சுவிற்சர்லாந்தில் குருந்தமரத்தடியில் ஞானலிங்கேச்சுரர்!

பிறப்பு : - இறப்பு :

திருவள்ளுவர் ஆண்டு 2048 பொற்றடை மடங்கற்திங்கள் 1ம் நாள் முதல் 13ம் நாள் வரை (17. 08. 2017 முதல் 29. 08. 2017 வரை) அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பொற்றடை ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா மிகு சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

தெய்வத்தமிழில் வண்டமிழ்ச் சடங்குகள் ஆற்றி எம்பெருமான் இன்பத்திருச்செவிகள் குளிர நடைபெறும் பெருவிழாவில் சுவிற்சர்லாந்துவாழ் அடியார்கள் நாளும் பங்கெடுத்து பக்தி வழிபாட்டில் நிறைந்து வருகிறார்கள்.

இறைவன் எனப்படுபவன் எம்முள் இறைந்துகிடப்பவன், உள்ளேயும் வெளியேயும் நிறைந்தவன் எனப்பொருள்படும். காலத்தை ஆளும் இறைவன் கண்ணுக்குத் தெரியாத அரசனாவான். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இறைவன் பெயரால் நடாத்தப்படும் சடங்குகளும் விழாக்களும் மனிதனின் ஒற்றுமை கூட்டவும், மகிழ்ச்சியான சூழலை உருவாக்கவும் எம்முன்னோர்களால் ஏற்படுத்திய வழமைகள் ஆகும். மேலும் தீவினை ஒழித்து நல்வினை விதைத்து எம்மை மேன்படுத்தும் சடங்குகள் உள்ளத்திலும் புறத்திலும் அன்பை வளர்க்கும்.

இவ்வகையில் சைவமும் தமிழும் இளந்தமிழச் சமூகத்தின் நினைவில் நிறுத்த, திருவிழாவில் பல சிறப்பு நிகழ்வுகள் ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்று வருகிறது. 20. 08. 2017 நடைபெற்ற குருந்த மரத்தடியில் சிவபெருமான் அருட்காட்சி மிகுந்த அழகுடன் ஒப்பனை செய்யப்பட்டு நடந்தேறியது.

விழாநல்கை (உபயம்) வழகும் திருநிறை. மதியழகன் குடும்பத்தின் ஏற்பாட்டில் ஞானலிங்கேச்சுரத்தில் முதன்முறையாக 20 தவில், நாதசுரக்கலைஞர்களின் இசை ஒன்றாக ஒலிக்க ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் திருநடை ஆடிவந்த அருட்காட்சி அடியார்கள் உள்த்தை மிகு கவர்ந்தாதாக விளங்கிற்று.

அனைத்தையும் ஆளும் இறைவனை இறைஞ்சி எமக்கும் எம் இளஞ்சந்ததியினர்க்கும் நாம் சேர்த்துக்கொடுக்கும் கொடைக்கு திருவிழா காரணமாகிறது.

அவ்வகையில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் அருளாட்சி புரியும் ஞானலிங்கேச்சுரத்தில் உலகில் தமிழ்மக்கள் கல்வி, செல்வம், வீரம் பெற்று நிறைந்துவாழ சிறப்பு வழிபாடாக இத்திருவிழா அமைவதாக ஞானலிங்கேச்சுரத்தின் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் தனது கருத்தினைப் பதிந்திருந்தார்.

20 மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றாக இசை ஆர்க்க அருள்புரிந்த பேரரசி ஞானாம்பிகை இணையடி தொழுது திருவிழாக் காலத்தில் பக்தி இசையும் ஈழத்து தமிழ் உணர்வுப் பாடல்கள் மட்டும் ஒலிக்கும் வகையில் இசையமைய ஞானலிங்கேச்சுரத்தின் அருட்சுனையர் திருநிறை. திருச்செல்வம் முரளிதரன் ஐயா அவர்கள் வேண்டுகோள் வைத்து, இன்று கலைஞர்கள் ஒலிக்கச் செய்யும் இசைநாதத்தின் அதிர்வு, எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் ஞானத்தை அளிக்கும் சுரமாக என்றும் இருக்கும் என்றும், எமது தமிழ்ச் சமூகம் அனைத்துச் செல்வமும் பெற்று சிறந்து வாழ்ந்து, எம்முன்னோர்கள் கண்ட கனவுகளையும் நினைவாக்கும் திருநாளை ஞானலிங்கேச்சுரர் அருள்வார் என்றும் நல்லாசி வழங்கி நிறைந்தார்.

இசைநல்கிய கலைஞர்கள் ஞானலிங்கேச்சுரத்து அருட்சுனையர்களால் மதிப்பளிக்கப்பட்டனர். சுவிற்சர்லாந்தில் நீண்டகாலம் மங்கள இசை நல்கும் திருநிறை. செல்வம் அவர்களின் மகன், வளர்ந்து வரும் இளம் இசைக்கலைஞர், இவர்போல் பலர் உருவாக வேண்டும் என ஞானலிங்கேச்சுரத்த்தின் அருட்சுனையர்கள் நல்லாசி வழங்கினர்.

பல் ஒளிவண்ணத்தில் அழகொப்பனையும், சிற்றுண்டிச்சாலையும், அறுசுவை அருளமுதும் நிறைந்து நிரம்ப, ஞானலிங்கேச்சுரம் பெருவிழாக் காட்சியில் திளைத்து நிற்கிறது.

இன்பமே சூழக்க எல்லோரும் வாழ்க என நிறைந்த வழிபாட்டின் மகுடன் சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் முழங்கி அடியார்கள் உள்ளம் நிறைந்து இன்றைய திருவிழா நிறைந்தது. எதிர்வரும் 26. 08. 2017 பெருமான் திருத்தேர் நடைபெறவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit