைத் துணைக் கேப்டனாக வைத்துக் கொண்டு விராட் கோலி இனி என்ன பாடு படப் போகிறாரோ?

என்னதான், முதல் டெஸ்டில் விராட் கோலி விறுவிறுப்புடன் செயல்பட்டாலும் சீனியர்களை மதிப்பது, களத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டாதது, எதிரணி வீரர்களிடம் முறைக்காதது, வெற்றியை ஆர்ப்பாட்டமின்றி கடப்பது என்பது உள்பட தோனியிடம் இருந்து கோலி கற்க வேண்டிய விஷயங்கள் பல.

இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக் கேப்டன் எனப் பெயரெடுத்த தோனியே ஆரம்பத்தில் கேப்டன் பொறுப்பேற்றபோது தடுமாறினார். ஒருமுறை…. கில்கிறிஸ்ட் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். விக்கெட் வீழ்த்த முயற்சிக்கும் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அப்போது கங்குலி தோனியிடம் வந்து ஏதோ யோசனை சொல்கிறார். “தேர்ட் மேன்’ திசையில் தேவையில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த ஃபீல்டரை, “லாங் ஆன்’ திசைக்கு அனுப்புகிறார் தோனி. அடுத்த பந்தில் கில்கிறிஸ்ட் “லாங் ஆன்’ திசையில் இருந்தவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். இப்படி, தோனிக்கு கங்குலி போல விராட் கோலிக்கு அறிவுரை சொல்ல, தற்போதைய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர்கள் யாரும் இல்லை. இது கோலி முன் உள்ள மிகப் பெரிய சவால்.

தோனியின் சகாக்களை ஓரங்கட்டும் வேலையை கோலி ஏற்கெனவே தொடங்கி விட்டார். முதல் டெஸ்டிலேயே அஸ்வினை வெளியே உட்கார வைத்ததை உற்றுக் கவனித்தால் இதன் அர்த்தம் விளங்கும். பிற கேப்டன்களைப் போலவே கோலியும் தனக்கேற்ப ஒரு அணியை “செட்’ செய்வார். அந்த அணி “செட்டில்’ ஆக எத்தனை நாளாகுமோ தெரியாது.

ஆக, இந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஓய்வை நிலநடுக்கத்துடன் ஒப்பிட்டால், அதைத் தொடர்ந்து ஒரு சுனாமி உருவாகி இருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit