யாழ் நிலவரம் – அரசியல்வாதிகளின் வகிபாகம் குறைகிறதா? சண் தவராஜா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ila

கிழக்கு ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகளின் வகிபாகம் தொடர்;ச்சியாகக் கேள்விக்கு இலக்காகி வரும் நிலையில், அரச நிர்வாகிகள் ஒருசிலர் மக்களின் பிரச்சனைகளை நியாயமாக அணுகுபவர்களாக மாறி வருகின்றமையை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது. ஊழல் மலிந்துவிட்ட இத்தகைய நாடுகளில், அரசியல்வாதிகளும், அரச இயந்திரங்களும் கூட ஊழல்மயப் பட்டுவிட்ட நிலையில் நிவாரணம் வேண்டும் மக்கள் வேறு நபர்களை நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய வேளைகளில் அத்தி பூத்தாற் போன்று ஒருசில அதிகாரிகள் மக்கள் சேவகர்களாக மாறிச் செயற்படுவதைப் பார்க்க முடிகின்றது. தாய்த் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் அவர்கள் ஊழலுக்கு எதிராகப் போராடி வருவது மட்டுமன்றி சாமான்ய மக்களின் குரலாகவும் விளங்கி வருகின்றார்.

இந்தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஊழலை மையப்படுத்தி காந்தீயவாதியான அன்னா ஹஸாரே மேற்கொண்ட போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வு பலரின் மனச்சாட்சியையும் தட்டி எழுப்பியதன் விளைவே ஆம் ஆத்மி கட்சியின் தோற்றமும், டில்லி மாநிலத் தேர்தலில் உலகமே ஆச்சரியப் படத்தக்க விதத்தில் வெற்றி பெற்று அக் கட்சி ஆட்சியைப் பிடித்தமையும். அவ்வாறு வெற்றி பெற்ற கட்சிகூட இன்று ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு இலக்காகி வருகின்றமை இந்தியாவில் புரையோடிப் போயுள்ள ஊழலை ஒழிப்பதென்பது சாமான்ய விடயமல்ல என்ற யதார்த்தத்தை உணர்த்துவதாக உள்ளது.

இத்தகைய உதாரணம் ஈழத்தின் சமகாலச் சூழலுக்குப் பொருத்தமான ஒன்றல்ல என்ற போதிலும், அரசியல் தலைவர்களின் வெற்றிடம் இங்கேயும் உணரப் படுகின்றது என்பதை மறுக்க முடியாது. தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்கு உள்ளேயும், பெரும்பான்மைக் கட்சிகளோடும் அரசியல் அடிப்படையில் மோதிக் கொண்டு இருக்கையில் மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் கவனிக்கப் படாமல் புறந் தள்ளப்பட்டு வருவதை, தினம் தினம் தன்னெழுச்சியாக இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்கள் ஊடாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.

நிலம் மீட்பு, மீளக் குடியேற்றம், வேலை வாய்ப்பு போன்ற விடயங்களோடு சட்டம், ஒழுங்குப் பிரச்சனையும் மக்களின் கரிசனைக்கு உரிய விடயங்களாக இருந்து வருகின்றன. குறிப்பாக யாழ் குடாநாட்டில் செயற்பட்டுவரும் – திரைப்படப் பாணியிலான – வாள்வெட்டுக் குழுக்கள் மக்களின் கரிசனைக்கு உரிய விடயமாக இருந்த போதிலும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, அரச பங்காளிகளாக உள்ள ஏனைய கட்சி அரசியல்வாதிகளோ இவ் விடயத்தில் தீவிர கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை.

இதனால், மேல் நீதிமன்ற நீதிபதி போன்ற அரச அதிகாரிகளே இது விடயத்தில் குரல் கொடுக்கவும், செயற்படவும் வேண்டி இருக்கின்றது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடிய ஒரு இனம், அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் அக்கறை செலுத்தாமல் – எந்த அரசியல் அதிகாரத்தை எதிர்த்து போராடினார்களோ, அந்த அதிகாரத்தின் பிரதிநிதிகள் அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு விரும்பியோ விரும்பாமலோ இடந்தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதை எவ்வாறு புரிந்து கொள்வது?

இன்று நீதிபதி இளஞ்செழியன் தமிழ் மக்களின் கதாநாயகனாகக் கொண்டாடப் படுகின்றார் என்றால் அதற்கு வழி சமைத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே. அவரும் கூட அரசியல்வாதிகளின் பாணியிலேயே தனது கருத்துக்களைக் கூறி வருவதுடன், செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

யாழ் குடாநாடு – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை உள்ளிட்ட – பல்வேறு குற்றச் செயல்களைக் கண்டுவரும் நிலையில் நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் செயற்பாடுகள் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவையே. தனக்குத் தெரிந்த வழியில் குற்றச் செயல்களை முடிந்த அளவில் கட்டுப் படுத்துவதற்கான முயற்சிகளை அவர் சட்டத்தின் துணை கொண்டு மேற்கொண்டு வருகின்றார்.

இத்தகைய பின்னணியிலேயே அவர் மீதான கொலை முயற்சி இடம்பெற்றிருக்கின்றது. இந்தக் கொலைக்கான பின்னணியில் யார் இருந்திருக்கக் கூடும் என்பது பற்றிய அலசல்கள் ஊடகங்களில் ஏலவே அளவுக்கு அதிகமாக இடம்பெற்று விட்டன. எனவே அதைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை.

ஆனால், அனைத்து விடயங்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது, இந்தக் கொலை முயற்சி நீதிபதி இளஞ்செழியன் அவர்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டது என்பதுவும், அது முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டது என்பதையும் சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்துகொள்ள முடிகின்றது. சம்பவம் நடைபெற்ற இடம், நடைபெற்ற விதம், சந்தேக நபர் தப்பியோடிய விதம், அவர் தானாகச் சரணடைந்த போதில் வழங்கிய வாக்குமூலம் என்பவை சம்பவத்தின் பின்னணியில் சாமார்த்தியசாலிகள் உள்ளார்கள் என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

இளஞ்செழியன் அவர்களின் கடுமையான செயற்பாடுகளை விரும்பாதவர்கள், யாழ் குடாநாட்டில் அமைதியான சூழல் ஒன்று நிலவுவதை விரும்பாதவர்கள் யார் யார் எனப் பட்டியிலிட்டுப் பார்க்கும் போது அரச படைகளும், அவர்களது ஆதரவு பெற்ற குழுக்களும், துனைப் படையினருமே குற்றவாளிப் பட்டியலில் அதிகம் பொருந்துபவர்களாக இருந்து வருகின்றனர். அது மாத்திரமன்றி, கூலிக்குக் கொலை செய்யக் கூடிய நபர்கள் அல்லது குழுக்கள் குடாநாட்டில் செயற்படுகின்றன, அல்லது செயற்படத் தொடங்கியுள்ளன என்ற அபாயகரமான உண்மையும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

தாய்த் தமிழகத்தோடு ஒப்பிடும் போது எத்தனையோ விடயங்களில் முன்னேற்றகரமான பண்பாடுகளை, பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களாக ஈழத் தமிழர்கள் இருந்து வருகின்றோம். அதில் ஒன்று வன்முறை கலக்காத தேர்தல் அரசியல். ஆனால், நடப்பு நிகழ்வுகளைப் பாரக்கும் போது ஆயுதக் குழுக்களின் எழுச்சி என்பது தமிழ்நாட்டு நிலைக்கு நமது தேர்தல் அரசியலும் சென்று விடுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிப்பதாக இருக்கிறது.

அரசியல்வாதிகளின் வகிபாகம் குறைந்து, அரச அதிகாரிகளின் வகிபாகம் சமூகத்தில் உயர்வடைவது நல்லாட்சிக்கான ஒரு காட்டியாகக் கொள்ளப்படக் கூடியதே. ஆனால், அரசியல் அதிகாரத்திற்காகப் போராடிய ஒரு இனத்தின் சமூகச் சூழலில் அது ஒருவகை இழப்பே. சமூகத்தில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும், சட்டம் ஒழுங்கு பேணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அரசியல்வாதிகளின் வகிபாகத்தை மீறிய ஒரு செயற்பாடாக அது அமைவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

இவ்வாறு கூறுவதன் மூலம் அரச அதிகாரிகள் தட்டிப் பணிய வைக்கப்பட வேண்டும் என்பதல்ல. மாறாக, அரச அதிகாரிகளை மேவியவர்களாக, அரச அதிகாரிகளின் செயற்பாடுகளைத் தட்டிக் கொடுத்து நடாத்தி வைப்பவர்களாக அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். இது விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் கவனஞ் செலுத்த வேண்டும். சாமான்ய மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் கவனஞ் செலுத்துவதை விடவும் ஆயிரம் பணிகள் எங்களுக்கு இருக்கின்றன எனக் கருதி அரசியல்வாதிகள் தொடர்ந்தும் செயற்படுவார்களேயானால் மக்கள் மனதில் இருந்து வெகு விரைவில் அவர்கள் காணாமற் போவார்கள் என்பதே உண்மை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit